- இரா.சரவணன்
‘ஈழத்து சோகம்தான் காவு வாங்கிவிட்டது! ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது! ‘கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றிவிட்டது!’ – தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்!
தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். ‘கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட… தயாநிதி மாறன் தகிக்க… இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. ‘காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, ‘அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி.
குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். ‘ஜெயிப்போமா… தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்!
சரி, கூட்டணிதான் அமைந்துவிட்டது. இனியாவது களத்தில் கனகச்சிதமாகச் செயல்படலாம் என கருணாநிதி நினைக்க… அதற்கும் செக் வைத்தார் ராஜாத்தி அம்மாள்.
”செல்வி, துர்கா, கயல்விழி எல்லாம் பிரசாரத்துக்குப் போகும்போது, கனிமொழி மட்டும் போகக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பினார். ‘கனிமொழி பிரசாரத்துக்கு வந்தால், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் ஆகிவிடும்!’ என அழகிரி தொடங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அபாயம் பாடினார்கள். ஆனாலும், கனிமொழியின் திடீர் பிரசாரப் பயணத் திட்டம் அறிவாலயத்தால் அறிவிக்கப்பட்டது. ‘கனிமொழி எங்கே வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். ஆனால், மதுரைப் பக்கம் கால் வைக்கக் கூடாது. இதையும் மீறி வந்தால், தென் மாவட்டத் தோல்விக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’ என முழங்கினார் அழகிரி. அந்த வார்த்தைகளுக்கு ஒரு வாரம் மட்டுமே மதிப்பு இருந்தது. கருணாநிதியின் மதுரைப் பிரசாரத்தில் கனிமொழி நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘வடிவேலுவை பிரசாரத்துக்கு இழுத்து வந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மறக்கடிக்க, நான் போராடிக்கிட்டு இருக்கேன். இவரோ, தன் மகளை முன்னிறுத்துறதா நினைச்சு, ஊரெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஞாபகப்படுத்துறார்.
கட்சிக்காரங்க யாரும் இனி என் பேச்சைக் கேட்க வேண்டாம். தலைமையோட வழியிலேயே நீங்களும் இஷ்டத்துக்கு செயல்படுங்க!’ என ஆவேசம் காட்டிய அழகிரி, அத்தோடு அமைதியானார். திருமங்கலம் பாணியில் தென் மாவட்டங்களில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்துவிடலாம் என நினைத்த அழகிரி, கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கடுப்பாகி, வீட்டோடு முடங்கிப்போனார்.
‘சென்னையில் ஜெயிப்பது சுலபம் அல்ல’ என எண்ணி, சொந்த ஊரான திருவாரூர் பக்கம் ஒதுங்கிய கருணாநிதி, அங்கேயும் குடும்ப அல்லாட்டத்துக்கு ஆளாகிப்போனார். தந்தையின் வெற்றிக்காக தலைமகள் செல்வி திருவாரூரில் வீடு வீடாகப்பிரசாரம் செய்ய… அங்கேயும் போட்டிக்குப் போனார் கனிமொழி. அக்கா ஒரு புறம்… தங்கை ஒரு புறம்… எனப் பிரசாரம் செய்யப் பிடிக்காமல், செல்வி கோபித்தபடி திருவாரூரில் இருந்த சண்முகத்தம்மாள் வீட்டுக்குத் திரும்பினார். அங்கேயும் கனி ஆஜரானதுதான் ஹைலைட்! ஒப்புக்குச்சப்பாக கனியோடு சில வார்த்தைகள் செல்வி பேசினாலும், உள்ளுக்குள் மட்டும் கோபம் ஆறவில்லை. இதற்கிடையில், ‘சென்னையில் பல தொகுதிகள் வீக்’ என உளவுத் துறை நோட் போட, தயாநிதி மாறனை தீவிரப் பிரசாரத்தில் இறக்கலாம் என முடிவு எடுத்தார் கருணாநிதி. அதற்கு எங்கே இருந்து தடை வந்ததோ… கடைசி வரை கட்சியின் உத்தரவுக்குக் காத்திருந்த தயாநிதி, ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுற்றிச் சுழன்று ஒதுங்கிவிட்டார்!
பல மாவட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பு இழந்துபோனதற்கும் கருணாநிதியின் குடும்பப் பூசல்தான் காரணம். ‘ஸ்டாலினை பிரசாரத்துக்கு அழைத்தால், அழகிரி கோபம் ஆவார்’, ‘அழகிரியை அழைத்தால், ஸ்டாலின் கோபப்படுவார்’, ‘கனிமொழியை அழைத்தால், இருவரையும் பகைத்த மாதிரி ஆகிவிடும்!’ என அனுமான பயத்திலேயே கட்சி நிர்வாகிகள் அல்லாடிப்போனார்கள். கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளை யாரிடம் சொல்வது என்று வேட்பாளர்களுக்குப் புரியவில்லை. ‘ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு நிச்சயம் பிரசாரத்துக்கு அழைப்பார்கள்!’ எனக் காத்திருந்தார் அழகிரி. ஆனால், கடைசி வரை அதற்கும் அழைப்பு இல்லை.
இதற்கிடையில் திருவாரூரில் பிரசாரத்தை முடித்த கருணாநிதி, மொத்தக் குடும்ப உறவுகளையும் அங்கே வைத்துக்கொண்டு, ‘கனிமொழிதான் இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது!’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்க… செல்வி சினத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.
மொத்தத்தில் கருணாநிதியின் குடும்ப மோதல் பெரிதாக சந்தி சிரித்தது இந்தத் தேர்தலில்தான். ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக உள்ளடி வேலைகளை நிகழ்த்தியதும், அதைக் கண்டிக்க முடியாமல் கருணாநிதி அல்லாடியதும் கண்கூடான சாட்சி.
தேர்தல் முடிந்து, ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் இருந்து கனிமொழியைக் காப்பாற்ற டெல்லிக்குப் போன ராஜாத்தி, ”என் மகளை உள்ளே வெச்சிட்டு, யார் யாரோ ஆளப் பார்க்குறாங்க. நான் இருக்கும் வரை, அது நடக்காது!” என ஆவேசமாகக் கொந்தளித்தார். கருணாநிதியின் குடும்பக் குடுமிப் பிடி டெல்லியிலும் சிரிப்பாய் சிரித்தது… சிரிக்கிறது!
எகிப்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது அங்கே நிலவிய குடும்ப ஆதிக்கம்தான். அதில் கொஞ்சமும் குறைவு இல்லாத அளவுக்கு கும்மாளமும் குடுமிப் பிடியுமாக நடந்த குடும்ப ஆதிக்கம்தான் தி.மு.க. என்னும் யானையை இந்தத் தேர்தலில் தோல்விச் சேற்றுக்குள் தள்ளியது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக