இந்திய படை விவகாரத்தில் தற்கொலை செய்யப்போவதாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ அச்சுறுத்தினார்'
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்திய அமைதி காக்கும் படையினர் (ஐ.பி.கே.எவ்.) நிறுத்த வேண்டுமென்ற தனது கோரிக்கையை 29.07.1989 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார் என இந்திய முன்னாள் உயர் ஸ்தானிகர் ஒருவர் எழுதிய நூலொன்றில் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேட தூதுவர் பி.டி. தேஷ்முக்கிடம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் விசேட செய்தியொன்றை தெரிவிப்பதற்காக இத்தூதுவர் இலங்கைக்கு வந்திருந்தபோது ஜனாதிபதி பிரேமதாஸ தனது முன்னிலையில் இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் லால் மல்ஹோத்ரா எழுதிய "இலங்கையில் எனது நாட்கள்" (My Days in Sri Lanka) எனும் நூலில் தெரிவித்துள்ளார். 254 பக்கங்கள் கொண்ட இந்நூல் இலங்கையில் விஜித யாப்பா புத்தகசாலையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய அமைதிகாக்கும் படையை ஆக்கிரமிப்பு படையென பிரகடனப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதாகவும் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ;தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரை திருப்பியழைக்கப்போவதாகவும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ எச்சரித்ததுடன் இந்திய உயர் ஸ்தானிகர் மல்ஹோத்ராவும் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லலாம் எனக் கூறியதாக அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சூழ்நிலையில் இலங்கை - இந்திய உறவு மிக கீழ் நிலையில் இருந்ததாகவும் படிப்படியாக இந்தியாவுக்கு எதிரான விரோதப்போக்கு அதிகரித்திருந்தாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தும்படி இந்திய அமைதிகாக்கும் படைக்கு உத்தரவிடுவதற்கு 9 தினங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் மல்ஹோத்ரா கூறியுள்ளார். (சண்டே டைம்ஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக