ஞாயிறு, 15 மே, 2011

Election result மெகா கூட்டணியை சுருட்டி வீசிய பரிதாபம்

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில், மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக்கம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை, தி.மு.க., தோல்விக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகியவை தங்களுக்கு வெற்றி வாய்ப்பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டன.ஆனால், கருத்துக்கணிப்புகளை தோற்கடித்து, அரசியல் பார்வையாளர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அ.தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவியுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பா.ம.க., கட்சிக்கும் மிகப்பெரிய தோல்வியாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

இத்தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள் எதிரொலித்தன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்,  தி.மு.க., கொள்கைபரப்பு செயலாளர் ராஜா கைது செய்யப்பட்டது, தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் இந்த ஊழல் தொடர்பாக விசாரணை உள்ளிட்டவை, தி.மு.க.,வினரின், பி.பி.,யை எகிற வைத்தன. காங்கிரஸ் கட்சியுடன் போராடி பெற்ற கூட்டணி ஒப்பந்தமும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதமும், தி.மு.க., கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே நீருபூத்த நெருப்பாக பகை வளர்ந்து வந்தது.

அதே போல் தமிழகத்தில், 2008 முதல் நடைமுறையில் உள்ள மின்வெட்டு பிரச்சனை, மக்களின் மனநிலையை மாற்றியமைக்க முக்கிய காரணமாக இருந்தது. "தி.மு.க., தோல்வியடைந்தால், அதற்கு மின் தடையே காரணம்' என, முழங்கிய, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இந்த தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. உடல்நிலை காரணமா அல்லது தோல்வியை முன்கூட்டியே கணித்தது காரணமா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

தமிழகத்தின் கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை பொறுத்தவரை ஜவுளித்தொழில் மிக பிரதானமாக இருந்து வருகிறது. மின் தடையால் இப்பகுதியில் தொழில்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களை மட்டுமே, தி.மு.க., கூட்டணி பிடிக்க முடிந்தது.கொங்கு மண்டல பகுதிகளில் வெற்றி பெற, கொங்குநாடு முன்னேற்ற கழகம் கட்சியியை கூட்டணியில் வளைத்து போட்ட, தி.மு.க., வின் ராஜதந்திரம் என கூறியதும், பொய்த்து போனது.

மின் தடையுடன், விலைவாசி உயர்வும், அனைத்து தரப்பு மக்களிடையேயும், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு ரூபாய்க்கு, ஒரு கிலோ அரிசி ரேஷனில் வழங்கப்பட்டாலும், ஒரு கிலோ கத்திரிக்காய், 60 ரூபாய் என்பதை ஏழை எளிய, நடுத்தர மக்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதையும் இத்தேர்தல் காட்டியுள்ளது.இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த உள்ளூர் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்டது, பொதுமக்கள் நிலம் வாங்குவது, விற்பது என்பது உயிரை பணயம் வைக்கும் விவகாரமாக மாறியது. போலீசார் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரால், ஏற்பட்ட பாதிப்பை, பொதுமக்கள் வெளிப்படுத்த உதவியதாகவே இத்தேர்தல் அமைந்துள்ளது.

தி.மு.க., ஆட்சி காலத்தில் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், சில ஆண்டுகளாக தமிழகத்தில் தலைதூக்கியது. குடும்ப தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், வாரிசுகளின் சினிமா தயாரிப்பு, வினியோகம், தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆதிக்க நிலை, சினிமா தொழிலில் உள்ளவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்தது.திருமங்கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்கள் தந்த வெற்றி பார்முலாவை, சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியினர் பின்பற்றினர். தேர்தல் கமிஷனின் கடும் கெடுபிடியை தாண்டியும், வாக்காளர்களுக்கு குறைந்த பட்சம் ஓட்டுக்கு, 200, 500 ரூபாய் வரை வழங்கப்பட்டது. ஒவ்வொரு முக்கிய தலைவர்கள் தொகுதியிலும், பல கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டாலும், அந்த பணம் எல்லாம் ஓட்டாக மாறவில்லை.

காரணம் தி.மு.க.,வினர் நடத்தி வந்த அராஜகத்தின் முன், ஓட்டுக்காக வழக்கப்பட்ட சொற்ப பணம் ஒரு பொருட்டாக மக்களுக்கு தெரியவில்லை.பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்துக்கும், இந்த தேர்தலில், பொதுமக்கள் சாவு மணி அடித்துள்ளனர். இது வருங்காலத்தில் ஆரோக்கிய ஜனநாயகம் வளர முதல்படியாக அமையும்.இத்தேர்தல் முடிவுகளின் படி இலவச திட்டங்களோ, சலுகை விலையில், ரேஷன் பொருட்களோ, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களையோ, ஆட்சியாளர்களிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என, தெரிகிறது. சட்டம் ஒழுங்கு, விலைவாசி ஏற்றமின்மை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, எந்த துறையிலும் குடும்ப ஆதிக்கமின்மை ஆகியவற்றையே புதிய அரசிடமும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சட்டசபை தேர்தல்களில், 1996க்கு பின், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் பிரம்மாண்ட எழுச்சியாக இத்தேர்தல் அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தல், தி.மு.க., தலைமைக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு பெரும்,"சுனாமி' என்பதை மட்டும் யாறும் மறுக்க முடியாது.

-நமது சிறப்பு நிருபர்-
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-05-15 03:34:35 IST Report Abuse
'முதல் கோணல், முற்றிலும் கோணல்' என்பது, சரியாக தான் இருக்கிறது. இவர்கள், கூட்டணி அமைத்த ஆரம்பமே சரியில்லை. இட ஒதுக்கீட்டில், பாமகவுடன் ஆரம்பித்த சண்டை, காங்கிரஸ் கட்சியையும் விட்டு வைக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக கட்சி மாறியவர்களை, ஊக்குவித்தது மிக பெரிய பலவீனம் ஆகும். 
 இளையதலை தலைமுறையினர் பொதுவாகவே உரத்த பிரசாரத்தில் ஈடுபட்டு விடுவார்கள், திமுகவின் நலத்திட்டங்கள் பற்றிய சரியான புரிந்துணர்வு இவர்களுக்கு இல்லாமையும் ஒரு பெரிய காரணமாகும்.
பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்கள். வரலாறு அப்படித்தான் சொல்கிறது. 
இனி அம்மாவின் பேதி குளிசைகளை வரிசையாக வாங்கி உண்ணும் பொது எல்லா நோய்களும் குணமாகும்.

கருத்துகள் இல்லை: