ஞாயிறு, 15 மே, 2011

ரஜனி மீண்டும் மருத்துவமனையில்,போரூர் ராமச்சந்திரா

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

பின்னர் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந் நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இதை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந் நிலையில் நேற்றிரவு ரஜினிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சலும் காலில் வீக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளார் என்றனர்.

கருத்துகள் இல்லை: