வியாழன், 19 மே, 2011

கூகுள் எவ்வளவு வரி கட்டுகிறது?வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?


பணக்காரர்கள் எப்படி பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்? அடிப்படை சம்பளம் வாங்கும் நமக்கே பத்தாயிரம் பிக்கல் பிடுங்கல்கள். அப்படியிருக்கையில் ஒரு பணக்காரனுக்கு எவ்வளவு இருக்கும் ? அரசியல்வாதிக்கு, நடிகனுக்கு, தொழிலதிபர்களுக்கு, தனவந்தர்களுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி பணம் சடாலென வளர்கிறது ?
நேர்மையான முறையில் பணத்தினைப் பெருக்க, வளர்க்க நாயடி, பேயடி படவேண்டுமென்பதுதான் நிதர்சனம். ஆனால், நியாயமாய் சம்பாதிக்காத பணத்தினை எப்படி நியாயமான வருமானமாகக் காட்டுவீர்கள்? அங்கே தான் இந்த “வரிகளற்ற சொர்க்கங்கள்” தன் வாசற்கதவை பெரும்பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் / சர்வாதிகாரிகளும் திறந்து காட்டி ரத்தினக் கம்பளம் விரிக்கிறது.

வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?

இவை ஒரு நாடாகவோ, மாநிலமாகவோ, ஒரு கட்டமைப்பின் கீழ் வரும் பகுதியாகவோ இருக்கலாம். வரிகளற்ற இடங்களைக் கண்டறிவது சுலபம்.
  • இங்கே வரிகள் குறைவாக அல்லது பூஜ்யமாக இருக்கும்
  • அன்னிய நாட்டு வரித் துறையோடு பெரும்பாலும் தொடர்புகள் இருக்காது
  • அந்த ஊரில் இருக்கவேண்டுமென்கிற கட்டாயங்கள் இருக்காது
  • சட்டங்கள், அரசு, பரிவர்த்தனைகள், ஆளுமை எதுவுமே “வெளிப்படையாக” இருக்காது
  • தங்கள் இருப்பிடத்தை Offshore Financial Center என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்கள்
      இந்த வரிகளற்ற சொர்க்கத்தின் தலைமையகம் – லண்டன்சூரியன் அஸ்தமிக்காத பரம்பரைதான் தன்னுடைய ‘காலனி’ நாற்றினை உலகமெங்கும் நட்டு அது இப்போது வளர்ந்து செழித்தோங்கி குட்டி சொர்க்கங்களாக மாறியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக்கட்டத்தில் பிரிட்டன் பல நாடுகளிலிருந்து வெளியேறினாலும், இன்னமும் பல நாடுகள், தீவுகள் ஆஸ்திரேலியா உட்பட “மாட்சிமை தாங்கிய ராணியை” தலையில் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்யும் தேசங்கள்.  லண்டன் – பிரிட்டனின் தலைநகரமென்பது மூணாம் வகுப்பு பாப்பா கூட சொல்லும். சொல்லாதது, லண்டன் வைத்திருக்கும் வரிகளற்ற சொர்க்கங்களின் மறை மூடிய சிலந்தி வலைப்பின்னல். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உள்வட்ட அதிகாரத்தின் கீழ் இருப்பவை; வெளிவட்டத்தில் இருப்பவை – சுருக்கமாய் உள்வீடு / வெளிவாசல். உள்வீட்டில், பிரிட்டனுக்கு பக்கத்திலேயே இருந்துகொண்டு – ஆனால் கொஞ்சம் “சுயமாகவும்” நிதிக்கான சட்டதிட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் பிரதேசங்கள்; ஜெர்ஸி (Jersey), க்வர்ன்சே (Guernsey) மற்றும் ஐஸல் ஆப் மேன் (Isle of Man)- இவை அனைத்தும் பிரிட்டனின் ராஜபரம்பரையினை அண்டி வாழும் மாகாணங்கள். இது தவிர கேமென் தீவுகள் (Cayman Islands), பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands – BVI). வெளியே இருந்தாலும், இன்னமும் உள்வீட்டு காலனி தான். வெளி வாசலில், ஹாங்காங், ஒரளவுக்கு சிங்கப்பூர், துபாய் எல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி தேசமாய் இருந்து, விடுதலைப் பெற்று இன்னமும் பிக்பென் பார்த்து ராகு காலம், எம கண்டம் குறிக்கும் தேசங்கள். அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் பெர்மூடா, ஹவாய் போன்ற தேசங்களிலும் பிரிட்டனின் மகத்துவம் பெரிது. லண்டன் உலக நிதி வர்த்தகத்தின் தலைநகரம் [இதை கொஞ்சநாள் நியுயார்க் வைத்திருந்தது. 2008 பொருளாதார சீர்குலைவிற்கு பின், அந்த நிலை மாறிவிட்டது] இங்கே தான் எல்லா முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் நடக்கும். பக்கத்து ஊரான அயர்லாந்து பொருளாதார மந்தத்தில் மோசமாய் அடிப்பட்ட நாடு. காரணம் ஊரான் பணத்தில் வாழ்ந்த நாடது. எதற்காக லண்டன் இந்த மாதிரியான ஒரு கட்டமைப்பினைக் கையில் வைத்துக் கொண்டு, ஆனால் உலக நிதி உத்தமர் என்று போஸ் கொடுக்க வேண்டும்? சூட்சுமமே அங்கு தான் இருக்கிறது. லண்டனிலிருந்து ஆட்கள் எல்லா கால, நேர சூழல்களிலும் வணிகம் செய்யமுடியும். இந்த பக்கம் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மொரிஷியஸ். அந்த பக்கம் ஜெர்ஸி, கேமென் தீவுகள், பெர்முடா – இது 24 மணி நேரமும் பணம். பணம். பணம். பணத்தினை எப்படிக் கொண்டு வருவது, எப்படி சேர்ப்பது, எப்படி கைமாற்றுவது, எந்த நாட்டுக்கு அனுப்புவது மட்டுமே. இதில் நல்ல, கெட்ட, யோக்கிய, அயோக்கிய, நியாமான, அநியாயமான, அதர்மமான எல்லாவிதமான பணமும் அடங்கும். எத்தியோப்பியாவில் சர்வாதிகாரத்தால் ஆபத்து என்று நினைக்கும் தொழிலதிபரும், ம.பி, உ.பி, இ.பி யில் அரசியல்வாதிகள் குவிக்கும் பணமும் ஒரே மாதிரி தான் பார்க்கப்படும். ஒரே மாதிரி ஹவாலா + மாற்று வழிகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போய் அங்கிருந்து இன்னொன்று, அங்கிருந்தும் வேறு என்று ஊர் உலகம் சுற்றி பின் அந்த நாட்டுக்கே “அன்னிய நேரடி முதலீடாக” (Foreign Direct Investment)போய்ச் சேரும். எல்லா அன்னிய முதலீடுகளும் மோசமானவை கிடையாது. ஆனால், இது தான் ரூட். எப்படி இந்தியாவில் கிளம்பி, சிங்கப்பூரிலோ, துபாயிலோ கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேமென் தீவுகளுக்கோ, பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளுக்கோ போய், அமெரிக்க முகம், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சகிதம் மொரிஷியஸிற்கு வந்து கம்பெனி நிறுவி, டெல்லி ஹில்டனில் ரூம் போட்டு, கோட்-சூட் மனிதர்களோடு கை குலுக்கி, போட்டோ எடுத்து, மறுநாள் எகனாமிக் டைம்ஸில் இன்னார் நிறுவனம், இந்த துறையில் 2000 கோடி முதலீடு செய்ய இந்தியாவில் உத்தேசித்து இருக்கிறது என்பதற்கு பின்னிருக்கும் கதையினை, திரில்லராக எழுத முடியும். சரி போகட்டும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிவந்தவுடன் அடிக்கடி எல்லாரும் உச்சரிக்கும் ஒரு பெயர் மொரிஷியஸ். என்ன இருக்கிறது மொரிஷியஸில்?

      மொரிஷியஸ்

      நம்பர் 1, கேதீட்ரல் ஸ்கொயர், போர்ட் லூயிஸ் என்பது மிக முக்கியமான முகவரி. மொரிஷியஸிற்கு போகும் பெரும் தனவந்தர்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள், ஹெட்ஜ் பண்ட் ஆட்கள், இன்ன பிற தரகர்களின் மெக்கா இந்த இடம் தான். இங்கிருக்கும் கியுபிக்கிள்களில் தான் தினமும், பல மில்லியன் டாலர்கள் உள்வந்து, வெளியேறுகின்றன. மொரிஷியஸ் இந்திய கருப்பு / வெள்ளை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் “வெள்ளையான” பணத்தின் தாயகம்.

       நாளை மொரிசியஸ் எப்படி இதில் சம்பந்தப்படுகிறது என்று பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: