நான் அனுபவப்பட்ட யாழ்ப்பாணம்
- கலாநிதி: ராஜசிங்கம் நரேந்திரன்
நடந்த எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சியின் போது அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து உயிர் பிழைத்து மற்றும் மோதலின் பல கட்டங்களிலும் அதேபோல இராணுவத்தினரின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிந்து பழகிப்போன யாழ்ப்பாண அரசாங்க சேவை, போரினால் தாக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தேவையான முனைப்பையும் உணர்ச்சியையும் இழந்து விட்டது.
2011 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக சுமார் இரண்டரை மாதங்கள் வரை நான் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்தேன். நான் அங்கிருந்த வேளையில் தொலைக்காட்சியைப் பார்க்கவோ, வானொலியைக் கேட்கவோ, பத்திரிகைகளை வாசிக்கவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ இல்லை. மக்களின் நாளுக்கு நாள் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் உட்தாக்கங்களால் என்னைச்; சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கண்ணோட்டம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே தரப்போகின்றவை நிச்சயமாக விஞ்ஞான ஆய்வுகளின்படியோ அல்லது கட்டமைப்பு கற்கை நெறிகளின்படியோ பெறப்பட்ட விளைவுகள் அல்ல, ஆனால் எனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் எண்ணங்களின் சுருக்கம்.
தனிப்பட்ட நிலையில், அங்கு தங்கியிருந்த காலத்தை முற்றாக அனுபவித்து மகிழ்ந்ததோடு, சிக்கலான எனது நாளாந்த வாழ்க்கை நடப்புகளுக்கு அப்பால், சாதாரண மகிழ்ச்சி நிறைந்த வாழ்வியலையும் என்னால் இனங்காண முடிந்தது. சுத்தமான காற்று,ப ரந்து விரிந்த நீல வானம், இரவில் அதில் மின்னும் நட்சத்திரங்கள், குளிராகத் தழுவும் தென்றல், யாழ்ப்பாணத் தமிழின் மதுரமான ஒலி இவை எல்லாவற்றையும் நான் அனுபவித்தறிந்தேன்.
ஏ – 9 நெடுஞ்சாலையை அண்மித்து வரும் போது நவீன வாழ்க்கையின் ஒலிகளை கேட்ட அதேவேளையில் ஒரு வகையான பறவைகள் எழுப்பும் இயற்கையான உரத்த ஒலிகளையும், இலைகள் உரசும் சலசலப்பையும் என்னால் அனுபவிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் எல்லோரும் உணரக்கூடிய அச்சமற்ற சுதந்திரத்தின் சுகத்தையும் நான் அனுபவித்தேன். முன் முகப்பில் தன்னைச் சுற்றி நின்ற எல்லாவற்றையும்விட உயரமாக நின்றிருந்த மிகப்பழைய ஒரு பனைமரத்தை என்னால் காணமுடிந்தது,அது உயரமாக நின்றிருந்தது, முப்பது வருடங்களுக்கு மேலாகத்தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த அழிவுகளுக்கெல்லாம் ஒரு காவலனைப்போல நின்றது மட்டுமல்லாது அடியிலிருந்து நுனி வரை செறிகோல் போல மிகவும் நேராகவும் இருந்தது, கடந்த முப்பது வருடங்களாக தான் முகம் கொடுத்த விரோதங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு வாழும் (பனம் கொட்டை என கிண்டல் செய்யப்படும்) யாழ்ப்பாணத்து மனிதர்களும் இந்தப் பனை மரத்தைப்போலத்தான் இருப்பார்கள் என்று நான் ஆச்சரியப் பட்டேன்.
எனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே மணிக்கணக்காக யோசனை செய்ய என்னால் முடியுமாகவிருந்தது, புதுமையும் பழமையும் கலந்து காணும் ஓரிடத்தை, தனது இயற்கை அழகினால் பொருளாதார வளம் பெற்ற ஓரிடத்தை, பழமையின் கலாசாரம் பிரதிபலிக்கும் அதேவேளை 21ம் நூற்றாண்டுக்கு அவசியமான வகையில் தன்னை மாற்றிவரும் ஓரிடத்தை, அங்கு வாழும் மக்கள் என்னவாக மாறவேண்டும் என விரும்புகிறார்களோ அதேபோல மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் ஓரிடத்தை, மக்களாகிய நாங்கள் நமது உழைப்பின் பெருமையால் உழைத்துச் சம்பாதித்து நவீன வாழ்க்கைத் தரத்துக்கு முன்னேறக் கூடிய ஓரிடத்தை, மக்கள் என்கிற வகையில் அங்கு வாழும் நாமும் நமது நாடும் பெருமை கொள்ளக் கூடிய ஓரிடத்தை, இத்தனை சிறப்பும் பொருந்திய யாழ்ப்பாணத்தை பூலோக சொர்க்கமாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் எனது சிந்தனையாகவிருந்தது. அறிவைப் புகட்டக் கூடிய நல்ல தலைவர்கள் தமிழர்களிடத்து குறைவாக உள்ளதினால் அந்த நிலையைத் திருத்தியமைக்க என்ன செய்யலாம் என நான் சிந்தித்தேன். மக்கள் என்ற வகையில் நாங்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து சரியான பாடத்தைப் படித்தறிவதும் மற்றும் நன்கு தீர்மானிக்கப் பட்டதும் எதிர்கால நடைமுறைக்கேற்றதுமான கண்ணோட்டங்களையும் கொண்டதுமான கருத்துள்ள இலக்கினையும் நோக்கி நகருவது எப்படி என நான் அதிசயித்தேன். தற்போதுள்ள இலட்சியமற்ற எதிர்ப்பு இனியும் தொடருமானால், மக்களாகிய எங்களுக்கு எங்கள் கடந்த காலத்திலும், எங்கள் நிகழ்காலத்திலும் இனி வரப்போகும் எதிர்காலத்திலும் என்ன காத்திருக்கப் போகிறது என நான் ஆழ்ந்து யோசித்தேன்.
எனது கல்வியறிவும் மற்றும் பலதரப்பட்ட அனுபவங்களும் என்னை ஒரு செயற்பாட்டாளனாக மட்டுமல்லாது, ஆகக் குறைந்தது சாத்தியமானது என்ன என்பதை விளக்குவதற்காவது அனுமதிப்பதற்கு எவ்வகையில் பயன்படக் கூடும் என்பதை என்னால் உருவகப் படுத்தி அறிய இயலுமாகவிருந்தது.ஒரு யாழ்ப்பாணம் ஒரு வன்னி அதன் கடந்த காலத்தின் துயர் படிந்த நினைவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மக்களின் சமூகம்,பொருளாதாரம், கலாச்சாரம் என்பனவற்றின் பிரகாசமான எதிர்காலத்தைத் தரும் பாதையில் வெளியேறுவதை என்னால் கற்பனை செய்ய இயலுமாகவிருந்தது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் என்னுடைய இந்தத் தங்கியிருப்பின்போது என்னுடைய அனுபவம் வயிற்றைக் கலக்குவதாக இருந்தது. அப்படி நடக்கக் கூடியது உங்களுக்கு உண்மையிலேயே உரித்தான ஓரிடத்திலும் மற்றும் நீங்கள் வீடாக நினைக்கும் ஓரிடத்திலும் மட்டுமே என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும்.
நான் மேலும் தோட்டத்தில் விளைந்த புத்தம்புது மரக்கறி வகைகள் மற்றும் புதிதான மீன்களின் சுவையை மீண்டும் அனுபவித்தேன். தோட்டவேலை செய்வதையும், விதைகள் முளை விடுவதையும், மலர்கள் மலர்வதையும், மரங்களில் பழங்கள் தோன்றுவதையும் அனுபவித்து இரசித்தேன். போரின் அழிவு, திருட்டு, நாசவேலைகள் மற்றும் குழப்பங்கள் என்பனவற்றையும் அதிகடந்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்த, காலஞ்சென்ற எனது தாயாராலும் எனது சகோதரராலும் நடப்பட்ட சில மரங்களைப் பராமரிப்பதில் உள்ள தனி சுகத்தையும் அனுபவித்தேன். பெரும்பாலும் முற்றாக அழிவடைந்து மற்றும் நீண்ட காலமாக சிதறிப் பிரிவடைந்து போன குடும்ப அங்கத்தவர்கள் ஒருமித்து ஓரிடத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்தும் ஒரு வீட்டைப் புதுப்பித்தேன் அதன் கூரை மாற்றப்பட்ட போதிலும் நான் அதை மகிழ்வுடன் அனுபவித்தேன். இதே வீட்டில் மரணம், துயரம், அழிவு போன்ற காட்சிகள் இடம்பெற்றதுக்கு நானும் சாட்சியாக இருந்திருக்கிறேன்.
ஒரு நீண்ட வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் மற்றும் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டதின் மிகச் சிறு பகுதியை மட்டுமே நினைவு படுத்த வேண்டியுள்ளது. எதிர்ப்புகளின் முன்னால் நான் தோற்றுப் போய்விட வில்லை மற்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டை வைத்திருப்பதில் அதுவும் யாழ்ப்பாணத்தில் அந்த வீடு இருப்பதில் எனக்கு அளவற்ற திருப்தி. அந்த வீட்டைத் திரும்பவும் எனது சொந்தமாக்கியதில் அந்த வீட்டில் வைத்து இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்ட எனது தாயார், சகோதரர், மற்றும் எங்கள் தோட்டக்காரர் ஆகியோருக்கு நான் மரியாதை செலுத்தியதாகவே உணர்கிறேன்.
மேலும் அந்த வீட்டின் மத்தியில் எழுந்த கனவைக் கலைக்க ஒருமித்து வந்த படைகளுக்கு எதிராக நான் சவால் விடுவதைப் போலவும் உணர்கிறேன். அந்த வீடு, அங்கே எனது வாழ்க்கை, மற்றும் அங்கு நான் செய்பவை எல்லாம் அங்கே வாழ்ந்து மறைந்தவர்களுக்காக நான் செலுத்தும் அஞ்சலி அத்தோடு நினைவுகளால் அழிக்க முடியாத கடந்த காலத்தையும் மீறி வாழ்க்கையைத் தொடர்வதற்காக எடுக்கும் உறுதிப்பாடு.
யாழ்ப்பாணத்தில் நன்கு தீர்மானிக்கப் பட்டது மற்றும் தொலை நோக்குத் திட்டங்கள் எனப் பிரித்தறியும் இலக்குகள் இல்லாவிட்டாலும் கூட வாழ்க்கை பலமுனைகளிலும் முன்னேறியுள்ளது. சரியானது தவறானது என இரண்டுவகைப் பட்ட பல வழிகளாலும், அதை திறமையாக விளக்குவதானால் அரசியல் மற்றும் சமூக வெற்றிடம் என்பனவற்றால் மக்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அநேகமானவர்கள் சிங்களம் பேசக் கற்றுக் கொண்டுள்ளார்கள் அதனால் சிங்கள உத்தியோகத்தர்கள், படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருடன் செயற்படுவதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கருமமாற்றும் சிங்களவர்கள்கூட மக்களுடன் தமிழில் பேசக் கற்றுக் கொண்டுள்ளார்கள். இது ஒரு சாதகமான அறிகுறி மற்றும் இந்த முன்னேற்றம் யாழ்ப்பாண நகரத்தில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது (இதே காட்சியை வெள்ளவத்தை சந்தையிலும் சிங்கள வியாபாரிகள் தங்கள் தமிழ் வாடிக்கையாளர்களுடன் தமிழில் உரையாடுவதைக் காணலாம்) இது அச்சத்தைக் குறைத்து நட்பை வளர்க்கிறது. நாளடைவில் யாழ்ப்பாணமும் நிச்சயம் தனிமைப் படுத்தப்படுவது குறைவடைந்து வருவதுடன் கொழும்பு, கண்டி, பதுளை போன்ற ஸ்ரீலங்காவின் மற்ற உலகத் தொடர்புள்ள நகரங்களைப் போல மாறிவிடும். இது வரவேற்க வேண்டிய ஒரு முன்னேற்றம். தமிழர்கள், மேலும் மேலும் அவர்களை தேசியத் தன்மையுடன் தொகையிடும் நடவடிக்கைகளின் நடுவிலிருந்து யாழ்ப்பாணத் தமிழர்கள் என்கிற தங்கள் தனித்தன்மையான அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களைப் பொறுத்தது. தற்சமயம் நடைபெறும் இந்த முயற்சிகளின் விளைவாக, நாங்கள் தமிழ்த் தன்மை குறைந்தவர்களாகவோ மற்றும் குறையுள்ள இந்துக்களாகவோ அல்லது குறையுள்ள கிறீஸ்தவர்களாகவோ மாறிவிடுவோமானால், அதற்கான குற்றத்தை ஏற்கவேண்டியவர்கள் நாங்கள்தான்.
21ம் நூற்றாண்டு காலத்திலும் தனிமைப்பட்டு வாழ்வது எந்தப் பயனையும் தராது. தனிமைப் படுத்தப்பட்ட சிந்தனை மனிதர்கள் என்கிற வகையில் நமது வளர்ச்சியையும் முனனேற்றத்தையும் நிச்சயம் மட்டுப்படுத்த மட்டுமே செய்யும்.நாங்கள் வளர்ச்சி பெறவேண்டும், எங்களைச் சுற்றியுள்ளவைகளிலிருந்து சிறப்பானவைகளை தேர்வு செய்து இந்த வளர்ச்சியை முழமை பெறச் செய்ய வேண்டும்.
எப்படியாயினும் நானும் இத்தகைய நிகழ்வு ஒன்றுக்கு இரையாக வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று நடைபெற்றது.யாழ்ப்பாண நகரிலுள்ள சதொச விற்பனை நிலையத்துள் நான் நுழைந்த போது அங்கு கடமையிலிருந்த தமிழ் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் வித்தியாசமான முறையில் சிங்கள மொழியில் நான் வாழ்த்தி வரவேற்கப் பட்டேன்.என்னைப் பார்த்ததும் நான் ஒரு சிங்கள உத்தியோகத்தர் என அவர் தவறாக எடைபோட்டு விட்டார். நான் என்னை ஒரு தமிழர் என அடையாளம் காட்டிக் கொண்டதும் அவர் என்னடன் தமிழில் பேச ஆரம்பித்தார், ஆனால் அவருடைய பேச்சுத் தொனி சிறிது ஆணவத்துடன் அமைந்திருந்தது.
நான் கொள்வனவு செய்த சுமார் 6000 ரூபா (55 டொலர்) பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு காசாளரின் பீடத்தை நான் அடைந்தபோது காசாளர் என்னை நேரடியாக அவமானப் படுத்தும் விதத்தில் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்கத் தக்க உரத்த குரலில், நான் ஒரு கல்யாணத்துக்கு வேண்டி பொருட்களை கொள்வனவு செய்திருக்கிறேனா எனக் கேட்டார். நான் சற்றுக் கடினமான தொனியில் நான் 6000 ரூபாவுக்கோ அல்லது 600,000 ரூபாவுக்கோ பொருட்களை கொள்வனவு செய்வது அவருக்குத் தேவையற்ற ஒரு விடயம் எனச் சொல்ல வேண்டியிருந்ததுடன், வாடிக்கையாளர்களை உபசரிப்பது இத்தகைய வழிமுறையில் அல்ல என்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்ட வேண்டியுமிருந்தது. அதன் பின்பு அவர் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மிகவும் பணிவாக நடந்து கொண்டார்.
இந்தச் சம்பவம் விளக்குவது, பாதுகாப்பு ஊழியர் தரத்திலுள்ள சில தமிழர்கள் கூட சிங்கள உத்தியோகத்தரிடம் பழகும்போது காட்டுவது பணிவான நல்ல பரிமாறலையும், மற்றும் முகஸ்துதியையும் கொண்ட மனப்பாங்குடனும் மற்றும் தமிழர்களை நடத்தும் விதத்தில் ஆணவத் தன்மையை கடைப்பிடிப்பதையுமே. அது மேலும் எடுத்துக்காட்டுவது 6000 ருபாவை மளிகைச் சாமான்களில் செலவிடும் தன்மையை உயர்வாகக் காணும் ஒரு வித வறுமை நிலை யாழ்ப்பாணத்தில் நிலவுவதையும்.
எனது வீட்டில் மின்சார விநியோகம் சம்பந்தமாக நான் அளித்த முறைப்பாட்டுக்குப் பதிலாக ஒரு தொழில்நுட்பவியலாளரை மின்சாரசபை வாகனத்தில் ஏற்றிவந்த சாரதி ஒருவருடன் நிகழ்ந்த ஏற்றுமுட்டல் சம்பவம் வெளிக்காட்டுவது சதொசவில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு ஆணவப் பரிமாறலான சம்பவத்தை.
இந்தச் சாரதி பேசிய ஆணவப் பேச்சுக்கும் குரூரமான நடத்தைக்கும் அவரை அந்த இடத்திலேயே வேலை நீக்கம் செய்திருக்க வேண்டும். அவர் நடந்து கொண்ட விதம் அவர் ஏதோ தரும சிந்தனையுடன் அங்கு வந்து எங்கள் பிரச்சனையைத் தீர்ப்பது போலிருந்தது. மின்சார சபை அலுவலர்கள் 23 வருடங்களுக்கு முன்பு அந்த வீட்டில் மின்சார இணைப்பு இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக பழைய மின் கட்டண பற்றுச் சீட்டொன்றைக் காண்பிக்குமாறு கோரினார்கள், அதேவேளை எல்லாப் பொழுதுகளிலும் தேவையான கோப்புகள் அவர்கள் வசமிருந்தன.ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதன்போது அந்த வீடு சேதமாக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த குடியிருப்பாளர்கள் கொல்லப் பட்டார்கள் என்கிற யதார்த்தத்தை அவர்கள் சிந்திக் திராணியற்றவர்களாக இருந்தார்கள். நான் கேள்விப் பட்ட விடயம் என்னவென்றால் பெரும்பாலான தமிழ் உத்தியோகத்தர்கள் விசேடமாக ஆவணங்கள், மற்றும் அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் கடமையிலிருப்பவர்கள், யாழ்ப்பாணத்திலிலுள்ள பொதுமக்களுடன் இத்தகைய விதத்திலேயே நடந்து கொள்வதாகவும் மற்றும் முரட்டுத் தனத்துடன் மோசமாக மக்களை அவமதிப்பதாகவும்.
அதேவேளை அவர்கள் சிங்கள அதிகாரிகளுடன் மிகவும் பணிவான முறையில் நடந்து கொள்வதாகவும் (முன்னாள் அரசாங்க அதிபர் கணேஷ் வடமாகாண ஆளுனரின் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினாராம்) அவர்கள் பறவைக் கூட்டில் ஆட்சி நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளின் மோசடிகளுக்கு உடந்தையாகவிருந்தபடி தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களுக்கு எதிராகக் குற்றங்களைப் புரிகிறார்கள். மேலும் எனக்குச் சொல்லப்பட்டது, ஆளுனரின் அலுவலகம் மற்றும் அதுபோன்ற அலுவலகங்களில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகள் தாங்கள் பழகும் தமிழர்களிடத்தில் மிகவும் மரியாதை காண்பித்து நடக்கிறார்கள் என்று. இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் பற்றியும் இதே விதமாகக் கருத்துக் கூறலாம்.
தமிழ் அரசாங்க ஊழியர்கள், யாழ்ப்பாணத்தில் நிலவிய கொந்தளிப்பான நிலமைகளில் பல வருடங்களாக கடடையாற்றியிருந்தும் தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதையும், மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே அவர்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பதையும் மறந்து விடுகிறார்கள். போரினால் தாக்கப்பட்டு தரித்திர நிலையிலுள்ள மக்கள் உணர்ச்சியற்ற கொடுங்கோன்மையானதும் மற்றும் ஊழல் நிறைந்தது எனக் குற்றம் சாட்டப்படும் அரசாங்க சேவையினைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மாகாணத்தில் நடந்த எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சியின் போது அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து உயிர் பிழைத்து மற்றும் மோதலின் பல கட்டங்களிலும் அதேபோல இராணுவத்தினரின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிந்து பழகிப்போன யாழ்ப்பாண அரசாங்க சேவை, போரினால் தாக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தேவையான முனைப்பையும் உணர்ச்சியையும் இழந்து விட்டது.
மேலும் நீண்டகால போராட்டக் காலகட்டத்தில்; எதிர் நீச்சல் போட்டு உயிர் வாழ்வதற்காக கீழ்படியும் மக்களின் விருப்பங்கள் அவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, அதன் பின்னான காலத்திலும் அதற்காக அவர்கள் அரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பழக்கம்தான் நீண்டகால யுத்தத்தின் பின்பும் காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் ஐயா என விளிக்கும் ஒரு வெட்கமற்ற செயலுக்கும் மற்றும் தென்பகுதியில் உள்ளது போன்ற பணிவான தோரணைக்கும் (உண்மையில் பாசாங்குத்தனம்) மற்றும் மதிப்புக் குறைவான நிலைக்கும் அவர்களை மாற்றியிருக்கிறது.
யுத்தம் நடந்த இதே காலப் பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ யினரையும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள படையினரையும் நோக்கியும் கூட இந்தக் காட்சி வெளிப்படுத்தப் பட்டது. இந்த முதுகெலும்பற்ற பழக்கம்தான் எல்.ரீ.ரீ.ஈ ராட்சசத்தனமாய் மாற உதவியது. இதே பழக்கம்தான் நீண்டகால யுத்தத்தின்போது ஆயுதப் படையினரிடமிருந்து அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய மரியாதைக்கு செலுத்தப் பட்ட விலையாகியது. இந்தக் கீழ்படியும் பழக்கம் வரும் வருடங்களில் அவர்களின் முன்னேற்றத்துக்கும் மறுவாழ்வுக்கும் செலுத்த வேண்டிய விலையாகவும் மாறலாம்.
ஆயுதப் படையினர் இப்போது மக்களின் விமர்சனங்களுக்கும் அதிகளவில் உலக விமர்சனங்களுக்கும் ஆளாகிறார்கள். சந்தேகமில்லாமல் யுத்தத்தின் பின்னான காலகட்டத்திற்கான தேவைகளுக்கு வியத்தகு வகையில் பதிலளித்து வருகிறார்கள். எப்படியாயினும் மக்கள் அவர்களுடன் நேரான தன்மையுடனும் அவர்களின் மதிப்பை பெறத் தக்க தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தனிமனிதனின் ,ஒரு மக்கள் அல்லது தேசத்தின் சுயமரியாதையை அது என்ன விலையாக இருந்தாலும் அதனை விற்பனை செய்யக் கூடாது. ஆயுதப் படையினர் தென்பகுதியில் எல்லா இடத்திலும் இருப்பதைப்போல வடக்கு மற்றும் கிழக்கில் நிரந்தரமாக இன்னும் பல வருடங்கள் இருக்கப் போகிறார்கள், இனிமேலும் அவர்களை ஒரு ஆக்கிரமிப்புப் படையாகக் கருத முடியாது.அவர்கள் தேசிய ஆயுதப் படையினர் நாங்கள் பிரஜைகளாகவுள்ள தேசம் அவர்களை வேலைக்கு வைத்துள்ளது.இனிவரும் காலத்தில் அதிக எண்ணிக்கையான தமிழர்கள்கூட அதில் பல பதவிகளில் சேவையாற்றக் கூடும்.எப்படியாயினும் இந்த யதார்த்தத்தை மக்கள் என்கிற வகையில் அவர்களுக்கு பொருந்தக் கூடிய வகையில் மற்றும் ஒருவருக் கொருவர் மரியாதை தரும் உறவினைப் பேணத்தக்க சமன்பாட்டினை உருவாக்கி அதன்படி கையாள வேண்டியது தமிழர்களைப் பொறுத்த விடயம்.
வடக்கு மற்றும் கிழக்கில் இப்போது இடம்பெற்று வரும் அரசியல் கட்டமைப்பு பெரியளவில் நடைமுறைப் படுத்தப்படுவது, பிரதிநிதித்துவமற்ற, சாதாரண தரமான ,ஊழல் மற்றும் வன்முறைக்குள் குப்புற விழக் கூடிய தன்மைகளை. அநேகர் என்னிடம் தெரிவித்தது சமீபத்தைய தேர்தல்களில் அவர்கள் வாக்களித்தது ஏனென்றால்; குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிப்பதற்காக ரூபா 5000 வழங்கப் பட்டதாம். யுத்தத்தின் போது பட்ட துன்பங்களுக்கெல்லாம் நன்மைகளை அடைய சந்தேகமில்லாமல் தமிழர்களுக்கு அருகதையுள்ளது. விடுவிக்கப் பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் இத்தகைய அரசியல் கட்டமைப்பை திணித்து அதை விழாமல் தாங்கி நிறுத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத தவறு. போரினால் தாக்கப்பட்ட மக்களின் தேவைகளை உணர்ச்சிபூர்வமாக அணுகுவதற்குப் பதிலாக அரசாங்கம் யுத்தத்தின் பின்னான காலகட்டத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈயுடன் முரண்பாடுள்ள ஆனால் அதே தன்மை கொண்ட தீய சக்திகளை ஸ்தாபிப்பதன் மூலம் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான போரைத் தொடர்கிறது. இந்த நடவடிக்கையினால் அது கெட்டுப் போன எச்சங்களாக மீந்திருக்கும் பழைய அரசியல் சிந்தனைகளை மெதுவாக எழவைத்து நஞ்சைக் கக்க அனுமதிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் பொதுவான பார்வைக்குத் தென்படாமலிருப்பது நிச்சயமாக சமூகத்தின் சகல மட்டங்களிலுமுள்ள அரசியல், சமூக, மற்றும் மதத் தலைமைத்துவங்களையே. அங்கிருப்பது ஒரு அரசியல் காடைத் தனம் போன்ற ஒன்று அது அரசாங்க கட்டமைப்புகளையும் மக்களையும் தனது கிடுக்கிப் பிடியினுள் பிடித்து வைத்துள்ளது. நிலங்கள் விடுவிக்கப் பட்டாலும் உண்மையில் மக்கள் இன்னமும் விடுதலையாகவில்லை. அரசாங்கத்தில் பதவி வகிப்பவரின் கடமை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அரசியல் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தி, தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியின்; தேவைக்கும் நேரத்துக்கும் பொருத்தமான புதிய தலைமைக்கான இடத்தையும் நேரத்தையும் வழங்குதலே. மக்கள் அதைப் பின் தொடர்வார்கள். எப்படியாயினும் இந்த அரசியல் காடைத் தனத்தை ஸ்தாபிப்பது ஒரு தடை, தற்போதைய சூழலில் அவர்களால் தாங்களாகவே வளர முடியாது. கருத்தற்ற இந்தச் செய்கையின் விளைவுக்காக வரும்காலத்தில் அரசாங்கம் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
யுத்தமானது நிச்சயமாக அதன் வரியை பல குரூரமான வழிகளிலும் அறவிட்டு உள்ளது. தகுதியான தொழிற்திறமை உள்ளவர்கள் நன்கு சம்பாதிப்பதற்கு ஏற்ற ஏராளமான சந்தர்ப்பங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளபோதும் இளம் தலைமுறையினர் கற்பனையான எல் டொராடோவின் தங்கப் புதையலைத் தேடுவதற்காக வெளிநாடுகளில் குடியேறுவதற்கான ஆர்வத்துடன் உள்ளனர். எப்படியாயினும் வெளிநாட்டுத் தமிழர்களினால் வர்ணம் பூசப்பட்ட மேற்குலக வாழ்க்கைச் செழுமையின் உருவகமும் வெளிநாட்டு உறவினர்கள் தங்கள் சொந்த பந்தங்களை மேற்கிற்கு அழைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. சரியோ தப்போ எந்த வழியிலாவது ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறுவதுதான் பெரும்பாலான இளைஞர்களின் இலட்சியமாக உள்ளது. தொழிற்திறன் வாய்ந்த வேலையாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்குள்ள மிகக் குறைந்தளவு வேலையாட்களும், இடைத் தரமானவர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், நம்பகத் தன்மை அற்றவர்களாகவுமே உள்ளனர். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்காக மேலும் மேலும் வேலையாட்களை கிழக்கிலிருந்தும்,தெற்கிலிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டியதாக உள்ளது இது அவசியமான ஒன்றாகவும் அரசாங்கத்தின் எந்த குறுக்குவழி மூலமான திட்டங்களாலும் நிவர்த்தி செய்ய முடியாதது.
திருமணத்துக்காகக் காத்திருக்கும் கன்னியர்களினதும் அவர்களினது பெற்றோர்களினதும் மற்றொரு நிறைந்து வழியும் ஆர்வமாக இருப்பது, வெளிநாடுகளில் குடியேறுவது. பல சந்தர்ப்பங்களில் ஏற்கனவே திருமணமான வெளிநாட்டு தமிழ் ஆண்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்வதும் பின்பு அவர்களைக் கைகழுவி விடுவதுமான நிகழ்ச்சிகள் எனது கவனத்துக்கு கொண்டுவரப் பட்டுள்ளது. இளம் பெண்கள் பலர் தாங்கள் யாழ்ப்பாணம் வந்தால் தங்களுக்கு ஆபத்துள்ளது எனக்கூறும் பல வெளிநாட்டவர்களால் கவரப்பட்டு கொழும்புக்கும் வவுனியாவுக்கும் அழைத்து வரப்பட்டு பாலியல் ரீதியாக அவர்களை உபயோகித்துவிட்டு கைவிட்டு ஓடிப்போன பல கதைகளையும் கேள்விப்பட்டு வருகிறோம். சில சந்தர்ப்பங்களில் இந்த வெளிநாட்டு மனிதர்களின் பெற்றோர்கள் முக்கியமாகத் தாய்மார்களும் சீதனத்தைக் கவர்ந்தெடுப்பதற்காக இந்தக் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.மிகவும் கவலை தரும் இந்த நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இலகுவில் கிடைக்கும் கவர்ச்சியான பணத்தாசை, அநேகமாக அதனுடன் சில அவசிய தேவைகளும் இணைந்திருக்கலாம். இவை பல இளம் பெண்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறது. பாடசாலை செல்லும் சிறுமிகள் பகுதிநேர விலைமாதர்களாக மாறி மற்றும் எச் ஐ வி – எயிட்ஸ் போன்ற கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்ட அறிக்கைகளும் இந்த இரகசிய நிலைக்கு கருச்சிதைவு ஒன்றுதான் அவர்களிடையே உள்ள காணக் கூடிய தெரிவாகக் காணப் படுகிறது, என்பது போன்ற பலவிதமான கதைகள்.
பெரும் எண்ணிக்கையிலான இளம் யுத்த விதவைகளின் பிரசன்னமும், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ன் கட்டாய ஆட்சேர்ப்பை முன்னுணர்ந்து தவிர்த்துக் கொள்வதற்குமாக இளம் பெண்கள் முன்னர் திருமணம் செய்தாhகள். ஆனால் இப்பொழுது அவர்கள் விவாகரத்துப் பெற்றவர்களாகவோ கணவனால் கைவிடப் பட்டவர்களாகவோ மாறி யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மதிப்புகளின் ஒரு பொதுவான எண்ணிக்கையாக இருக்கிறார்கள். பணத்தை வீசி எறியத் தயாராக உள்ள இளம் ஆண்களுக்கும், தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடுவதற்காக பெண்துணையைத் தேடித் திரியும் இராணுவ வீரர்களுக்கும் அத்தகைய சேவைகளை வழங்குவதற்காக ஒரு திடீர் சந்தை தயாராக உள்ளது.சமூகத்திடையே போதை மருந்து அடிமைத் தனமும் மற்றும் சில்லறை மருந்து வியாபாரமும் தீவிரப் பிரச்சனைகளாக ஊடுருவியுள்ளன.
சில தொழிற் திறனுள்ள இளைஞர்கள் தங்கள் சேவைகளுக்காக சாதாரணமாக நியமிக்கப் பட்ட தரங்களை விட மிக அதிக ஊதியம் கேட்கிறார்கள். வெளிநாட்டிலிலுள்ள தங்கள் உறவினர்கள் அனுப்பும் தொடர்ச்சியான உதவித் தொகையில் உல்லாசம் அனுபவித்தபடி வேலையற்றுத் திரியும் அவர்களை ஒத்தவர்களின் வாழ்க்கைத் தரத்துடன் தாங்களும் போட்டி போடுவதற்கு வேண்டி. இந்த டொலர் – பவுண் - ஈரோ உதவித் தொகை பெறுபவர்கள் சமூகத்துக்கு பாரமாக இருக்கும் ஒட்டுண்ணிகள். அவர்கள் புத்தம் புதிய உந்து வண்டிகளை ஓட்டுவதும்,விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தபடி, விலையுயர்ந்த செல்பேசிகளில் ஜம்பம் அடித்துக்கொண்டு, இப்போது யாழ்ப்பாணத்தில் நிரம்பி வழியும் உணவு விடுதிகளின் தொடர் வாடிக்கையாளர்களாகவும் உள்ளார்கள்.
வாழ்க்கை நடத்துவதற்காக உழைத்துப் பிழைக்கும் இளைஞர்கள் மத்தியில் இவர்கள் கெடுதலான உதாரணங்கள்.மேலும் இவர்கள்தான் அநேகமாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் தொல்லைகள் பற்றி, மாதாந்த உதவித் தொகைக்காகவும் எதிர்கால புகலிட விண்ணப்பங்களுக்கு ஆதாரமாகவும் கதைகளைப் பரப்புபவர்கள்.அவற்றின் நடுவே நான் காணநேர்ந்த ஒரு மோசமான காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து இளம் பட்டதாரி தனது செலவுகளுக்காக எங்கள் வீட்டுத் தரைக்கு மெருகேற்றுவதற்கு விருப்பத்துடன் இசைந்ததுதான். துரதிருஷ்டவசமாக அவர்கூட மேற்கிற்கு குடியேறுவதற்கான கனவுடன் இருக்கிறார்.
மேலும் இந்த இலகுப் பணத்தின் கவர்ச்சி பல இளைஞர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது. தற்பொழுது யாழ்ப்பாணத்தில் முளைவிட்டிருக்கும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் விடுதிகள் என்பனவற்றின் முகாமையாளர்கள் முறையிடுவது அவர்களால் தகுதியான உத்தியோகத்தர்களை சேவைக்கு அமர்த்த இயலாமலிருப்பதாகவும் மற்றும் ஏற்கனவே அமர்த்தப் பட்ட ஒருசிலரைக் கூட தொடர்ந்து வைத்திருக்க முடியாமலிருப்பதாகவும். திரும்பவும் பயிற்றப்பட்ட ஊழியர்களை தெற்கிலிருந்து இறக்கமதி செய்ய வேண்டிய தேவை இதனால் ஏற்படுகிறது. நாணய மாற்று விகிதத்தின்படி ஒரு டொலர் 110 ரூபாவாகிறது.ஒரு 100 டொலரின் மாற்றம் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதியில் 11,000 ரூபாவாகிறது. முப்பது நாட்களின் கடுமையான வேலைக்குப் பின் வழங்கப்படும் 5000 ரூபா மாதாந்த வேதனம் நீண்ட காலமாக வெளிநாட்டு வரும்படியில் அனுபவித்து மகிழ்ந்த இந்த இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு விகிதம் அல்ல.
இதற்கு மறுதலையாக யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும் சக்திகளுடன் கைகோர்த்துள்ள அநேகமான இளம் பெண்கள்தான் வினைத் திறனினதும் மற்றும் மரியாதையினதும் எடுத்துக்காட்டுகள். இந்த இளம்பெண்கள்தான் யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தின் திறவுகோல்களை தங்கள் வசம் வைத்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் விவசாயம் மீண்டும் உயிர்பெற்று மற்றும் விளைபொருட்களை தென்பகுதிக்கு அனுப்பும் அளவு அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கூட, அந்த தொழிலும் சிறப்பான ஒரு சரிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் மகன்மார்கள் கடுமையான வேலைக்கும் அதற்குத் தேவைப்படும் செலவினத்துக்கும் ஈடுதரக்கூடிய வருமானம் விவசாயத்தில் கிடைக்காது என எண்ணுவதால் விவசாயத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். அநேகமானவர்கள் மேற்குக்கு குடியேறுவதைத்தான் இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை மகன்கள் வானவில்லின் முடிவில் காத்திருக்கும் தங்கம் நிறைந்த பானைக்காக கனவு காணும்போது அவனது பெற்றோர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். விவசாயத்தை நவீனமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு மற்றும் விவசாயக் கைத்தொழில் மதிப்புக் கூட்டும் திசையை நோக்கித் திரும்பும் வரைக்கும், விவசாயம் என்பது யாழ்ப்பாண இளைஞர்களைப் பொறுத்தமட்டில் கவர்ச்சி குறைவானதாகவே இருக்கும். குடும்பங்கள் வளர்ப்பதற்காக மரக்கறி விதைகளை வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இராணுவ அதிகாரி இந்த வசதியை ஏற்கொள்வதற்கு பெரும்பாலான குடும்பங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். ஒரு வீட்டுத் தோட்டத்தை உருவாக்கும் எனது முயற்சிகளின் ஆதாரத்தைக் கண்ணுற்ற அவர் விதைகள் அடங்கிய பல பைகளை எனக்குப் பரிசளித்தார்.
தொழில் திறனற்றவர்களும் குறைவான கல்வியறிவு உள்ளவர்களும் விசேடமாக வெளிநாட்டிலிருந்து உதவி செய்வதற்கு உறவினர்கள் இல்லாதவர்கள்தான் பெரியளவில் வேலையற்றவர்களாகவும் ஏழைகளாகவும் உள்ளார்கள்.இந்த வகையைச் சோந்த ஆண்கள் குடிகாரர்களாகவும், போதை மருந்துக்கு அடிமையானவர்களாகவும் உள்ளார்கள். அவர்கள் வேலை செய்ய மறுத்து வருவதுடன் எப்போதாவது விரும்பி வேலை செய்தால் அது மிகவும் பலனற்றதாகவும், நம்பிக்கையற்றதாகவும் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலான நேரங்களில் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதுடன் சந்தர்ப்பம் அமையும் போது நிச்சயம் வழிப்பறி கொள்ளை ஏன் கொலை கூடச் செய்வார்கள். அவர்கள் வீட்டில் அடுப்பெரிவதற்காக அவர்கள் வீட்டுப் பெண்கள் மாடாய் உழைக்கிறார்கள்.சமூக ஆதரவு, தொழிற் பயிற்சி, மற்றும் சமூக அமைப்பில் எதை ஏற்றுக் கொள்ளலாம் எதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை மனதில் பதியத்தக்க கல்வியறிவை ஊட்டி அவர்களின் நிலையைச சீராக்குவதற்கேற்ற வழிமுறைகளை எடுக்காத வரையில் இந்த நிலை யாழ்ப்பாணத்தில் வெடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு நேர வெடிகுண்டைப் போலவேயிருக்கும்.
தற்பொழுது உள்ள கொந்தளிப்பான நிலமை ஒழுக்கங்களை சீர்குலைத்து வருவதுடன் மதிப்பு முறைகளையும் யாழ்ப்பாணத்தில் அழித்துள்ளது. சமூக அமைப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் மட்டத்தில் இந்த உருக்குலைவைச் சீர்படுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடிய முயற்சிகள் அவசர அடிப்படையில் தேவைப் படுகிறது.
ஸ்ரீலங்காவின் மற்ற இடங்களைக் காட்டிலும் யாழ்ப்பாணத்தில் சனத்தொகை விகிதத்துக்கு அதிக அளவில் உந்து வண்டிகள், மிதி வண்டிகள், முச்சக்கர வண்டிகள் என்பன காணப் படுகின்றன அதுமட்டுமல்லாமல் தினசரி கொழும்பிலிருந்து அதிகமானவைகள் வந்த வண்ணமாகவே உள்ளன. சீரூந்துகளின் அதிகரிப்பு சனத்தொகை விகிதத்துக்கு ஏற்ற அளவில் இல்லை. இன்னமும் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் பழைய மொறிஸ் மைனர்,மொறிஸ் ஒக்ஸ்போட், மற்றும் ஒஸ்ரின் என்பனவே இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
போக்கு வரத்துக் காவற் பகுதியினர் மிகவும் கறாராகவும் விழிப்புடனும் உள்ளார்கள். ஆயுதப் படையினரும் கூட விசேடமாக இரவு நேரங்களில் உந்து வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மூலமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதற்காக உறுதியான விழிப்புடன் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் காவற்துறையினரதும் ஆயுதப் படையினரதும் கண்காணிப்பு இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் மிகவும் நியாயமானது எனக் கருதுகிறார்கள்.
பாரிய விளம்பரப் பலகைகள் மற்றும் பதாதைகள் என்பன எல்லா இடத்திலும் வந்து கொண்டிருப்பது கண்களுக்குத் தொல்லை தருகிறது. யாழ்ப்பாணத்தின் அழகான காட்சியிடங்களும் அதை அணுகும் வழிகளும் இத்தகைய சூழுல் துஷ்பிரயோகத்துக்கு இரையாகியுள்ளன. இந்தப் பகுதிகளை யாழ்ப்பாணத்தில் உல்லாசப் பயணிகளைக் கவரத்தக்க விதத்தில் மற்றும் வேலை வாய்ப்புக்கும் வருமானத்துக்கும் வளம் சேர்க்கும் வித்தில் அபிவிருத்தியாக்குவதை விடுத்து உள்ளுர் அதிகாரிகள் துட்டு விலைக்கு இந்த விளம்பரப் பதாதைகளுக்கான இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இந்த விளம்பரப் பலகைகள் யாழ்ப்பாணத்தில் நிலவும் அரசியல் தலைமைத்துவத்தின் தரத்துக்கு ஏற்ற சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன.அதிகாரத்தில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் உள்ளுர் வாசிகளின் சுயதிறமையை அதிகரிப்பதற்காகவும் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா முக்கியத்துவத்தை மேம்படத்துவதற்கான நல்ல தருணம் இதுதான்.
முடிவாக யாழ்ப்பாணம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அதற்கான திசைகள் திருத்தங்கள் மற்றும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.அநேக குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் இந்த வெளிநாட்டு வருமானம், அதேவேளையில் பல வழிகளில் சாபமாகவும் மாறியிருக்கிறது. குடியேற்றத்தை ஊக்குவிப்பதும்கூட ஒருவகையில் சாபக்கேடுதான் ஏனெனில் அது யாழ்ப்பாணத்தின் மறுவாழ்வுக்கும் நீண்டகால உறுதிக்கும் குழி பறிப்பதாக உள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் பல போர்வைகளிலும் நிழல் யுத்தம் நடத்துவதை விடுத்து வடக்கு மற்றும் கிழக்கில் பலனுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் செல்வப் பெருக்கத்துக்காகவும் இங்கு முதலீடுகளைச் செய்ய வேண்டும் .கல்வியுலக, மதம், மற்றும் சமூக அமைப்புகள் முன்வந்து நீண்ட மோதலின் விளைவாக சமூக மதிப்பினை இழந்து தவிக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றி அதனை மாற்றியமைக்க வேண்டும். நேர்மையான,முற்போக்கான, மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் தமிழரிடையே தோன்றுவதற்காகவும் மற்றும் அரசசேவைகளில் புதிய வேலைத் தத்துவங்களை உட்புகுத்துவதற்கு ஏற்ற நிலமைகளை உருவாக்க அரசாங்கம் முன்வரவேண்டும்.
தமிழில்: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக