திங்கள், 1 நவம்பர், 2010

அமெரிக்க விமானங்களில் பார்சல் வெடிகுண்டுகள்-அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவுக்கு இரண்டு விமானங்களில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை துபாயும், இங்கிலாந்து அரசும் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் மிகப் பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நாசவேலை சதிக்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சதி குறித்து மூன்று கண்டங்களையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஒரு பெண் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அக்டோபர் 28ம் தேதி ஏமனில் உள்ள இங்கிலாந்து உளவு அமைப்பான எம்ஐ6ஐச் சேர்ந்த உளவு அதிகாரிக்கு ஒரு தகவல் வந்தது. அந்தத் தகவல், அமெரிக்கா செல்லும் விமானங்களில் பார்சல்கள் மூலம் வெடிகுண்டுகள் அனுப்பப்படவுள்ளதாக கூறப்பட்டது.

ஒரு விமானம் துபாய் வழியாகவும், இன்னொரு விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லான்ட்ஸ் விமான நிலையம் வழியாகவும் செல்வதாக அது கூறியது.

இதையடுத்து 29ம் தேதியன்று கிழக்கு மிட்லான்ட்ஸுக்கு வந்த விமானத்தை நிறுத்திய அதிகாரிகள் அதில் உள்ள பார்சல்களை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது ஒரு சீலிடபப்பட்ட கார்கோ பெட்டியை சந்தேகத்தின் பேரில் தனியாக எடுத்தனர். அது யுபிஎஸ் என்று அழைக்கப்படும் யுனைட்டெட் பார்சல் சர்வீஸ் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பப்பட்டது.

பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அந்த பார்சல் பெட்டியை வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் நிபுணர்கள் திறந்தனர். அதில் வெடிக்கக் கூடிய எதுவும் இல்லாததை அறிந்து குழப்பமடைந்தனர். இந்தப் பார்சல் சிகாகோவில் உள்ள ஒரு யூத ஆலயத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலாகும்.

அதேசமயம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட விமானத்தை நிறுத்திய அதிகாரிகள் அதில் இருந்த பார்சல்களை சோதனையிட்டனர். அதில் ஒரு பார்சல் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இதுவும் சிகாகோ யூத ஆலயத்திற்கு அனுப்பப்பட்டதாகும். இது பெட்எக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது.

இந்த பார்சலில் ஒரு கம்ப்யூட்டர் பிரின்டரில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் இருந்தன. வெடிகுண்டு எதுவும் இல்லை.

ஆனால் அதிகாரிளுக்குச் சந்தேகம் போகவில்லை. இரு பார்சல்களும் தீவிரமாக ஆராயப்பட்டதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மிக மிக நுட்பமாக அந்த இரு பார்சல்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பார்சலில் இருந்த கம்ப்யூட்டர் பிரின்டர் சாதனத்தில், செல்போன் சிம் கார்டைப் பயன்படுத்தி வெடிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபாணியில்தான் இங்கிலாந்தில் சிக்கிய பார்சலிலும் வெடிகுண்டு ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்தது.

பார்ப்பதற்கு வெடிகுண்டு போல தெரியாத வகையில், மிக மிக புத்திசாலித்தனமாக இதை வடிவமைத்துள்ளனர். வெள்ளைப் பவுடருக்குள் இந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். பென்டாஎரித்ரிடால் டிரைநைட்ரேட் என்ற வெடிபொருள் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக மிக தொழில்நுட்பத்துடன், தொழில்முறையில் இதைத் தயாரித்துள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு நுட்பமாக தயாரிக்க முடியும் என்பதால் இந்த இரு குண்டுகளையும் தயாரித்து, அனுப்பியது அல் கொய்தாவாக இருக்கலாம் என்று உறுதியாக சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இந்த இரு பார்சல் குண்டுகளையும் அனுப்பியது தொடர்பான விசாரணையை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஏமன் ஆகிய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும், உளவுத்துறையினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டது. விமானங்களில் வந்த அனைத்து பார்சல்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.

யூத ஆலயங்களைக் குறி வைத்து வெடிகுண்டு அனுப்பப்பட்டதால், அமெரிக்காவில் உள்ள யூதர்களின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா ஆவேசம்
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, இந்த குண்டுகளை வைத்தது அல் கொய்தாவாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது நிச்சயம் தீவிரவாத செயல். இதை சும்மா விட மாட்டோம். குண்டு வைத்தவர்களை பிடிக்காமல் விட மாட்டோம்.

வெடிகுண்டுகளை கண்டுபிடித்த இங்கிலாந்துக்கும், துபாய் பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஏமனின் செயலும் பாராட்டுக்குரியது. இன்னும் சற்று கூடுதல் கவனத்துடன் அது செயல்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: