Siva Ilango : "எழுபதுகளின் இசைக்காவியம்"
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1974 ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஒரு ரெக்கே, ஃபங்க் மற்றும் டிஸ்கோ (Reggae, Funk and Disco) இசைக் குழுதான் போனி எம் (Boney M). 'பாப்' (pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் (Boney M) குழுவினர்.
இன்னிசை நால்வராக வலம் வந்த பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் காலத்திற்கும், இனவெறி வெறுத்த இசைவாணன் மைக்கேல் ஜாக்சன் (Michael Jackson) காலத்திற்கும் இடைப்பட்ட இந்தக் குழுவினர், அப்பா (ABBA), பீகீஸ் (Bee Gees) குழுவினரின் சமகாலத்தவர்கள். Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams and Bobby Farrell ஆகிய நான்கு பேர் கொண்ட இந்த ஐரோப்பிய - கரீபியன் குழுவை 1975 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து உருவாக்கியவர், பிரான்க் பரியன் (Frank Farian) என்ற ஜெர்மானியர்.
பாப் இசையும், டிஸ்கோ நடனமும் புகழ்பெற்றிருந்த 1970களில் இக்குழுவினர் இரண்டிலும் புகழ் பெற்றனர். Daddy cool, Gotta go home, Sunny, Brown girl in the ring, Belfast போன்றவை பெரும் புகழ் பெற்ற பாடல்கள். Sunny பாடலின் தொடக்க மெட்டை இளையராஜா, பிரியா படத்தில் எடுத்தாண்டிருப்பார். Rivers of Babylon பாடலின் தொடக்க வரியிலேயே பாபிலோனின், அந்த வரலாற்றுக் காலத்திற்கே கொண்டு சென்று விடுவார்கள். ராபின் ஹுட் வரலாறை நினைவுபடுத்தும் மா பேக்கர் பாடல் ஒரு பெண் மலைக்கள்ளனைக் கண் முன்னே கொண்டு நிறுத்தி விடும். Ma Baker, El lute, இரண்டுமே காலத்தால் அழியா காவியங்கள்.
ரஸ்புடின் (Rasputin) ஓர் உச்சம் தொட்ட அரசியல் வரலாறு. மதகுருக்கள், இராஜகுருவான வரலாறுக்கு நிகழ்காலச் சாட்சியாய் திராவிட இயக்கம் மேடை தோறும் கை நீட்டிய ரஸ்புட்டீனை, lover of the Russian queen ஆகக் கட்டமைத்து, இசை வெள்ளத்தில் மூழ்கடித்து, அப்படியே வீனஸ் கிரகத்திற்குத் தூக்கிச் சென்று விடுவார்கள், போனி எம் குழுவினர்.
இவர்களது மூன்றாவது இசைத் தொகுப்பான 'வெள்ளிக் கிரகத்துக்கு விமானம்' என்ற பொருள் தரக்கூடிய 'நைட் பிளைட் டு வீனஸ்' (Night flight to Venus) ஆல்பம் 1978 ஆம் ஆண்டில் வெளியாகி உலகப் புகழ் அடைந்தது. ஐரோப்பாக் கண்டம் அனைத்திலும், ஸ்காண்டினேவியா, கனடா போன்ற பிற மேற்கத்திய நாடுகளிலும் கோடிக்கணக்கில் இவர்களது இசைத் தொகுப்புகள் விற்றுத் தீர்ந்தன.
மேற்கத்திய இசையையும், இசைக் கருவிகளையும் கொண்டு, அப்படி ஒரு மெய்சிலிர்க்கும் இசையைப் படைத்தளித்த இக்குழுவினர், 1970களின் இறுதியில் உலகின் தலைசிறந்த இசை, நடனக் குழுவாக உலக நாடுகளில் வலம் வந்து, மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். 1980 ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த இசைத் தொகுப்பாக, கனடாவின் ஜூனோ விருதை இக்குழு தட்டிச்சென்றது.
போனி எம்மின் மூன்றாவது இசைத்தொகுப்பு, 48 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (28. 8. 1978) வெளியிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் சட்ட ரீதியாகப் பிரிந்து விட்ட இக் குழுவின் தலைவியான லிஜ் மிசேல் (Liz Mitchell) மட்டும் தற்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக