வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

தமிழக இலங்கை ஏதிலிகளை தந்திரமாக இலங்கைக்கு அனுப்ப புல்லுருவிகள் முயற்சி

May be an image of glasses and wingtip shoes

 சரவணன் நடராஜா::  மதிப்பிற்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கு,
முந்தைய ஆட்சியில் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், தங்களது தலைமையில் 21 நபர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு 2008-ல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து, இலங்கைத் தமிழர்களில் யாரேனும் நாடற்றவர்களாக இருக்கிறார்களா என்ற ஆய்வை மேற்கொண்டு, 28,584 நபர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்கள் ஒருவேளை இலங்கை திரும்பினால் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். 
து தாங்கள் இலங்கையில் நாடற்றவர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரு இந்திய வம்சாவளி, மலையகத் தமிழராக அந்த மக்கள் மீது இருந்த கரிசனத்தில் அதைச் செய்தீர்கள். அது வரை சரி.


அதன் மற்றொரு பரிமாணத்தை தாங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள், அல்லது அந்தப் பரிமாணத்திற்கு துணையாக இருக்கிறீர்களா எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதாவது, 2008-ல் தாங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்த 28,584 நாடற்றவர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுமாக தற்போது தமிழ்நாட்டில் சுமார் 45,000 நபர்கள் இருக்கிறார்கள். நாங்கள் முகாம்களில் உள்ளவர்களிடம் பேசுகையில், ஆவணங்களையும், பின்னணியையும் ஆராய்கையில், அவர்களின் பின்புலம் மலையகமாகவும், பூர்வீகம் இந்தியாவாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட முகாம்களில் இருப்பவர்களில் 80%-க்கும் அதிகமானவர்கள் இந்தப் பின்னணியில்தான் இருக்கிறார்கள்.
ஆனால், தங்களது ஆய்வில் நீங்கள் கண்டறிந்த நாடற்றவர்களுக்கு, தாங்கள் இந்த ஆய்வை நடத்த உதவிய தொண்டு நிறுவனமான oFERR India, அவர்கள் அனைவருக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இலங்கைப் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இலங்கைப் பிரஜாவுரிமை ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்து, அனைவரையும் இலங்கைப் பிரஜைகள் ஆக்கிவிட்டனர். இலங்கை ஆவணங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு பேராபத்து, குழந்தைகளின் எதிர்காலம் என என்னென்னவோ காரணங்களைக் கூறி, அவர்களை மிக நயவஞ்சகமாக இந்த வேலையை சர்வதேச நிதி பெற்று, ஒவ்வொரு ஆவணத்திற்கும் இவ்வளவு தொகை எனும் வகையில் செலவு செய்து, தனியாகப் பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை சென்னைத் தூதரகம் அழைத்துச் செல்வது வரை அவர்களுடைய செயல்பாடு இருந்தது.
இதில் கவனிக்க வேண்டிய நகைச்சுவை என்னவென்றால், நாடற்றவர்களை இலங்கையராக்கும் அவர்களது முயற்சியின் போது, இந்தியர்களுக்கும் சேர்த்து இலங்கை குடியுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்ததுதான். இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி, 3(1)(a), 3(1)(b) & 3(1)(c) ஆகிய இந்த மூன்று பிரிவுகளில் வருபவர்களுக்கும், இந்தியர்களைத் திருமணம் செய்தவர்களுக்கும் இலங்கை ஆவணங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் எவ்வளவு அரசியல் தந்திரத்துடன் அந்த மக்களின் அறியாமையை, தெளிவின்மையை தங்களுடைய ‘மண்ணை மீட்போம்’ கொள்கைக்காகப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை தங்கள் யூகத்திற்கும், அரசியல் நோக்கர்களின் யூகத்திற்கும் விட்டுவிடலாம்.
இதை தாங்கள் அறிந்திருக்கவில்லையா...?, அல்லது அவர்கள் இந்தியாவிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களை, நாடற்றவர்களை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக இலங்கையர்களாக்கும் செய்த வேலைகளை தாங்களும் அறியக்கூடியதாகத்தான் இருந்தது என எடுத்துக்கொள்ளலாமா தெரியவில்லை.
ஏனெனில், தங்களது இந்த அறிக்கையில் இந்தியாவில் குடியுரிமைக் கோரிக்கையுடன் இருப்பவர்கள் பற்றி எந்த உரையாடலையும் தாங்கள் இணைக்கவில்லை. அது குறித்து பேசவும் இல்லை. எனில், இந்த மக்களை, அவர்களது தற்போதைய நிலைமையையும், வரலாற்றுக் காரணங்களையும், அவர்களிடமிருக்கும் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்காத தன்மையையும் பயன்படுத்தி, அவர்களது எதிர்காலம் எது என்பது குறித்தும் எவ்விதக் கவலையுமின்றி, எல்லோரும் அவர்களது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் செயலை 1948-ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகிறார்கள். அத்தகைய செயல்பாட்டிற்கு தாங்களும் ஒரு இந்திய வம்சாவளித் தமிழராக, மலையகத் தமிழராக உடன்படுகிறீர்களா எனும் சந்தேகம் வலுக்கிறது.
இலங்கையில் அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள், போதிய தெளிவின்மை காரணமாகவும், அறியாமையினாலும், தகவல் தொடர்பு சரியாக இல்லாத காலச்சூழ்நிலையாலும், அரசியல் சூழ்நிலை காரணமாகவும், 1964 & 1974 ஆகிய இரு ஒப்பந்தங்களின்படி இரண்டு நாட்டு குடியுரிமைக்கும் விண்ணப்பிக்காமல், அல்லது விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு விசாரணை நிலையில் இருந்தவர்கள், 1990-க்குப் பிறகு, இனப்பிரச்சினை, உள்நாட்டுப் போர், பாதுகாப்பின்மை என வெவ்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவிடம் பேசி, இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பது தானே ஒரு இந்திய வம்சாவளித் தமிழராக தாங்கள் செய்ய வேண்டியது.
எல்லோரும் கூறுவதைப்போல, இரு நாட்டு ஒப்பந்தங்களும் 1982-ல் முடிந்துவிட்டன என்று தாங்களும் கூற மாட்டீர்கள் என நம்புகிறோம். ஏனெனில், அரசியல் செயல்பாட்டில் இருக்கும் தாங்கள், இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு இந்தியா 2006-வரை இந்தியக் குடியுரிமை வழங்கியிருப்பதும், 1987-ல் இராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே ஆகிய இருவருக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இப்படி ஒரு சரத்து இருக்கிறது, அதாவது,
1987 - ஒப்பந்தம், பிரிவு 2.16 உட்பிரிவு (d)-ல் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:
“இலங்கையில் வசித்து வரும் இந்தியக் குடிமக்களை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மீள அனுப்பும் நடவடிக்கையையும், தமிழ்நாட்டிலிருந்து இலங்கை அகதிகளை மீள அனுப்பும் நடவடிக்கையுடன் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வகையில், இந்திய அரசு அதனைத் துரிதப்படுத்தும்.”
என்று குறிப்பிடப்படுகிறது. எனில், 1982-க்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பம் செய்த மக்கள் குறித்து இந்தியா செயல்பாடுகளை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறது என்பது புலனாகிறது.
அத்துடன், இரு நாட்டு உடன்படிக்கையும் 1982-ல் முடிந்தது எனில், அவர்களுக்காக (நாடற்றவர்களுக்காக) தங்களுடைய ஆய்வின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை குடியுரிமைச் சட்டத்தில் 2009-ல் திருத்தம் செயல்படுத்ப்பட்டது எப்படி? இரு நாட்டு ஒப்பந்தத்தில் ஒரு நாடு (இலங்கை), தொடர்ந்து தான் ஒப்புக்கொண்ட 3,75,000-ஐயும் தாண்டி, கிட்டத்தட்ட 8,00,000-க்கும் மேலானவர்களுக்கு, 1989, 2003, 2009 ஆகிய மூன்று குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள் மூலம் தீர்வைக் காணும். அதில் இன்னொரு நாடான (இந்தியா), தான் ஒப்புக்கொண்ட 6,00,000 பேரில் வெறும் 4,61,439 பேருக்கு மட்டுமே 2006-வரை இந்தியாவில் இந்தியக் குடியுரிமை வழங்கியிருக்கிறது. ஒப்பந்தப்படியே மீதமுள்ள 1,38,561 பேருக்கு இன்னும் கொடுக்கவில்லை.
ஒப்பந்தத்தில் விடுபட்ட அந்த மக்கள் தன் நாட்டில், தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்தும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முன்வரவில்லை. அப்படி இந்தியா முன்வரவில்லை எனில், அதற்கு அவர்கள் இலங்கை ஆவணங்களை வைத்திருக்கிறார்கள், oFERR India போன்ற நிறுவனங்கள் வாதிடுகிறது; அதற்கு தங்களைப் போன்றவர்கள் சரி என்பது போலவும், இலங்கையர்கள் இந்தியாவில் குடியுரிமை கோருவது சட்டத்திற்கு புறம்பானது என்பது போலவும் கடந்து போகிறீர்கள் எனில், இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, தமிழர் நிலங்கள் பறிபோய்விட்டது, ஆதலால் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைப்பதே சரி என வாதிடும் தமிழ் அரசியல் கட்சியாளர்கள் பேசும் அரசியல் செயல்பாட்டிற்கும் தங்களுக்கும் இருவேறு கருத்து இல்லை என்பது போலவும், இந்தியாவிலுள்ள இந்திய வம்சாவளி மற்றும் நாடற்றவர்களையும் மனிதர்களாகப் பார்க்காமல் அரசியல் பொருளாகப் பார்க்கும் தன்மையாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
எனவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் மற்றும் நாடற்றவர்களை அவர்களது விருப்பப்படி இந்தியாவுடன் பேசி, அவர்களுக்கான இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தருவது தான் தங்களைப் போன்ற இந்திய வம்சாவளித் தமிழர், மலையகத் தமிழர் எனும் அடையாளத்துடன் இருக்கும் தாங்கள் செய்ய வேண்டியது.
அதைவிடுத்து, மக்களைத் தங்கள் அரசியல் செயல்பாட்டிற்கு அரசியல் பொருளாகப் பார்க்கும் வேலைக்குத் துணைபோவது அவ்வளவு சரியாகப்படவில்லை.
நன்றி

கருத்துகள் இல்லை: