குலசிங்கம் வசீகரன் : ஒரு வார காலத்துக்குள் இரண்டு தடவைகள் பலாலி விமானநிலையத்துக்கு இந்தியாவிலிருந்து வருகைதந்த விமானங்கள் தரையிறங்காமல் திரும்பிச் சென்றிருக்கின்றன.
தரையிறங்க முடியாமைக்கான காரணமாக, 'ஓடுபாதை கண்ணுக்கு புலப்படாமை', (invisibility of the runway) கூறப்பட்டது.
கடும் மழை, பனிப்புகார், தாழ்வான மேகங்கள், வளி மாசு மற்றும் புகை மூட்டம் என்பன இந்த 'ஓடுபாதை கண்ணுக்கு புலப்படாமை' நிலை உருவாக ஏதுவான சில காரணிகளாகும்.
பலாலி விமான நிலையத்தைப் பொறுத்தவரை இரவுநேரத்தில் செயற்பாடுகள் இடம்பெறாது என்ற தீர்மானத்துடனேயே 2019ஆம் ஆண்டு முதலாம் கட்ட அபிவிருத்தி இடம்பெற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பலாலி விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 30 மீட்டர்கள் ஆகும், இது இந்தியாவிலிருந்து வரும் விமானத்தின் (ATR72) இறக்கைகளின் அளவை (27 மீட்டர்கள்) விட சற்றே பெரியதாகும். இதுவும் ஒரு காரணம், ஓடுபாதை சரியாக கண்ணுக்கு புலப்படாத நிலையில் விமானத்தை தரையிறக்க முடியாமைக்கு.
இவ்வாறான தருணங்களில் விமானத்தை தரையிறக்க முயற்சித்தால்,
- விமானம் நிலத்தை தொடவேண்டிய வேகத்தை விடவும் கூடிய வேகத்தில் நிலத்தை தொடக்கூடும்.
- விமானம் ஓடுபாதையின் ஓரத்தில் நிலத்தை தொடக்கூடும்.
- விமானம் ஓடுபாதையில் இடைநடுவில் நிலத்தைத் தொடக்கூடும்.
இவைகள் அனைத்துமே விமான விபத்தொன்றை ஏற்படுத்தவோ பயணிகளை ஆபத்துக்குள்ளாக்கும் சந்தர்ப்பமாகவோ அமையலாம்.
விமானிகள் விமானத்தைத் தரையிறக்க ஏதுவான உயரத்துக்கு வந்ததும் விமான ஓடுபாதை கண்ணுக்கு புலப்படவில்லை என்றால் ஓரிரெண்டு தடவைகள் வானில் வட்டமிட்டு ஓடுபாதை புலப்பட வாய்ப்புக்களை ஆராய்வார்கள். பயணிகள் விமானப் போக்குவரத்து விதிகளுக்கு அமைவாகவே விமானிகளது செயற்பாடுகள் அமையும், அதனாலே பாதுகாப்பற்ற நிலைமை என்றால் விமானத்தை தரையிறக்காமல் வேறு விமான நிலையங்களுக்கோ அல்லது திரும்பியோ செல்கிறார்கள்.
நவீன தொழிநுற்ப வசதிகள் உள்ள விமான நிலையங்களில் விமானநிலைய கட்டுப்பாட்டுக்கு கோபுரத்தில் உள்ள வழிகாட்டும் கருவிகள் (navigation equipment) உதவியோடும், தரையிறக்க நடைமுறைகளின் (instrument approach procedures) பிரகாரமும் விமானத்தைத் தரையிறக்க முடியும். இதற்குரிய பயிற்சிகளை விமானி பெற்றிருப்பதும், விமானநிலைய கட்டுப்பாட்டுக்கு கோபுரத்துக்கும் விமானிக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடும் இங்கு முக்கியமாகும். ஆனால் இவைகள் எவையும் பலாலி விமான நிலையத்தைப் பொறுத்தவரை சாத்தியமற்றவை.
யுத்த காலத்தில் மண்ணெண்ணெயில் எரியும் சூள் விளக்குகளை விமானப்படையினர் பயன்படுத்தியிருந்தார்கள், ஆனால் சர்வதேச விமான நிலையமொன்றில் பயணிகள் விமானப் போக்குவரத்து விதிகளின் பிரகாரம் அவ்வாறான விளக்குகளைப் பயன்படுத்த முடியாது.
அவ்வாறெனில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் விமானத்தை தரையிறக்க என்ன வழி? விமானநிலைய ஓடுபாதையில் சமிக்சை விளக்குகள் பொருத்துவதே ஒரே தீர்வாகும்.
அந்த வகையில்
- ஓடுதளத்தின் எல்லைகளைக் குறிக்க, அதன் ஓரங்களில் அமைக்கப்படும் விளக்குகள் (Runway edge lights).
- ஓடுதளம் தொடங்கும் இடத்தைக் குறிக்கும் விளக்குகள் (Threshold lights).
- விமானம் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த, ஓடுதளத்தின் மையக்கோட்டில் அமைக்கப்படும் விளக்குகள் (Runway centreline lights).
- விமான ஓடுபாதை முடிவு விளக்குகள். (Runway end lights)
- விமானத்தை ஓடுதளத்தை நோக்கி வழிநடத்தும் அணுகு விளக்கு அமைப்புகள் (Approach lighting systems - ALS).
என்பன உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
இந்த விளக்குகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைய குறித்த அளவுகளில் குறித்த இடைவெளியில், குறித்த வர்ண ஒழுங்கில் அமைக்கப்பட வேண்டும்.
பலாலி சர்வதேச விமான நிலையத்தைப் பொறுத்தவரை, சர்வதேச தரத்தில் அடிப்படை ஓடுபாதை விளக்கு அமைப்பை (runway lighting system) நிறுவுவதற்கு, அண்ணளவாக 1 மில்லியன் முதல் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம்.
இந்த வருடம் இத்தனை விமானங்கள் பலாலியில் தரையிறங்கியுள்ளன, ஜெட் விமானங்களும் வெளிநாட்டு தனியார் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் தரையிறங்கியுள்ளன, இத்தனை பயணிகள் இந்த விமான நிலையத்தனூடாகப் பயணித்திருக்கிறார்கள் என்று பெருமைபேசுவதை விடுத்து, கடந்த வருடம் பலாலி விமான நிலையம் ஈட்டிய வருமானத்தையும், அதனடிப்படையில் இந்த விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் மூலம் ஈட்டப்படக்கூடிய வருமானத்தை பற்றியும், அதனடிப்படையில் விமான நிலைய அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்களையும் விமானபோக்குவரத்து அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.
மற்றோரு மத்தளை விமான நிலையமாக ஆகிவிடக்கூடாது என்ற சாக்குபோக்கான பதிலை இனியும் கூறிக்கொண்டிருக்கக்கூடாது.
விமான நிலைய மற்றும் துறைமுக அபிவிருத்தியை நீண்ட காலமாக நாம் கோரி நிற்கிறோம், ஆனால் தமிழர் தரப்பிலிருந்து அரசோடு இந்த விடயத்தில் காத்திரமான, வெளிப்படையான உரையாடல்களை நடத்த ஏதுவான சூழ்நிலைகளை நாம் உருவாக்கத் தவறிவிட்டோம்.
ஒவ்வொரு பிரச்சனையும் எம்மை நெருங்கும் போதும் அந்தப் பிரச்சனை சார்ந்து பேசிவிட்டு மறுநாள் எங்கள் பாடு என்று செல்லும் சமூகமாக நாம் இருக்கும் வரை ஒன்றும் இங்கு மாறப்போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக