சனி, 2 மார்ச், 2024

ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்... ஸ்டாலின் முடிவு? சீனியர்கள் அதிர்ச்சி! Aara

மின்னம்பலம் :  திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கூட்டணித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் வாழ்த்து சொன்ன காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்… தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர், பாஜக தலைமையிலான கூட்டணி ஆகிய நான்கு முனை போட்டி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதேநேரம் பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் தேசியத் தலைமையின் திட்டம். அதை வைத்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதும் பாஜகவின் தொடர் திட்டம்.

இந்த நிலையில்தான் நெல்லையில் பேசிய பிரதமர் மோடி, ‘திமுக தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படும்’ என்று கடுமையாக பேசினார். இதன் பின்னணியில் வரும் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கும்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக பிடித்து சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, இந்த வகையில் குறைந்தபட்சம் பத்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி திமுகவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதுதான் பாஜகவின் திட்டம்.

இது தொடர்பாக ‘பத்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்த ஐ.டி.-இ.டி. கூட்டணி-ஸ்டாலினுக்கு எதிராக மோடி பிளான்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 29 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த எச்சரிக்கைத் தகவல் திமுக தலைமைக்கும் ஏற்கனவே கிடைத்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினே சில அமைச்சர்களை நேரடியாக அழைத்து, ‘உங்களுக்கு எதிராக இ.டி. ரெய்டு வரக் கூடும், ஐ.டி. ரெய்டு வரக் கூடும் எச்சரிக்கையாக இருங்கள்’ என்றெல்லாம் முன்னெச்சரிக்கை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து பாஜக தீட்டும் இந்த திட்டம் பற்றியும் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்து, இது தொடர்பாக சீனியர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

No cash for vote stalins decision

அப்போது முதல்வர், ‘ஏற்கனவே 2019ல வேலூர் தேர்தலை பணம் கைப்பற்றப்பட்டதால நிறுத்தினாங்க. இப்ப அதேபோல பெரிய அளவுல பண்ண பிளான் போட்டிருக்காங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். மோடி எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். அதனால நாம தேர்தல் வேலைகள்ல கவனமா இருக்கணும்.

வாக்குக்கு பணம் கொடுக்காமலேயே நம்மால ஜெயிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தர்றோம். புதுமைப் பெண் திட்டத்துல மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் தர்றோம். அதை இப்ப மாணவர்களுக்கும் கொடுத்திருக்கோம். இலவச விடியல் பஸ் பயணம் பெண்களுக்குக் கொடுத்திருக்கோம். இதையெல்லாம் மீறி ஓட்டுக்கு பணம் கொடுக்கணுமா? வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்குற நிலைமையிலதானே இருக்கோம்?’ என்று சீனியர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

அதற்கு சீனியர்கள், ‘தலைவரே… திமுக பணம் கொடுக்காம இருந்தால் அதிமுக, பாஜக கட்சிகளும் பணம் கொடுக்காம இருக்கணுமே… அவங்க நிச்சயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பாங்க. அதிமுகவுலயும் பணக்காரங்களை மட்டும்தான் வேட்பாளரா தேர்வு செஞ்சிக்கிட்டிருக்காரு எடப்பாடி. பிஜேபியும் இந்த தடவை எப்படியாவது வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கணும்னு சொல்லி பணம் கொடுக்க ரெடியாகிட்டாங்க. திமுக மட்டும் பணம் கொடுக்கலைன்னா அது நமக்குத்தான் பாதகமாகும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்,

அப்போது ஒரு மூத்த அமைச்சர், ‘அதிமுக காசு கொடுத்தாலும் விட்ருவாங்க. பிஜேபி காசு கொடுத்தாலும் விட்ருவாங்க. ஆனா திமுகவை மட்டும்தான் ஒன்றிய அரசோட ஏஜென்சிகள் பிடிக்கும். ஏன்னா பிரதமரே நம்மளை நோக்கித்தானே பாய்ஞ்சிட்டுப் போயிருக்காரு. அதனால நாம கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லதுதான். சமீபத்துல நடந்த ஈரோடு தேர்தல்ல சில பகுதிகள்ல டோக்கனை கொடுத்துட்டு தேர்தல் முடிஞ்ச பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோம். அவங்க வேலூர் மாடலை அப்ளை பண்ண ரெடியானாங்கன்னா, நாம ஈரோடு மாடலை அப்ளை பண்ணுவோம். டோக்கனை கொடுத்துட்டு தேர்தலுக்குப் பிறகு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின், ‘எனக்கு என்னமோ ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்னு தோணுது. யோசிப்போம்’ என்று இந்த ஆலோசனையை முடித்திருக்கிறார்.

தற்போது இந்த ஆலோசனை பற்றிய விவாதம்தான் திமுக சீனியர்களுக்குள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: