வியாழன், 29 பிப்ரவரி, 2024

திமுக VS அதிமுக VS பாஜக.. தமிழ்நாட்டில் வெற்றி யாருக்கு? குமுதம் கருத்துக் கணிப்பு

 tamil.oneindia.com  -Jeyalakshmi C :  சென்னை: லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுக 33 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பணியை தொடங்கி விட்டன.
அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று இன்னமும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.


அதிமுக கடந்த லோக்சபா பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் திமுக 38 தொகுதிகளை வென்றது. இந்த தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி பிரிந்து விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டணி முடிவாகும் என்று பாஜகவும் அதிமுகவும் கூறி வருகின்றன. தேமுதிக இன்னமும் சரியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஊடகங்களில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெரும் எத்தனை சதவிகித வாக்குகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. லோக்சபா தேர்தலில்
திமுக கூட்டணி 32 +1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி உள்ளது எந்த கட்சி வெளியேறப்போகிறது என்று இன்னமும் முடிவாகவில்லை. எனவே அதிமுக கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 1 தொகுதியில் வெற்றி பெறும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர், பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: