ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

விஜயதரணி போன்று கோவையிலும் விக்கெட் விழப்போகிறது” : அண்ணாமலை

 மின்னம்பலம் - christopher :  விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் இருந்து முக்கிய விக்கெட் விழப்போகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. டெல்லியில் இன்று 2000 கோடி ரூபாய் மதிப்பு போதை பொருள் கடத்த முயன்ற கும்பலை பிடிபட்டிருக்கிறார்கள்.
அவர்களில் முக்கிய குற்றவாளியாக திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்துள்ளது. அவரது சகோதரர் விசிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இப்படி போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


ஜாபர் சாதிக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை சென்று தமிழக டிஜிபியின் கையால் விருது வாங்கியுள்ளார். போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எப்படி டிஜிபியிடம் விருது வாங்க முடியும்?

திமுக முதலமைச்சரின் குடும்பம் சினிமாவில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜாபர் கொடுக்கும் பணம் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனத்திற்கு கூட செல்கின்றதா என்ற சந்தேகம் வருகிறது.

ஜாபர் பிடிபட்ட நிலையில் அவரை தற்போது அவசரமாக கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளித்து டெல்லி காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.

முதலமைச்சர் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை வைக்கிறது” என்றார்.

தலைவர்களை இழுக்கிறோம்!

மேலும் அவர், “232 தொகுதிகளில் என் மண் எண் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. நாளை மறுதினம் பல்லடத்தில் நடைபெற இருக்கும் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

2024 இன்று பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

விஜயதரணி போன்று நாளை மாலை 5 மணிக்கு கோவையில் ஒரு பெரிய பிக்சாட் பாஜக பக்கம் விழ போகிறது.

தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கூட்டணி பங்கீடு குறித்து திமுக பேசி அக்கட்சி வார்ம் அப் பண்ணிக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். நோட்டு பெட்டிக்கும் ஓட்டு பெட்டிக்கும் சீமான் அண்ணன் சுற்றுவது போல தெரிகிறது.

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகமாக தான் உள்ளது. அதனை குறைப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் செல்லூர் ராஜூவிடம் சொல்ல சொல்லுங்கள். தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் தற்பொழுது எனக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்..

அதே பாஷையில் தான் பதில்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை.  சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது எங்களது பாஷையும் அப்படி தான் இருக்கும்.

சிலருக்கு இங்கு மனதுடன் மூளை கனமும் இருக்கிறது. அவர்களுக்கு அதே பாஷையில் தான் பதில் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

பாஜக கூட்டணி எப்படி?

பாஜக கூட்டணி குறித்து நாளை மறுநாள் பிரதமர் நிகழ்வு நடைபெறும்போது பார்ப்பீர்கள். பிரதமரின் கரத்தை யாரெல்லாம் வலுப்படுத்த நினைக்கிறார்களோ எல்லோரையும் வரவேற்கிறோம்.

தமிழகம் சாக்கடை அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும் என நினைக்கிறேன். பெரிய கூட்டணி இருக்கும் பெரிய மாற்றத்திற்கான அழைப்பாக பிரதமரின் வருகை இருக்கும்.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 2026 தேர்தலுக்கான மாற்றமாக 2024 தேர்தல் இருக்கும்” என்று அண்ணாமலை பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமலிங்கம்

கருத்துகள் இல்லை: