திங்கள், 13 பிப்ரவரி, 2023

சுக்கு நூறா நொறுங்குதே! பாஜகவின் ‘திகுதிகு’ கணக்கு.. அவரை வச்சே எடப்பாடியை ‘காலி’ செய்யுதாமே டெல்லி?

இப்படியே இருக்கட்டும்

tamil.oneindia.com -  Vignesh Selvaraj  :  சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது எனச் சொல்லப்படும் நிலையில்,
"எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருந்து அதிகாரம் நழுவிச் செல்கிறது,
தமிழ்மகன் உசேனை தலைமைப் பதவிக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கும்" என பகீர் கிளப்பி இருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்துப் போடும் அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு கிடைத்திருப்பதன் மூலம், எல்லோரையும் விட அவரே பலசாலியாகி இருக்கிறார்,


இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவரையே தொண்டர்களும் ஆதரிப்பார்கள் என்ற பார்வையை முன்வைக்கிறார் கேசி பழனிச்சாமி.
எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவரும், அதிமுக முன்னாள் எம்.பியுமான கே.சி.பழனிச்சாமி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இங்கே:
இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை
கேள்வி : ஈபிஎஸ் அணி வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது.. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை அழைக்கிறார்..எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான ஸ்டாண்டை பாஜக முழுமையாக எடுத்து விட்டதா?

பதில் : உச்ச நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டால் தான் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் செல்லும் என்று உத்தரவிடவில்லை. அண்ணாமலை கூப்பிடுவதால் மட்டும் ஈபிஎஸ் பொதுச் செயலாளர் ஆகிவிடமுடியாது. அவர் பாஜகவில் வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கலாம். பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்க வேண்டியது அதிமுக தொண்டர்கள், அதனை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம். இந்த இரண்டுமே நடக்கவில்லை.

அதிகாரத்திற்கு வந்த மூன்றாவது நபர்
கேள்வி : அப்படியென்றால் அதிமுக பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சொல்கிறீர்களா?
பதில் : ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு பேரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மூன்றாவதாக தமிழ் மகன் உசேன் கையெழுத்துக்குத்தானே உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது? அதிமுக பொதுக்குழுவும் ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்துப் போடும் உரிமையை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் பதவி இன்னும் நிலுவையில் இருக்கிறது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஈபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டார். இன்றைய தேதியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.

எடப்பாடி கையில் இல்லை
2017ல் நடந்த வழக்கில், அதிமுக அவைத்தலைவர் மசூசூதனன் தரப்புக்கு அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் என தீர்ப்பு வந்தது. அதன்படி, மதுசூதனன் இருக்கும் தரப்பான ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்ஸுக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதே அடிப்படையிலேயே இன்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுவார் என தீர்மானம் நிறைவேற்றி அதன்படி செயல்பட்டிருந்தால் அதிமுக எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்றதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தமிழ்மகன் உசேன் தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

இப்படியே இருக்கட்டும்
கேள்வி : எடப்பாடி பழனிசாமி கையை விட்டு அதிகாரம் போய்விட்டது எனச் சொல்ல வருகிறீர்களா?
பதில் : அதிமுகவில் இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்துப் போட்டிருப்பவர்கள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அதன்பிறகு ஓபிஎஸ் - ஈபிஎஸ். இப்போது முதல் முறையாக தமிழ்மகன் உசேனுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எனில் யார் இப்போது அதிமுகவின் தலைவர்? இப்போதைய நிலையைப் பார்த்து தொண்டர்களுக்கு என்ன தோன்றுகிறது.. அதிமுகவில் அனைவரும் சுறுசுறுப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளும் ஏற்றுக்கொண்டனர். பாஜகவும் ஏற்றுக்கொண்டது, கூட்டணி கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதே நிலை நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரலாம் என்ற எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. இதேபோல, ஒன்றுபட்ட அதிமுகவுக்கு தமிழ்மகன் உசேன் தலைமை வகித்து, இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போடட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஒரே ஸ்கிரிப்ட்
கேள்வி : சட்ட ரீதியாக இப்படி ஒரு ஏற்பாடு என்றாலும், அரசியல் ரீதியாக கட்சியில் தமிழ்மகன் உசேனுக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்குமா?

பதில் : சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது எல்லா அமைச்சர்களும் அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்களே.. அவர் பதவியில் இல்லாதபோதே அவர் பதவிக்கு வரவேண்டும் என்று போய் கெஞ்சினார்களே.. அதே சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி விரட்டினார்களே.. அதிமுகவில் யார் பலசாலி என்றால் இரட்டை இலை சின்னத்திற்கு யார் கையெழுத்து போடுகிறார்களோ அவர் தான் பலசாலி. சின்னம் இருப்பவரிடம் தான் தொண்டர்கள் இருப்பார்கள். சசிகலா வீழ்ந்த கதையும், எடப்பாடி பழனிசாமி வீழப்போகிற கதையும் பார்த்தால் இரண்டு ஸ்கிரிப்ட்டும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
பாஜக ஐடியா

கேள்வி : எடப்பாடி பழனிசாமி வீழப்போகிறார் என்ற புள்ளிக்கு எப்படி நகர முடியும்?
பதில் : ரொம்ப சிம்பிள். உச்ச நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு வர தாமதமாகிறது. இன்னொரு இடைத்தேர்தல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். நீதிமன்றத்தில் என்ன சொல்வார்கள். அன்று ஏ ஃபார்ம் பி ஃபார்மில் கையெழுத்து போட்ட தமிழ்மகன் உசேனே இப்போதும் கையெழுத்து போடட்டும் என்று சொல்வார்கள். பாஜக என்ன நினைக்கும்? பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் போய்விடும் என்கிறீர்கள். சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரையே தலைவராக வையுங்கள் என்று கூறக்கூடும். சினிமாவில் ஒரு ஃபார்முலாவில் படம் சக்சஸ் ஆனால், அதே ஃபார்முலாவில் பல படங்கள் வரும், அதுபோலத்தான் இதுவும்.


அன்றும்.. இன்றும்..
கேள்வி : 2022 ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவின்போது, எடப்பாடி பழனிசாமி ஒரு சீட்டை எடுத்து தமிழ்மகன் உசேனிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்லி நான் சொல்லும்போது அதைப் பேசுங்கள் என்று சொன்னார். அந்தளவுக்கு எடப்பாடிக்கு அணுக்கமாக இருப்பவர் எப்படி எடப்பாடி பழனிசாமியை தாண்டிப் போவார்?

பதில்: நான் இன்னொரு காட்சியை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஈபிஎஸ் கூவத்தூரில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது சசிகலா, ஈபிஎஸ் தோளைத் தட்டி என் தம்பி எடப்பாடி பழனிசாமி என்றார். ஈபிஎஸ் கண்ணீர் விட்டு காலில் விழுந்து எழுந்தார். அன்று சசிகலா என்ன நினைத்திருப்பார்? உலகம் என்ன நினைத்தது? சசிகலாவை எடப்பாடி பழனிசாமி விரட்டுவார் என்று யார் எதிர்பார்த்தது? காலங்கள் மாறும்போது கருத்துகள் மாறும்.. கருத்துகள் மாறும்போது காட்சிகள் மாறும்.

பின்னால் பாஜக
கேள்வி : எடப்பாடி பழனிசாமிக்கு சமூக ரீதியிலான பலம் எல்லாம் பின்புலமாக இருந்தது அவரது அசுர வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. தமிழ்மகன் உசேனுக்கு அப்படியான பலம் இல்லையே?

பதில் : ஒரு சமூக ரீதியான பின்புலம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்பதே மற்ற சமூகத்தினர் மத்தியில் ஒரு பலவீனம் தானே? ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆரோ பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் தான் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களாக இருந்தார்கள். மத்திய பாஜக அரசு, தாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வாக்குகளைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரையே சில காலத்திற்கு அதிமுகவிற்கு தலைமை தாங்கச் சொன்னால், எடப்பாடி பழனிசாமி புழலிலோ, பரப்பன அக்ரஹாரத்திலோ, திகாரிலோ தான் இருப்பார்.


It is said that Edappadi Palaniswami has received recognition, But former ADMK MP K.C. Palaniswami says that "Power is slipping out of Edappadi Palaniswami's hands, BJP will try to bring Tamilmagan Husain to the post of leader"

கருத்துகள் இல்லை: