tamil.oneindia.com : பல நிமிடங்கள் ஓடிய பிறகும் கூட, மாணவர்களை நிற்கவிடாமல் ஆசிரியர் ஓடச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவன் கவிப்பிரியனுக்கு கடுமையாக மூச்சிறைத்துள்ளது. ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஆசிரியர் கொடுத்த இரக்கமற்ற தண்டனையால் மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், அவர்களை மைதானத்தில் ஓட வைத்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரக்கமற்ற ஆசிரியர்கள்
சமீபகாலமாக, மாணவர்கள் மீது சில ஆசிரியர்கள் அதிகப்படியான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை பார்க்க முடிகிறது.
மாணவர்களை பெற்றோர்கள் ஸ்தானத்தில் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதான். இதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், கண்டிப்பு என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும், குரூரத்தையும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அண்மைக்காலங்களில் நிகழும் சம்பவங்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம்தான் நாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.
சத்தம் வந்ததால்
ஆத்திரம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடியை சேர்ந்தவர்கள் இளையராஜா – பாசமலர் தம்பதியர்.
இவர்களின் ஒரே மகனான கவிப்பிரியன் (13), அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கவிப்பிரியனின் வகுப்புக்கு கணித ஆசிரியர் செந்தில் செல்வன் செல்வதற்கு தாமதமாகியுள்ளது. இதனால் மாணவர்கள் சத்தம் போட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மொட்டை வெயிலில்..
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் செந்தில் செல்வன், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் ஓடுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, கடுமையான வெயிலில் மாணவர்கள் ஓடியுள்ளனர். பல நிமிடங்கள் ஓடிய பிறகும் கூட, மாணவர்களை நிற்கவிடாமல் ஆசிரியர் ஓடச் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவன் கவிப்பிரியனுக்கு கடுமையாக மூச்சிறைத்துள்ளது. ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
எனினும், அவரை விடாத ஆசிரியர் தொடர்ந்து கவிப்பிரியனை ஓட கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கவிப்பிரியனும் ஓட, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார்.
இருந்தபோதிலும், அவரை உடனடியாக ஆட்டோவிலோ, பைக்கிலோ அழைத்து செல்லாமல் சக மாணவனின் சைக்கிளில் அவரை அனுப்பி வைத்திருக்கிறார் ஆசிரியர். இதில் வழியிலேயே கீழே விழுந்து மாணவன் கவிப்பிரியன் பரிதாபகமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் ஆசிரியர் செந்தில் செல்வன் மீது புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக