ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஆக உயர்வு!’

BBC :  துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தநிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்க தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னும் சில பகுதிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் உயிருடன் மீட்டு வருகின்றனர்
பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள், உறைந்த வானிலை இருந்தபோதிலும், இன்னும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் .

7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தின் மையப்பகுதியான கஹ்ராமன்மாராஸ் என்ற தெற்கு நகரத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே இழுக்கப்பட்ட 70 வயதான மெனெக்சே ‘ உலகம் இன்னும் இருக்கிறதா’ என கேட்டு அழுதார்.

தெற்கு ஹடேயில் 123 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு வயது சிறுமி உயிருடன் காணப்பட்டதாக Hürriyet நாளிதழ் தெரிவித்துள்ளது,
துர்க்கியே மற்றும் சிரியா முழுவதும் குறைந்தபட்சம் 870,000 பேருக்கு உணவு உதவி தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளது .

நிலநடுக்கத்தில் 12,141 கட்டிடங்கள் இடிந்து அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: