வியாழன், 15 ஏப்ரல், 2021

வன்னி விவசாயிகள் இயக்க வரலாறு – பகுதி – 16

May be an image of tree and outdoors

Maniam Shanmugam : வன்னி விவசாயிகள் இயக்க வரலாறு – பகுதி – 16    : பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும்போது 9ஆம் மைல் கல்லில் வருவது தருமபுரம் குடியேற்றத் திட்டம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல அன்றைய காலகட்டத்தில் இங்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் கூலி விவசாயிகள். அனுராதபுரம், மதவாச்சி போன்ற இடங்களில் சொந்தக் காணிபூமியுடன் வாழ்ந்த இவர்கள் 1958 இனவன்செயலில் பாதிக்கப்பட்டதால் அகதிகளாகி இங்கு கொண்டுவரப்பட்டு, தலா அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு இருத்தப்பட்டவர்கள். இவர்களுக்கு மற்றைய குடியேற்றத்திட்டங்களில் வழங்கப்பட்டது போல எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்தத் தருமபுரத்தின் கிழக்கு எல்லையில் நெத்தலியாறு என்ற பெயரில் ஒரு சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீரைத்தான் தருமபுரம் மக்கள் தமது அனைத்துவிதமான அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தினர். அந்த ஆற்றில் ஓடும் நீர் தருமபுரத்துக்கு தென்மேற்காக உள்ள கல்மடுக்குளத்திலிருந்து வரும் உபரி நீர் என அறிந்தேன். 

இந்தக் கல்மடுக்குளத்திலிருந்துதான் கல்மடுவில் வழங்கப்பட்ட 10 ஏக்கர் மத்தியதர திட்ட வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படுவதுண்டு.

இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான கதையைச் சொல்ல விரும்புகிறேன். இறுதி யுத்த நேரத்தில் பூநகரியிலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கித் தொடர்ச்சியாகப் பின்வாங்கிவந்த புலிகள், ஒரு கட்டத்தில் இராணுவம் தருமபுரத்தை அடைந்தபொழுது, கல்மடுக்குளத்தை உடைத்துவிட்டதால் 200 வரையிலான இராணுவத்தினர் அந்தக் குளத்து நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டனர். பலருக்கு கல்மடு குளம் பற்றிய விபரம் தெரியாதாகையால் புலிகளின் ‘மதிநுட்டமிக்க வீரதீரச் செயலை’ எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால் இது ஒரு பொய்ச் செய்தி. உண்மை என்னவென்றால், கல்மடுக் குளத்தை உடைத்துவிட்டால் அதிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரால் ஒரு தனி மனிதன் கூட இறக்க நேரிடாது. அந்தளவுக்கு அது ஒரு சிறிய குளம். இதுபற்றி அந்தக் குளக்கட்டால் பல தடவைகள் பயணம் செய்த எம்போன்றோருக்கு நன்கு தெரியும். (இந்த விடயம் குறித்து அந்த நேரத்தில் ‘தேனீ’ இணையத்தளத்தில் கட்டுரையொன்றும் எழுதியிருக்கிறேன்)
நிற்க, விசுவமடுவில் ஏற்பட்ட தொடர்பு காரணமாகத்தான் எமக்கு தருமபுரத்திலும் தொடர்புகள் ஏறபட்டன. அந்தத் தொடர்புக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் தருமபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற தோழர். அவர் விசுவமடுவில் தோழர் ஆறுமுகண்ணையுடன் தங்கியிருந்து அவருக்கு உறுதுணையாகத் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். எமது பெரும்பாலான மார்க்சிய அரசியல் வகுப்புகள் ஆறுமண்ணையின் வீட்டில்தான் நடைபெறுவது வழமை. பெரும்பாலும் தோழர் வீ.ஏ.கந்தசாமிதான் வகுப்பு எடுக்க வருவார். (ஒருமுறை சீனாவில் பணிபுரிந்து கொண்டிருந்த தோழர் வீ.சின்னத்தம்பி விடுமுறையில் இலங்கை வந்திருந்தபோது விசுவமடுவுக்கு வந்து வகுப்பு எடுத்திருக்கிறார்.)
தோழர் தருமபுரம் கந்தசாமி பெரிய கல்லூரிப் படிப்புகள் எதையும் படித்திருக்காவிட்டாலும், எமது அரசியல் வகுப்புகளில் ஆர்வமுடன் பங்குபற்றி அங்கு கூறப்படும் விடயங்களை கூர்மையாக அவதானித்து வந்தார். அதன் விளைவாக தனது தருமபுரம் கிராமத்திலும் அவ்வாறான அரசியல் வகுப்புகளை நடாத்த வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவே எமக்குத் தருமபுர இளைஞர்களுடன் அவர் ஏற்படுத்தித் தந்த தொடர்பு. ஏற்கெனவே விசுவமடுவில் கூலி வேலை செய்ய வரும் தொழிலாளர்களுடன் எமக்குத் தொடர்புகள் இருந்தாலும், இப்பொழுதுதான் தருமபுர இளைஞர்களுடன் முதன்முதல் தொடர்பு ஏற்பட்டது.
தோழர் கந்தசாமி ஆரம்பத்தில் அறிமுகப்படும்திய தருமபுரம் தோழர்களில் சிலரின் பெயர்கள் வருமாறு:
சுந்தரலிங்கம், அவருடைய தம்பி ராசு (இவர் பின்னர் பாம்பு தீண்டி இறந்துவிட்டார்), மணியம், புஸ்பராசா, சந்திரன், பொன்னுச்சாமி (இவர் தோழர் கந்தசாமியின் ஒன்றுவிட்ட சகோதரர்) இளங்கோ மற்றும் சிலர். (54 வருடங்கள் கடந்துவிட்டபடியால் சிலரது பெயர்களை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.) பின்னர் தோழர் ஆறுமுகண்ணை தருமபுரத்தில் திருமணம் செய்ததால் அவர் மூலமாக எமது தொடர்புகள் மேலும் வலுப்பட்டன. (கடைசி யுத்த நேரத்தில் எமக்குத் தெரிந்த பலரை நாம் இழந்தோம். அதில் விசுவமடுவில் வாழ்ந்த மண்டைதீவைச் சேர்ந்த தோழர் சி.தா.முத்துலிங்கம் முக்கியமானவர். அத்துடன் தருமபுரத்தைச் சேர்ந்த தோழர் கந்தசாமி உட்பட இன்னும் சிலர் காணாமல் போயினர். இந்த இறுதி யுத்த நேரத்தில் எனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும்கூட இறந்து போயினர்)
நாம் விசுவமடு, தருமபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் சங்க மற்றும் அரசியல் வேலைகளை ஆரம்பித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இலங்கைப் போக்குவரத்துச் சபை சாலைகளிலிருந்து தருமபுரம் வரையுமே பஸ் சேவைகள் நடைபெற்றன. அதற்கு அப்பால் இருந்த விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் போன்ற குடியேற்றத்திட்டங்களுக்குச் செல்பவர்கள் தருமபுரத்துக்கு அப்பால் உள்ள இரண்டு தொடக்கம் பத்துவரையான மைல்கள் மீதித் தூரத்தை நடந்தோ அல்லது துவிச்சக்கர வண்டி மூலமோதான் கடக்க வேண்டும். பின்னர் ஒரு கட்டத்தில் காரைநகர் இ.போ.ச. சாலையிலிருந்து பரந்தன் மற்றும் புதுக்குடியிருப்புக்கூடாக முல்லைத்தீவு வரை ஒரு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. (அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல போக்குவரத்துச் சாதனமான ‘தட்டிவான்கள்’ தருமபுரம் - விசுவமடு பகுதியில் பெருமளவு சேவையில் ஈடுபட்டிருந்தன)
எனது நினைவுக்கு எட்டிய வரையில் அப்பொழுது ஒரு சில கடைகளே தருமபுரத்தில் இருந்தன. நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், இன்று கடைகள் இல்லாத மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் பிறந்த எம்மைப் போன்ற பலருக்கு நாம் பிறக்கும்போதே எமது கிராமங்களில் சில சமூகக் கட்டமைப்புகள் இருந்தன. அவற்றில் இந்தக் கடைகள் உட்படப் பல விடயங்கள் அடங்கும்.
ஆனால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் புதிதாக உருவான இந்த மனிதக் குடியேற்றக் கிராமங்களில் விவசாயம், விற்பனை, கடைகள், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், மத வழிபாட்டுத்தலங்கள், பொழுதுபோக்கு என எல்லாமே புதிதாகத்தான் உருவாக்கப்பட வேண்டியிருந்தன. அதனால்தான் விசுவமடுவைவிட சுமார் 10 வருடங்கள் முன்னர் உருவாக்கப்பட்ட தருமபுரத்திலும் சில கடைகளே ஆரம்பத்தில் இருந்தன.
தருமபுரத்துக்கு பஸ்கள் வந்து திரும்பும் இடத்தில் துரைராசா என்பவரது ஒரு பலசரக்குக் கடையும், அதற்கு எதிரே ஜீவா என்பவரது ஒரு தேநீர்க்கடையும், நெத்தலியாற்றுக்கு அருகாமையில் ஒரு தையல்கடையும், ‘மூன்றாம் புளக்’ பகுதியில் ஆமர்ஸ் என்பவரது ஒரு முடி திருத்தகமும், அதற்கு அருகாமையில் ஒரு கள்ளுத் தவறணையும், சற்றுத் தள்ளி ஒரு அரசாங்க மருந்தகமும், தருமபுரம் நடுப்பகுதியில் ஒரு கனிஸ்ட பாடசாலையும் (இன்றைய மகாவித்தியாலயம்), அதற்குச் சற்றுத்தள்ளி ஒரு உப தபால் அலுவலகமும் இருந்ததாக நினைவு. தருமபுரம் மக்கள் மட்டுமின்றி, விசுவமடு படித்த வாலிபர் திட்டத்தைச் சேர்ந்தவர்களும் தமது தேவைகளுக்காக இந்தக் கடைகளுக்கே சென்று வந்தனர். வேறு வழியில்லை. பின்னர்தான் விசுவமடுச் சந்தியிலும் அங்குள்ள புளியடி என்ற இடத்திலும் சில கடைகள் உருவாகின. (இன்று விசுவமடுவில் ஏராளமான கடைகள் பல்கிப் பெருகியிருக்கும் என நினைக்கிறேன். 1972இன் பின்னர் நான் அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை))
அதேநேரத்தில் விசுவமடுவில் மூன்று ஏக்கர் காணி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட படித்த விவசாயிகளுக்கும், கூலித்தொழில் செய்யும் தருமபுர மக்களுக்கும் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சினைகள் என்பவை வித்தியாசமானவையாக இருந்தன. விசுவமடு விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு போதிய பணம், மானிய விலையில் பசளை கிருமிநாசினி, உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் வசதி, போக்குவரத்து வசதிகள், வரட்சி – வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்பட்டால் நிவாரணம் போன்ற பிரச்சினைகளே முன்னின்றன.
ஆனால் தருமபுரத்தில் வாழ்ந்த கூலி விவசாயிகளுக்கு உள்ள பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவை. அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் ஒழுங்கான வேலை, நல்ல குடிநீர், மற்றைய தேவைகளுக்கான தண்ணீர், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது, கசிப்பு உற்பத்தி மற்றும் பாவனையால் குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு வசதியில்லாமை, போதிய மருத்துவ வசதியின்மை போன்றவையாகும்.
மேலும் வளரும்….

கருத்துகள் இல்லை: