வியாழன், 15 ஏப்ரல், 2021

திமுக கண்டுகொள்ளாமல் விட்ட கதைகளின் வரலாறு! திமுகவுக்கு எதிராக urban legendகள் உலா?

Sridhar Subramaniam : நான் இன்னமும் 'கர்ணன்' படம் பார்க்காததால் படத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த சம்பவம் பற்றித் தெரியாது. படம் பார்த்தவர்களிடமும் அது குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்; படம் ஓடிடியில் வெளியானதும் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லி விட்டேன். (எனவே யாரும் தயவு செய்து கமெண்ட்டில் படத்தின் spoilerகளை விளக்க முயல வேண்டாம்.) நான் புரிந்து கொண்ட வரையில் அதிமுக ஆட்சி நேரத்தில் நடந்த ஒரு சாதிக் கலவர சம்பவத்தை திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக காட்டி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதற்கான வலுவான ஆதாரங்களை கொடுத்த பின்னரும் அதனை மாற்ற முனையவும் இல்லை என்றும் தெரிகிறது அப்படி மாற்ற மறுப்பது இயக்குனரின் தனிப்பட்ட முடிவு. தனது படைப்புரிமையில் அடுத்தவர் தலையிடக் கூடாது என்று அவர் நினைக்கலாம். ஆனால் இதே இயக்குனர் இதே படத்தில் உள்ள 'பண்டாரத்தி புராணம்' பாடல் முன்பு சர்ச்சையான பொழுது அதனை 'மஞ்சனத்தி புராணம்' என்று மாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது. தனக்கு சௌகரியமாக இருக்கும் பொழுது தனது படைப்புரிமையில் குறுக்கீடுகளை ஏற்றுக் கொள்கிறவர் இந்த விஷயத்தில் வலுவான ஆதாரம் இருந்தும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.
அதுவுமின்றி, இணைய திமுகவினர் இந்த சர்ச்சையை ஆக்ரோஷமாக அணுகுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'இதை சும்மா கண்டுக்காமலே விட்டிருக்கலாம்,' என்று நிறைய பேர் சொல்கிறார்கள். நானும் வழக்கமாக இந்தக் 'கண்டுக்காம விடுவதின்' ஆதரவாளன்தான். அது கற்பனை விஷயங்கள் பற்றியது.
ஆனால் திமுகவினர் குறிப்பிடும் சம்பவம் உண்மையான வரலாறாக இருக்கும் பட்சத்தில் இந்தப் படத்தின் மூலம் அதிமுக ஆட்சியில் நடந்த ஒரு சாதி வன்முறை திமுக ஆட்சியில் நடந்ததாக நிறைய பேர் நம்பி விடும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே திமுக பற்றியும் குறிப்பாக கலைஞர் பற்றியும் பல்வேறு சம்பவங்கள், கதைகள் உலா வருகின்றன. ராஜாஜி, காமராஜர் பற்றி கலைஞர் அவலமாக பேசினார் என்று இன்றும் நிறைய பேர் நம்பி அதனை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சோவே கூட நிறைய இடங்களில் தொடர்ந்து அதனை சொல்லிச் சொல்லி அதை உண்மை என்றே நிறைய பேர் நம்பி விட்டிருக்கின்றனர். அப்படி உண்மை என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். பின்னர் இது உண்மைதானா என்று தேடிய பொழுது கலைஞர் அப்படிப் பேசியதற்கு ஒரு ஆதாரமும் எனக்குக் கிடைக்கவில்லை. சோ உயிரோடு இருந்த பொழுது துக்ளக் அலுவலகத்துக்கும் கூட இது குறித்து சில ஈமெயில்கள் எழுதினேன். அதற்கும் பதில் வரவில்லை. ஒரு முகநூல் பதிவு கூட எழுதி 'வேறு யாரிடமாவது ஆதாரம் இருந்தால் பகிரலாம்,' என்று கேட்டதற்கும் பதில் கிட்டவில்லை. ++
ஆச்சரியம் என்னவெனில் அப்படி எழுதி இருந்த பதிவில் ஒரு இந்துத்துவ சார்பாளர் வந்து 'அப்படி தான் பேசவில்லை என்று கலைஞர் எப்போதாவது மறுத்திருக்கிறாரா?' என்று கேள்வி கேட்டிருந்தார். அதாவது அந்த செய்தியை கலைஞர் இதுவரை மறுக்காமல் இருந்ததால் அந்த செய்தி உண்மைதான் என்ற அர்த்தம் அவரது கமெண்ட்டில் தொனித்தது.
இப்படித்தான் இந்திரா பற்றியும் கலைஞர் பாலியல் ரீதியாக கிண்டல் அடித்ததாகவும் விமர்சனங்கள் எந்த ஆதாரமுமின்றி உலா வருகின்றன. ஸ்டாலின் இளமைக்கால விஷயங்கள் சில இன்றும் உண்மை போலவே சிலரால் பேசப்படுகின்றன.
இப்போது 'கர்ணன்' படத்தில் வரும் சாதிக் கலவர சம்பவம் குறித்து திமுகவினர் ஒன்றுமே பேசவில்லை; 'கண்டுக்காம கடந்து போய் விட்டார்கள்' என்று வைத்துக் கொள்வோம். அந்த சம்பவம் திமுக ஆட்சியில்தான் நடந்தது என்றே தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருங்கால சந்ததியை அதனை நம்ப வைத்து விட முடியும். சீன பஸ் ஸ்டாண்ட்டை அகமதாபாத் பஸ் ஸ்டாண்ட் என்று பெரும்பாலான இந்தியர்களை நம்ப வைக்க முடிந்தது. 2000 ரூபாய் நோட்டில் சிப் இருப்பதாக படித்தவர்களையே நம்ப வைக்க முடிந்தது. செம்பரம்பாக்க நேரத்தில் காணாமல் போன ஜெயலலிதாவை, அடிமை கும்பலை வைத்து ஆட்சி நடத்தியவரை மாபெரும் திறன் வாய்ந்த நிர்வாகி என்று தமிழர்களை நம்ப வைக்க முடிந்தது. 2ஜியில் 2 லட்சம் கோடி ஊழல் என்று நம்ப வைக்க முடிந்தது.
இதெல்லாம் செய்தவர்களுக்கு இந்த சாதி சம்பவத்தை திமுக கணக்கில் மாற்றி எழுதி வைக்க நெடு நாட்கள் தேவைப்படாது. இன்னும் பதினைந்து ஆண்டுகள் கழித்து யாராவது அதனை மேற்கோள் காட்டும் பொழுது 'அது அதிமுக ஆட்சியில நடந்தது ப்ரோ,' என்று சொன்னால், 'அப்போது திமுகவினர் அதனை மறுத்தார்களா என்ன?' என்று மேலே சொன்னது போல ஒருத்தர் கேள்வி கேட்கலாம். யாரும் மறுக்கவில்லை என்பதையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அது உண்மைதான் என்று நிறுவி விடலாம். திமுக ஆட்சியில் சாதிக் கலவரங்களே நடக்கவில்லையா என்று சிலர் சொல்வது அர்த்தமற்ற வாதம். நேரு பிரதமராக இருந்த பொழுதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று ஒருவர் சொல்லி அதனை மறுத்தால், நேரு ஆட்சியில் மதக் கலவரங்களே நடக்கவில்லையா? என்று கேட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்?
எனவே திமுகவினர் இதில் முன்வைத்த எதிர்ப்பு நியாயமானதுதான் என்று நம்புகிறேன். அந்த எதிர்ப்பை ஏற்றுக்கொண்டு மாற்றங்கள் செய்வதும் செய்யாததும் மாரி செல்வராஜின் படைப்புரிமையில் வரும் எனினும் மிகச்சிறிய எதிர்ப்பிலேயே பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று மாற்றியவர், இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பது தவறு என்பது என் நிலைப்பாடு. இணைய திமுகவினர் சில நேரங்களில் மிகவும் ஆக்ரோஷமாக தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் பதிவு செய்கிறார்கள் என்பது உண்மைதான். அந்த ஆக்ரோஷம் பல நேரங்களில் என்னை நோக்கியே கூட பாய்ந்திருக்கிறது.
ஆனால் இந்த விஷயத்தில் அந்த விமர்சனத்தின் பின் உள்ள கவலையை புரிந்து கொள்ள முடிகிறது. திமுகவுக்கு எதிராக பல்வேறு urban legendகள் இங்கே உலா வருகின்றன. அந்த லிஸ்டில் இதையும் சேர்த்து எழுதி விடுவார்கள். நாளைக்கு கேட்டால் 'நீங்கதான் அப்போ மறுக்கவே இல்லையே ப்ரோ!' என்றும் பழியை அவர்கள் மேலேயே போடுவார்கள்.
.

கருத்துகள் இல்லை: