செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பேக்கரி உரிமையாளரை அடித்து இழுத்துச்சென்ற உதவி ஆய்வாளர் : தொடரும் போலிஸ் அராஜகம் - வைரலாகும் CCTV காட்சி!

kalaignarseithigal.com :தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் இரவு 10 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மீது காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேக்கரி உரிமையாளர் ஒருவரை உதவி ஆய்வாளர் ஒருவர் தாக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 29ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த பேக்கரியை 10.30 மணியளவில் மூடச்சொல்லி, பேக்கரிக்குள் புகுந்து, அதன் உரிமையாளரை உதவி ஆய்வாளர் கணேஷ் தாக்கி, அவரது சட்டையைப் பிடித்து இழுத்துச்சென்றுள்ளார்.

கொரோனா தொடர்பாக தீவிர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே 10.30 மணியளவில் பேக்கரி உரிமையாளரை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், போலிஸார் சாமானியர்கள், வணிகர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர். போலிஸாரின் இத்தகைய கொடூரங்களால் மதுரை, சாத்தான்குளம் என மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனாலும், தொடர்ந்து போலிஸார் பொதுமக்களின் மீது வன்முறையைப் பிரயோகிப்பது தொடர்ந்து வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது

கருத்துகள் இல்லை: