திங்கள், 12 ஏப்ரல், 2021

நாங்கள்ளாம் எவ்ளோ படிச்சிருக்கோம் தெரியுமா? “இரட்டைநாவுடையாய் போற்றி”.. ஆரிய மாயையில் பேரறிஞர் அண்ணா கூறியது

May be an image of 3 people and text

 Jagadheesan LR  :   நேற்று:
“நாங்கள்ளாம் எம்புட்டு படிச்சிருக்கோம் தெரியுமா?”
“ஆஹா ஓஹோ ஆஹாஹா ஓஹோஹோ”
இன்று:
“படிப்பென்னங்க படிப்பு. எவ்ளவோ படிச்சாலும் படிக்காதவங்களையும் நாங்க ரொம்ப மதிக்கிறோம் தெரியுமா”
“பேஷ் பேஷ். நன்னாச்சொன்னேள் போங்கோ”
எதாவது ஒன்னுல நில்லுங்கவே. அதென்ன அங்கிட்டு ஒரு குத்து இங்கிட்டு ஒரு குத்து?
நீங்கள் யாரை எதிர்ப்பதாக சொல்கிறீர்களோ நீங்களும் அவர்களின் அதே மேட்டிமைத்தனத்தை அடைந்துவிட்டோம் என்கிற ஆணவ மொழியையே பேச ஆரபித்திருக்கிறீர்கள். நீங்களும் அவர்களாகவே ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனியேனும் உணருங்கள் பெரியாரியர்களே. மெத்தப்படித்த பெரியாரின் “பேரன்களே”.
தமிழ்நாட்டின் அரசு புள்ளிவிவரங்களின்படி இன்னும் சுமார் 50%  கல்லூரி படிப்பில் சேரவில்லை. அவர்கள் மத்தியில் இருக்கும் நீங்கள் அவர்களுக்காகவும் அரசியல் செய்வதாக பெருமை பீற்றிக்கொள்ளும் நீங்கள் “நாங்கள்ளாம் எவ்ளோ படிச்சிருக்கோம் தெரியுமா?” என்று முதல் நாளெல்லாம் ஆங்கில எழுத்துக்களின் பட்டியலைப்போட்டு காலரை தூக்கிவிட்டு கர்வம் காட்டுவதும் மறுநாளே “படிப்பெல்லாம் என்னங்க பெரிய விஷயம். பட்டப்படிப்பு படிக்காதவங்களையும் நாங்க மதிக்கிறோம் தெரியுமா? படிக்காத மேதைகள் வாழ்ந்த ஊர் இது தெரியுமா?” என்று மென்று விழுங்கி மருகுவதும் என்னவகையான பகுத்தறிவு?


“இரட்டைநாவுடையாய் போற்றி” என்று ஆரியத்தை பார்த்து சொன்னார் அண்ணா. இன்று அது அட்சரம் பிசகாமல் உங்களுக்கும் பொருந்துவதை என்ன சொல்ல?
கல்வி, அறிவு, தொழிற்திறன், செல்வம் என எல்லாமே தனிமனித சாதனை; குறிப்பிட்ட நபர்கள் மற்றும் ஜாதிகளால் மட்டுமே அது சாத்தியம் என்றது ஆரியம். அதை மறுத்த திராவிடர் இயக்கமோ கல்வி, அறிவு, தொழிற்திறன், செல்வம் எல்லாமே சமூக மூலதனத்தின் கூட்டுச்சாதனை என்றே கருதியது. அதனால் தான் எல்லாமும் எல்லோர்க்கும் சாத்தியம் என்று வாதிட்டது; போராடியது; அதில் முழு வெற்றி பெறாவிட்டாலும் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில்.
 

ஆனால் நேற்று நீங்கள் வெளிப்படுத்தியது ஆரியத்தின் மொழி. ஆரியத்தின் வாதம். மெத்தப்படித்த மேதைகள் நாங்களெல்லோரும் ஓரணியில் நிற்கிறோம் என்றீர்கள். எதிரில் எங்களைப்போல் படித்தவர்கள் யாரும் இல்லை என்று எகத்தாளம் வேறு பேசினீர்கள். பட்டம் படிக்காதவர்கள் முட்டாள்கள், ஜாதிவெறியர்கள் என்பது நீங்கள் சொல்லாமல் சொன்ன செய்தி.
அதில் இருக்கும் அபத்தமோ ஆபத்தோ உங்களுக்கு உறைக்கவில்லை என்பது உண்மையில் அதிர்ச்சியாகவே இருந்தது.
 

இதில் வெளிநாடு வாழ் தமிழ் மேதைகள் வேறு ஜோதியில் கலந்தது கண்கொள்ளாக்காட்சி. ஜல்லிக்கட்டின்போது குடும்பம் குடும்பமாக ஜல்லியடித்ததைவிட இது தேவலாம் தான்.
 

ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் பட்டப்படிப்பு படிக்காத 50% பேரிடம் நீங்கள் அரசியல் பேசுவதற்கான மொழி இதுவல்ல. அணுகுமுறையும் இதுவல்ல. “நீ மீசை வெச்ச ஆம்பளைன்னா ஒண்டிக்கு ஒண்டி வாடா” என்று சொல்லும்போது மீசை முளைக்காத 50% பெண்கள் அதை எப்படி பார்ப்பார்கள்? அப்படி சவால் விடுபவர்களை அவர்கள் எப்படி நம்புவார்கள்?
 

அதுபோலத்தானே பட்டப்படிப்பு படிக்காத 50% தமிழர்களை நீங்கள் உங்கள் வாதத்தால் நேற்று கைகழுவினீர்கள்? அந்த 50% தமிழர்கள் எங்கே போவார்கள்? அவர்களை பொய்யாகவேனும் மதிப்பதாக காட்டிக்கொள்ளும் ஜாதிச்சங்கத்துக்கும் மத அமைப்புகளுக்கும் அவர்கள் தானே மூலதனம்? 

அவர்களை உங்களைப்போன்ற college class neo elites சொல்லாலும் செயலாலும் ஏளனமாக ஒதுக்க ஒதுக்க அவர்களின் ஜாதி உணர்வையும் மத உணர்வையும் தூபம் போட்டுத்தூண்டிவிடுபவர்களுக்கு நீங்களே வழி செய்து கொடுக்கிறீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இறுதி விளைவு அது தான்.
அன்புமணிக்கு பதிலாகத்தான் அப்படி சொன்னோம் என்கிற 

மொன்னைவாதத்தை தூக்கிக்கொண்டு வராதீர்கள். அன்புமணியும் அவர் அப்பாவும் அரசியல் கட்சி என்கிற பெயரில் அப்பட்டமாக ஜாதிச்சங்கம் நடத்துகிறார்கள். அதற்காக நீங்களும் கட்சி அரசியலை கைவிட்டு இனிமேல் ஜாதிச்சங்க்ச்ங்கங்களை நடத்தப்போகிறீர்களா? எதிரியின் அரசியலை எதிர்கொள்வதற்கான வழியையும் மொழியையும் நீங்கள் எதிரியிடமிருந்து தான்கடன்வாங்குவீர்கள் என்றால் உங்களின் சுயத்தையே நீங்கள் தொலைத்து தலைமுழுகிவிட்டீர்கள் என்று தானே பொருள்? இனியேனும் பொறுப்போடும் பொறுமையோடும் பேசப்பழகுங்கள்.
 

பிகு: ஆரம்பப்பள்ளிக்கல்வியைக்கூட தாண்டாத பெரியாரும் காமராஜரும் கலைஞரும் போட்ட விதைகள் தான் இந்தியாவிலேயே அதிகமான மக்கள் தொகையாக தமிழ்நாட்டின் 50% பேரை பட்டதாரிகளாக்கியிருக்கிறது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கான்வெண்ட் படிப்பெல்லாம் படித்த ஜெயலலிதா முதல் ஆனப்பெரிய படிப்பெல்லாம் படித்த விநோத் ராய் போன்றவர்களின் அயோக்கியத்தனங்கள் தான் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் ஆகக்கேவலமான சீரழிவுக்கு இட்டுச்சென்றன. எனவே பொதுவாழ்வில் ஒருவருக்குத் தேவையான தகுதிகள் பட்டப்படிப்பல்ல; சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட அறிவுநாணயம்; தான் யாருக்கு சேவை செய்கிறோமோ அந்த மக்களை எந்த நிலையிலும் கைவிடக்கூடாது என்கிற  எதிர்பார்ப்போ முன் நிபந்தனைகளோ அற்ற தீராக்காதல். கலைஞர் வரை அது திராவிடர் இயக்கத்தலைமைகளுக்கு அது இயல்பிலேயே இருந்தது. காங்கிரஸ் கட்சியின் காமராஜரிடமும் அதை விதைத்து வளர்த்தவர் பெரியார். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அவரது பேரன்கள் college-class என்றொரு neo-elite club ஒன்றை கட்டமைக்கத்துவங்கியிருப்பது தான் காலத்தின் கோலம்.

கருத்துகள் இல்லை: