வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பாகிஸ்தானில் வசித்துவரும் பிரான்ஸ் குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்

daylithanthi : இஸ்லாமாபாத், பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு ஆதராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது. அதன் பின்னர் அந்த விவகாரம் சற்று தணிந்திருந்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சாத் ரிஸ்வி என்பவர் செயல்பட்டு வருகிறார். 

இந்த அமைப்பு சார்பில் பாகிஸ்தான் நாட்டில் பிரான்ஸ் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் தூதர் வரும் 20-ம் தேதிக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 

பிரான்ஸ் அரசுக்கு எதிராகவும், பிரான்ஸ் மக்களுக்கு எதிராகவும் பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் பிரான்சுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறையில் 2-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் அமைப்பு தடை செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த அமைப்பின் சாத் ரிஸ்வி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.         

இதையடுத்து, பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் குடிமக்கள் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன

கருத்துகள் இல்லை: