வெள்ளி, 12 மார்ச், 2021

சீட்டுக்கு குடும்பத்தினரின் சிபாரிசு... ஒட்டுமொத்தமாக நிராகரித்த ஸ்டாலின்?

vikatan : வேட்பாளர் தேர்வில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, `தனி ஒருவனாக’ இறுதிப் பட்டியலைத் தயார் செய்துவருகிறாராம் ஸ்டாலின். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு தி.மு.க-வுக்கு என்றைக்குமே சிக்கலாக இருந்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் திடீரென இளைஞரணி மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டபோது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் கட்சிக்குள் குடும்பத்தின் தலையீட்டை தலைவலியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம் கனிமொழி, செல்வி, முரசொலி செல்வம், உதயநிதி, மு.க.தமிழரசு என கருணாநிதி குடும்பத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்தமுறை சீட் வழங்க வேண்டும் எனப் பட்டியலை ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார்கள் என்கிறார் தி.மு.க சீனியர் ஒருவர். நம்மிடம் பேசிய அவர், ``குடும்ப உறுப்பினர்கள் சிபாரிசு பட்டியல் கொடுத்து, சுமார் ஒரு மாதம் முடியப்போகிறது. இறுதிப்பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பதால், கண்டிப்பாக நம் பட்டியலை ஸ்டாலின் பரிசீலித்திருப்பார் என்றே இதுவரை எண்ணிக்கொண்டிருந்தனர்.

ஆனால், நேற்றுதான் எல்லோருக்கும் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கிறது. குடும்பத்தினர் கொடுத்த பட்டியலை மொத்தமாகக் குப்பையில் வீசிவிட்டார் ஸ்டாலின். இது பற்றி குடும்பத்தினர் ஸ்டாலினிடம் பேசினார்கள். அப்போது, `எனது தலைமையில் நடக்கும் முதல் தேர்தல் இது. அதனால், இந்தமுறை என்னைச் சுதந்திரமாகச் செயல்படவிடுங்கள். வேட்பாளர் தேர்வில் ஐபேக் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்ததால்தான் இன்னொரு புதிய டீமை களமிறக்கி கிராஸ் செக் செய்தேன். தற்போது தி.மு.க போட்டியிடும் மொத்த தொகுதிப் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆட்சியமைந்ததும் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் என்னென்ன தேவை என்பதைக் கேட்டு செய்து கொடுக்கிறேன்’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார்.

மேலும், மனைவி துர்காவைத் தவிர வேறு எந்தக் குடும்ப உறுப்பினரையும் ஸ்டாலின் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. செனடாப் சாலை இல்லத்தில்தான் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் தங்கியிருந்தனர். தேர்தல் நெருங்கியதுமே, இருவரையும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் அவர்களது வீடுகளுக்குச் போகச் சொல்லி அனுப்பிவிட்டார். வேட்பாளர் பட்டியல் உட்பட கட்சிப் பணிகள் அனைத்தையும் `தனி ஒருவனாக’ ஸ்டாலினே கவனிக்கிறார். வேட்பாளர் பட்டியலை இரவில் தனியாக அமர்ந்து வெரிஃபை செய்கிறாராம். காலையில் கிளம்பி அறிவாலயம் வந்துவிடும் ஸ்டாலின், எங்கும் செல்லாமல் கட்சியினருடனேயே இரவு வரை இருந்துவிட்டுத்தான் செல்கிறார். ஸ்டாலினின் மாற்றத்தைப் பார்த்து குடும்பத்தினரே விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள்!” என்கிறார் அவர்.

கருத்துகள் இல்லை: