ஞாயிறு, 7 மார்ச், 2021

அமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..? அதிர்ச்சியில் இந்திய பணக்காரர்கள்..!!

 Prasanna Venkatesh  - tamil.goodreturns.in : உலக நாடுகள் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் சாமானிய மக்களும், நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் சரிவு, சிறு குறு தொழில் செய்வோருக்கு வர்த்தக இழப்பு என அதிகளவிலான பாதிப்புகளா எதிர்கொண்ட நிலையில், பெரும் பணக்காரர்கள் எப்போது விடவும் அதிகப்படியான பணத்தை இந்தக் காலகட்டத்தில் சம்பாதித்து உள்ளனர். இந்நிலையில் பெரும் பணக்காரர்கள் மீது புதிய வரி விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் செனட்டரான எலிசபெத் வாரென் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
2020ல் அமெரிக்கப் பொருளாதாரம் உலகிலேயே அதிகப் பணக்காரர்கள் வாழும் அமெரிக்கா 2020ல் கடுமையான பொருளாதாரச் சரிவு, கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு இழந்தனர். இதனால் அமெரிக்க நிறுவனங்களும், வர்த்தகங்களும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. ஆனால் இதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புப் பெருமளவில் உயர்ந்தது.


எலிசபெத் வாரென் பரிந்துரை இந்நிலையில் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் செனட்டரான எலிசபெத் வாரென் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில், அல்ட்ரா பில்லியனர் டாக்ஸ் விதிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு மூலம் 2020ல் மட்டும் அமெரிக்க அரசுக்குக் கூடுதலாக 114 பில்லியன் டாலர் அளவிலான தொகை வரியாகக் கிடைத்ததிற்கும் என இரு வரி அமைப்புகள் தெரிவித்துள்ளது.

அல்ட்ரா மில்லியனர் டாக்ஸ் இந்தப் புதிய அல்ட்ரா மில்லியனர் டாக்ஸ் மசோதா-வின் படி அமெரிக்காவில் 50 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையிலும் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்கள் மீது 2 சதவீத வரியும், 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்கள் மீது 3 சதவீத வரியும் விதிக்க வேண்டும் என்பது தான்

1,00,000 அமெரிக்கக் குடும்பங்கள் மேலும் இப்புதிய வரி அமெரிக்காவின் உயர் சமூகம் எனக் கூறப்படும் வெறும் 1,00,000 குடும்பங்களை மட்டுமே பாதிக்கும் என்பதால் அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த மசோதா பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவில் மொத்த வரி வருமானத்தில் கிட்டதட்ட 50 சதவீத தொகையை இந்தக் குடும்பங்கள் தான் செலுத்துகிறது.

அமெரிக்கப் பணக்காரர்கள் அமெரிக்காவில் தோராயமாக 650 பில்லியனர்கள் உள்ளதாகவும், அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.2 டிரில்லியன் டாலர் என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த 650 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு லாக்டவுன் அறிவித்து மொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்துப் போன மார்ச் 2020 முதல் சுமார் 44 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது.

பெரும் தலைகள் இப்புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெப் பிசோஸ் 5.7 பில்லியன் டாலரும், எலான் மஸ்க் 4.6 பில்லியன் டாலரும், பில் கேட்ஸ் 3.6 பில்லியன் டாலரும், மார்க் ஜூக்கர்பெர்க் 3 பில்லியன் டாலரும் வரியாகச் செலுத்த வேண்டும்.

இந்தியப் பணக்காரர்கள் 2020ல் இந்திய அரசுக்கு ஏற்பட்ட வரி வருமான சரிவை ஈடு செய்யும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையை உயர்த்தி வரும் நிலையில், பணக்காரர்கள் மீதான வரி விதிப்பு சாமானிய மக்களின் சுமையைப் பெரிய அளவில் குறையும். இதே போன்ற வரியை இந்தியாவிலும் விதித்தால் எப்படி இருக்கும்...? உங்கள் பதிலை கமெண்ட்-ஆகப் பதிவிடுங்கள்.

கருத்துகள் இல்லை: