வியாழன், 11 மார்ச், 2021

வேல்முருகன் பண்ருட்டியில் போட்டி! உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார்

hindutamil.in : திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் போட்டிடுகிறார். உதயசூரியன் சின்னத்தில் களம் காண உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இணைந்த நிலையில், அக்கட்சி 6 தொகுதிகளைக் கேட்டது. எனினும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 தொகுதிகளாவது வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் போட்டிடுகிறார். உதயசூரியன் சின்னத்தில் களம் காண உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் - திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள வேல்முருகன், 2001 முதல் 2011 வரை பாமக தலைமையில் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று மாலை திமுக கூட்டணிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: