திங்கள், 8 மார்ச், 2021

திமுக-வுடன் இணைப்பா? வைகோ அடுத்த கட்ட நகர்வு என்ன?

tamil.indianexpress.com : மாணவப் பருவம் முதல் திமுகவில் தீரமாக செயல்பட்டு வந்த வை.கோபால்சாமி என்கிற வைகோ பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளார். தமிழக அரசியலில் முக்கியதலைவராக திகழ்ந்து வருகிறார். திமுகவில் முக்கிய தலைவராக இருந்த வைகோ திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, வைகோ 1994ம் ஆண்டு மே 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது திமுகவில் இருந்து 9 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்து வெளியேறி அவருடன் சென்றார்கள்.

வைகோவின் மதிமுக முதல்முறையாக 1996ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியில் இடம்பெற்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றது.1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மதிமுக உறுப்பினர்கள் முதல்முறையாக மக்களவையில் இடம்பெற்றனர்.

1999-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணைந்தது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

இதையடுத்து, 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த மதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

வைகோவின் மதிமுக 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. இதையடுத்து வந்த, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக விரும்பிய தொகுதிகளை அதிமுக வழங்காததால், வைகோ தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள்நலக் கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

இந்த சூழலில்தான், மதிமுக மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யானார். அவர் மக்களவையில் திமுக எம்.பி.யாக பதவி வகிக்கிறார். வைகோ திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இப்படி, திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என்று கூட்டணிகளில் இடம்பெற்று தேர்தல்களை சந்தித்து வந்துள்ளார். தற்போது, வைகோ 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறார்.

இந்த தேர்தலில் தொடக்கம் முதலே திமுக கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் சேலத்தில் நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் பேசிய வைகோ, “சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம்” என்று கூறினார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடும் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். ‘உங்களுக்குப் பக்க பலமாக இருந்ததைப் போல ஸ்டலினுக்கும் இருப்பேன்’ என கருணாநிதிக்கு கடைசி காலத்தில் நான் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலை திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்” என்று கூறினார்.

1996ம் ஆண்டு திமுக தலைமைக்கும் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ மதிமுகவைத் தொடங்கிய இந்த 27 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளார். எல்லா தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வந்த மதிமுக கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் கணேசமூர்த்தி திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டார். இப்போது, சட்டப் பேரவைத் தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. வைகோ விட்டுத் தருகிறாரா? அல்லது அவருடைய அரசியல் பயணம் மீண்டும் திமுகவை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் இடையே எழுந்துள்ளது. அதே போல, தேர்தலுக்குப் பிறகு, பொதுக்குழுவைக்கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறியிருப்பதால் வைகோவின் அடுத்த நகர்வு என்ன? வைகோ மதிமுகவை திமுகவில் இணைப்பதை நோக்கி நகர்கிறாரா? என்ற விவாதங்களும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: