ஞாயிறு, 7 மார்ச், 2021

நடுநிலை என்பது உண்மையில் என்ன? சுமதி விஜயகுமார்

May be an image of சுமதி விஜயகுமார் and hair

சுமதி விஜயகுமார்  : அடுத்த மாதம் இந்நேரம் வாக்களித்து முடித்திருப்போம். சென்ற சட்டமன்ற தேர்தலை  போல் அல்லாமல் இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப் போகிறது என்பது எல்லோராலும் கணிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
பல அனுமானங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டி இந்த முறை மிக சரியான கூட்டணி அமைத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொது தேர்தலில் திமுக கூட்டணி தங்கள் பலத்தை நிரூபித்து காட்டி இருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி எத்தனை இடங்களை , எத்தனை வாக்கு வேறுபாட்டில் வெற்றிபெற போகிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் மே 2 வரை காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது.
வாக்குசீட்டு எண்ணுவதற்கு ஒரு மாத அவகாசம் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. மின்னணு வாக்குகளை எண்ணுவதற்கு எதற்கு ஒரு மாத கால அவகாசம் என்றால் பிஜேபி நமட்டு சிரிப்பு சிரிக்கும். பிஜேபியால் நிச்சயமாக தலைகீழாக நின்றாலும்  மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டுவர முடியாது என்பது தெரியும்.
பின் எதற்கு அந்த ஒரு மாத இடைவெளி?


முடிந்த அளவு திமுக கூட்டணி கட்சி பெற்ற வாக்கினை குறைத்து காட்டி, திமுகவிற்கு பெருவாரியான மக்களிடையே இருக்கும் ஆதரவை குறைத்து காட்டுவதற்கு தான். இன்னும் சொல்வதென்றால் போலி பிம்பத்தை உருவாக்குவதற்கு.
தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த மே 17 இயக்கம் சமீப காலங்களில் அதிமுக/பிஜேபி அரசுகளை கண்டிப்பதுடன் நிறுத்திக் கொண்டார்கள்.

அதோடு நிறுத்தி கொள்ளாமல் , இந்த முறை மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறார் திருமுருகன் காந்தி. மகிழ்ச்சி. மருத்துவர் ருத்ரனும் அதே போல் மறைமுகமாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
மகிழ்ச்சி.
இப்போது கேள்வி என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் மற்றும் இவர்களை போல் மறைமுகமாக மக்களுக்கு செய்தியை உணர்த்துபவர்களுக்கும் 'திமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்' என்று வெளிப்படையாய் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கிறது?
வெளிப்படையாய் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் , நடுநிலைமை என்ற தன்மையை இழந்து விடுவோம் என்கின்ற பயமா?

நடுநிலை என்பதுயாரையும்  யாரையும் ஆதரிக்காமல் இருப்பதா இல்லை அந்த சமயத்தில் மக்களுக்கு யார் நன்மை செய்பவர்கள் என்பதை பார்த்து அவர்களை ஆதரிப்பதா? இந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து விட்டால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்களை விமர்சிக்கும் தகுதியை இழந்து விடுவோமா என்ன? 

உண்மையான அரசியல் பணி என்பது எந்தவித மறைமுக செய்திகளும் இல்லாமல் மக்களுக்காக மக்களுடன் நின்று வழிநடத்துவது தானே.
இதற்கிடையில் திமுகவும் அதிமுகவும் ஒன்று தான் என்பது போன்ற பதிவுகளையும் பார்க்க முடிகிறது. பதிவிட்டது ஒரு மார்க்ஸிச தோழர். அந்த தோழருக்கும் அவரை போன்ற தோழர்களுக்கும் ஒரு கேள்வி. திமுக ஆட்சியில் குறைகள் குற்றங்கள் இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.

நீங்கள் நம்பும் மார்க்சிச கட்சி தங்கள் ஆட்சியில் சாதிக்காததை திராவிட கட்சியால் சாதிக்க முடிந்தது மட்டுமில்லாமல், கடந்த 60 ஆண்டுகளாக மக்களிடம் இன்னும் செல்வாக்கு பெற்றிருப்பது எதனால். திராவிட ஆட்சி காலத்துக்கு முன் அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருந்த மாநிலமான தமிழகம் இப்போது வளர்ச்சி பெற்றிருப்பது யாரால்?
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயம் இது போன்ற பதிவுகளை படிப்பவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலில் எத்தனை ஊழல் மக்களுக்கு தெரியும்? திமுக ஆட்சிக்கு வந்ததும், திமுகவின் உறுப்பினர் ஒருவர் பிரியாணி கடையில் சண்டையிட்டாலும் கூட அது ஸ்டாலின் பேரில் எழுதப்படும் .
இது தான் திமுகவிற்கு இருக்கும் ஆதரவு. அதையும் தாண்டி மக்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு அக்கட்சியின் செயல் பாடுகளும் , திட்டங்களும் தான் காரணம்.
 

இந்த முறை திமுக ஆட்சி அமைப்பது நிச்சயம். அதன் தொடர்ச்சியாய் 2026ல் அந்த ஆட்சியை தக்க வைக்குமா என்பது திமுகவின் கையில் மட்டும் இல்லை, மற்ற இடதுசாரி தோழர்கள் கையிலும் தான் இருக்கிறது.
இந்த முறை திமுக எதிர்ப்பு பதிவுகள் போடுவதை தவிர்ப்பதே உழைக்கும் மக்களுக்கு நாம் செய்யும் நன்மையாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை: