புதன், 10 மார்ச், 2021

புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் சரிசமமான தொகுதிகளில் போட்டியா? சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாராயணசாமி பேட்டி

.dailythanthi.com :சென்னை, தமிழக அரசியலை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்று தேர்தலை சந்திப்பது வழக்கம். இந்தநிலையில் தி.மு.க.வில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தது. அவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 5-ந்தேதி நேர்காணலை நடத்தினார். அப்போது மு.க.ஸ்டாலினிடம், ‘தமிழ்நாட்டை போன்றே புதுச்சேரியிலும் தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும். நாம் 18 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். முதல்-அமைச்சர் வேட்பாளரும் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.’ என்று புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுகோளை முன்வைத்தனர்.

இழுபறி

புதுச்சேரி மாநில தி.மு.க.வினரின் ஆலோசனைக்கு ஏற்ப, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை விட கூடுதல் இடங்களில் போட்டியிடும் வகையில் தி.மு.க. சார்பில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நிர்ப்பந்தம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு சுமுக உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருகிறது.

சென்னையில் பேச்சுவார்த்தை

இந்தநிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று மதியம் 12.50 மணியளவில் வந்தனர்.

அங்கு, தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுச்சேரி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்து பேசினர். சுமார் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நாராயணசாமி பேட்டி

அதன்பின்னர், அண்ணா அறிவாலய வளாகத்தில் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அறிவுறுத்தல்படி தி.மு.க. குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம், தி.மு.க.வுக்கு எத்தனை இடம் என்பது பற்றி சுமுகமான முறையில் கருத்துகளை பரிமாறிகொண்டோம்.

அவர்கள் (தி.மு.க.) சொல்லிய கருத்துகள் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்து எடுத்து சொல்வோம்.

அதன்பின்னர் காங்கிரஸ் தேசிய தலைமை என்ன கருத்துகளை சொல்கிறதோ? அதன்படி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணிக்கு யார் தலைமை?

அப்போது அவரிடம், ‘புதுச்சேரியில் யார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள போகிறீர்கள்?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘கூட்டணிக்கு யார் தலைமை என்ற கருத்து எழவில்லை.’ என்றார்.

30 தொகுதிகளை தி.மு.க.-காங்கிரஸ் சரிசமமாக பகிர்ந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளதே? என்று கேட்டதற்கு, ‘இதுபோன்று பேச்சுவார்த்தையில் எந்தவித கருத்துகளும் எழவில்லை’ என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: