வியாழன், 11 மார்ச், 2021

கார்த்தியை எச்சரித்த குண்டுராவ்.. சஸ்பெண்ட் செய்து விடுவேன்

சஸ்பெண்ட் செய்து விடுவேன்: கார்த்தியை எச்சரித்த குண்டுராவ்
minnambalam.com : காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சொல்லி ஊடகங்களில் உலா வருபவர் கார்த்தி சிதம்பரம்.அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 8 பெண்களுக்கும் நான்கு தொகுதிகளை சிறுபான்மையினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றவர்களை டென்ஷன் ஆக்கியது. இந்த சூழலில் கடந்த மார்ச் எட்டாம் தேதி இரவு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டி தலைவர்களையும் தமிழகத்தின் காங்கிரஸ் எம்பி களையும் தனித்தனியாக சந்திக்க முடிவு செய்தார் குண்டு ராவ். இதற்காக அவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் எம்பி களும் எட்டாம் தேதி இரவு 9 மணி வாக்கில் சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தனர்.

மேல்தளத்தில் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியோடு ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொரு தலைவராக தன் அறைக்கு அழைத்து பேசினார்.

சுமார் 9.30 மணி அளவில் கார்த்தி சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அவரது ஆதரவாளர்கள் அங்கே வந்து அவர் வந்ததும் அவரை சுற்றி ஒரு பரபரப்பை உண்டு பண்ணினார்கள்.

மேல போலாமா என்று கார்த்தி சிதம்பரம் கேட்டதும் மேல ஆலோசனை பண்ணிட்டு இருக்காரு. கொஞ்சம் லேட் ஆகும் என்று கூறியுள்ளனர்.

"இது தெரிஞ்சா நான் சாப்பிட்டே வந்திருப்பேனே" என்று டென்ஷனாக சொல்லிவிட்டு உடனடியாக வெளியே கிளம்பி விட்டார் கார்த்தி சிதம்பரம்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் கார்த்தி.

அப்போதும் அவருக்கு முன்னதாக சில பேர் குண்டுராவ் சந்திப்பதற்காக காத்திருந்தார்கள். அதனால் மேலும் டென்ஷன் ஆனவர் தன்னை சுற்றி இருந்தவர்களிடம் கடுமையான

தொனியில் பேசினார். இந்த சத்தம் மேலே இருக்கும் குண்டுராவ் வரைக்கும் கேட்டிருக்கிறது.

ஒருவழியாக தன் முறை வந்ததும் குண்டு ராவின் அறைக்குச் சென்றார் கார்த்தி சிதம்பரம்.

அப்போது குண்டு ராவ், "நாம பெரிய போராட்டம் நடத்தி 25 சீட்டு வாங்கி இருக்கிறோம். இதுல அவங்களுக்கு இத்தனை கொடுக்கணும் இவர்களுக்கு அத்தனை கொடுக்கணும் அப்படின்னு நீங்க எதுக்கு கருத்து சொல்லிட்டு இருக்கீங்க. அதை இங்கே வந்து சொல்லுங்க. மீடியால சொல்லி யாருக்கு என்ன பயன்?" என்று கேட்டிருக்கிறார் தினேஷ் குண்டுராவ்.

அதற்கு கார்த்தி சிதம்பரம் தனது பாணியில் பதில் சொல்ல அந்த தொனியின் தீவிரத்தை உணர்ந்து பொதுவாக கோபப்படாத தினேஷ் குண்டுராவே கோபப்பட்டுவிட்டார்.

" உங்க ஆக்டிவிட்டீசை மாத்திக்குங்க. தேவையில்லாம கட்சிக்குள் குழப்பம் வர மாதிரி கருத்துக்கள் சொல்லாதீங்க. எதுவா இருந்தாலும் தலைமை கிட்ட வந்து சொல்லுங்க. தொடர்ந்து குழப்பம் விளைவிக்க மாதிரி செயல்பட்டீங்கன்னா உங்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டி இருக்கும்" என்று கார்த்தி சிதம்பரத்தைக் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார் தினேஷ் குண்டுராவ்.

உடனே அவரது அறையிலிருந்து விருவிருவென கீழே இறங்கி வந்த கார்த்தி சிதம்பரம் அந்த இடமே அதிரும்படி கடுமையான வார்த்தைகளைக் கொட்ட.... சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமி கார்த்தி சிதம்பரத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: