செவ்வாய், 9 மார்ச், 2021

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது- விஜயகாந்த் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது- விஜயகாந்த் அறிவிப்பு
maalaimalar.com சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை.< இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் கட்சியாக பா.ம.க.வை அழைத்து அ.தி.மு.க. இடங்களை ஒதுக்கி கொடுத்தது. பா.ம.க. வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல கட்டங்களாக அ.தி.மு.க., தே.மு.தி.க. தலைவர்கள் சேர்ந்து பேசினார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தே.மு.தி.க.வினரை நேரில் அழைத்து பேசினார். தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க. வலியுறுத்திய 23 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டனர். 13 முதல் 15 இடங்கள் வரையில் மட்டுமே தரமுடியும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

இது தே.மு.தி.க.வினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் குறைவான இடங்களையே ஒதுக்க முன்வந்தது பற்றி கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் பலர் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் ஏற்க வேண்டாம் என்றும், அதற்கு பதில் தனித்து போட்டியிடலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் இன்று மதியம் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை வருமாறு:-

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தே.மு.தி.க. சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டங்களில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்று முதல் இருந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: