செவ்வாய், 9 மார்ச், 2021

யாழ்ப்பாணத்தில் இந்திய முதலாளிகள் நிறுவிய இலங்கை பாரதீய ஜனதா கட்சி?

May be an image of 3 people, people standing and text that says 'இந்து தமிழ் Tamil The Hindu 1h யாழ்ப்பாணத்தில் உதயமானது இலங்கை பாரதிய ஜனதா கட்சி: ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி; சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய JC CNA யாழ ஊடக அமையம் JAFFNA PRESS CLUB යාපනය ධ්‍ය සමාජය Thoddam Road, Jaffna, S i 84 A, 4Ty erronrLlk SEYER'
Maniam Shanmugam :  இரத்தக்களரி ஏற்படுத்தும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!
இலங்கையில் ‘பாரதீய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை சில தமிழர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தக் கட்சியின் ஊடக மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்சியைத் தொடங்கியவர்கள் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் அல்லவென்றும், கொழும்பை வதிவிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் என்றும் தெரிய வருகிறது. அத்துடன் இது இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கான கட்சி அல்லவென்றும் தெரிய வருகிறது.
இந்தக் கட்சி தொடங்கப்பட்டதின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள கட்சி ஒன்றின் பெயரில், அதுவும் ‘பாரதிய ஜனதா’ என்ற பெயரே தமிழ் பெயரல்லாத நிலையில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டிருப்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகத்தான் மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆட்சி நடத்தும் பாரதீய ஜனதாக் கட்சியின் கொள்கைகள் என்ன என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்தக் கட்சி அமெரிக்காவுக்கும் பெரும் கோப்பரேட் நிறுவனங்களுக்கும் சார்பான ஒரு கட்சி என்பது ஒருபுறமிருக்க, அதுவொரு தீவிரமான இந்துவெறிக் கட்சி. முஸ்லீம்களுக்கும் இதர சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயற்படும் கட்சி. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் என்போருக்கு எதிராகவும் செயல்படும் கட்சி. பிற மொழிவழி மாநிலங்களில் இந்தித் திணிப்பை மேற்கொள்ள முயற்சிக்கும் ஒரு கட்சி.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைகள் அனைத்து இந்திய மக்களையும் துன்பப்படுத்தி வருவது போதாதென்று, அது தனது விஸ்தரிப்புவாதக் கொள்கைகளை அயல் நாடுகளிலும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள ஒரு கட்சி. அண்மையில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாரதீய ஜனதாக் கட்சித் தூண்களில் ஒருவரும், உள்துறை அமைச்சருமான அமித் சா பங்குபற்றிய நிகழ்வில் விரைவில் நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைக்கப்படும் எனப் பேசப்பட்டுள்ளது.

நேபாளமும் இலங்கையும் இந்தியாவின் அண்டை நாடுகள். இருந்தும் இந்தியக் கொள்கை காரணமாக அந்நாட்டுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருக்காத நாடுகள். அது மட்டுமின்றி, இந்தியாவின் எதிரியாகக் கருதப்படும் சீனாவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த நிலைமையில் இந்த நாடுகளில் இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர்கள் பேசுவது, இந்தியாவின் விஸ்தரிப்புவாதக் கொள்கைகளையும், உள் நோக்கங்களையும் அம்பலப்படுத்துகின்றது.
இந்தப் பின்னணியில் இலங்கையில் பாரதீய ஜனதாக் கட்சியின் பெயரில் ஒரு கட்சியை சில தமிழர்கள் ஆரம்பித்திருப்பது உண்மையில் சந்தேகத்துக்குரியதும் அச்சத்துக்குரியதும்தான்.
அதுவும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த மாதிரியான ஊடுருவலைச் செய்ய முயற்சிப்பது பாரதூரமான விடயம்.
ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் ஏற்கெனவே பிரிவினைவாத யுத்தம் ஒன்றால் மிகவும் பாதிக்கப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருப்பவர்கள்.
போதாதிற்கு சில சக்திகளால் சிங்கள – தமிழ் விரோதம், தமிழ் - முஸ்லீம் விரோதம், சைவம் - கிறிஸ்தவ விரோதம் என்பன கிளறி விடப்பட்டுள்ள சூழலில் வாழ்பவர்கள்.
ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் செயற்படும் தமிழ் கட்சிகள் இந்த நிலைமைகளுக்கு தீர்வு தேடாது தமது சுயநல அரசியலை முன்னெடுத்து வரும் சூழலில், அந்த நிலைமைப் பயன்படுத்தி அந்நிய நாடொன்றின் தூண்டுதலால் உள் நோக்கங்களுடன் சிலர் கட்சிகளை ஆரம்பிப்பது, குழப்பங்களை மட்டுமல்லாது எதிர்காலத்தில் நாட்டில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இரத்தக்களரியை ஏற்படுத்துவதில் கொண்டுபோய் நிறுத்தும்.

எனவே, நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள், இத்தகைய சதி நடவடிக்கைகளையிட்டு விழிப்பாக இருப்பதுடன், அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை தாமதமின்றியும், ஈவிரக்கமின்றியும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வெள்ளம் வந்த பின்னர் அணை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும்.

Sivananthan Muthulingam :
  கம்யூனிஸ்ட் கட்சி, வத்திக்கான், அங்கிலிக்கன் கிறிஸ்தவ பிரிவுகள், இஸ்லாமிய அமைப்புக்கள் என்று ஏகப்பட்ட அந்நிய நாட்டு அமைப்புக்கள் இலங்கையில் இருக்கலாம்.
இந்திய பாரதீய ஜனதா கட்சி மட்டும் இருக்க முடியாதா? அடுத்து இந்தியாவில் பாதிரிகளின் தமிழ் ஈழம் தமிழ் மக்களை சின்னா பின்னமாக்கியதை விடவா பவுத்தர்களோ இந்துக்களோ அநியாயம் செய்தார்கள்? மன்னாரில் பாதிரிகளின் இந்து எதிர்ப்பு எப்படி? பாதிரிகளின், முஸ்லிம்களின் அட்டகாசங்களை பார்த்து அமைதி காப்பவர்கள் பாரதீய ஜனதா கட்சி பற்றி வாயைத் திறவாமல் இருப்பது நல்லது.

Janaki Karthigesan Balakrishnan
:   மிகச் சரியான பதிவு. கொழும்பு வர்த்தகங்களைப் பார்த்த போதே ஏன் ஈழத்தமிழர்களும், ஏனைய இனத்தவர்களும் சீனாவிடம் சிறீ லங்கா பறிபோவதாக அலறுகிறார்கள் என்று எண்ணுவேன்.
ஒருவேளை கொழும்பில் வாழ்ந்த வர்த்தகத் தமிழரை நான் பிழையாகப் பார்வையிடுகின்றேனோ என எண்ணி வாளாவிருந்தேன்.
தயவு செய்து வெள்ளவத்தையில் மட்டுமே உள்ள பலகாரக் கடைகளிலிருந்து, உணவுக்கடை, பலசரக்குக்கடை, மருந்துக்கடை, சில multi purpose கடைகளென்று பார்வையிடுங்கள். நண்பர் மணியத்தின் பதிவின் பின்னணி புரியும்.
வேடிக்கை என்னவென்றால் சில சிங்கள மக்கள் தமிழர்கள் அனைவரும் இந்தியப் பின்னணியைக் கொண்டவரென்பது என்றும், இன்றும் அவர்களது வீட்டுக்கொல்லைக்குள்தான் இந்தியா இருப்பதாகவும் ஓர் எண்ணம்.
இந்தியாவில் குறிப்பாக வடபகுதியிலிருந்து சிறீ லங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினர் சிலர் சிறீ லங்காவும் இந்தியாவினதோ அல்லது பாக்கிஸ்தானினதோ ஒரு பகுதியென்றே எண்ணினாராம் எனவும் அறிந்தேன்.
சில ஆங்கிலப் படங்களில் அடிமட்டத்திலுள்ள படையினரைக் காண்பிக்கும் போதும், அவர்களின் எண்ணப்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் நடாத்தப்படும் விதத்தைப் பார்க்கும் போதும் இந்தியப்படையினரின் நிலை சாத்தியப்படலாம் என்றே தோன்றுகிறது.
ஆகவே இன்று சிறீ லங்காவில் வர்த்தகம் செய்வோர் நிலையும், முன்னைய இந்தியப் படையினரின் நிலைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
Pettah விலும் வர்த்தகங்களை வெள்ளவத்தைப் பிரதிபலிப்பாக காணலாம்..

Rahavan Ganeshu  : இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தரமாட்டோம் என முகத்தில் அறைந்தது போல் சொன்னது இலங்கை அரசு யாழ்பாணத்தின் தீவுகளில் சீன நிறுவனங்களை உட்காரவைத்த இலங்கை அரசு.
இலங்கையில் BJP ஊடுருவ இடமளித்ததா? என்கிற கேள்வியை நாம் அழுத்தமாக கேட்க வேண்டியுள்ளது.
இந்த BJP இலங்கை அரசால் உண்டாக்கப்பட்டிருக்கலாம் அல்லது இந்திய இலங்கை அரசுகளின் பூரண இணக்கத்துடனே உருவாக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்ளலாம்.
இலங்கை இந்திய அரசுகளுக்கு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்கு முறை இன அழிப்பு என்பதில் ஒத்த கருத்து உண்டு அந்த ஒத்த கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இலங்கை BJP ஆகும்.

Jagapriyan Somasundaram  : ஏற்கனவே இந்துமதவாத அமைப்புகள் இலங்கையில் ஊடுருவி விட்டன.பவுத்த அடிப்படைவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட இவை விரும்புகின்றன. இந்துமதமும் பவுத்தமும் ஒரே கலாசார பின்னணியைக்கொண்டவை. ஆபிரகாமிய மதங்களே எமக்கு எதிரானவை என்ற கருத்தை இந்த தீவிரவாத அமைப்புக்கள் பரப்பி வருகின்றன. போரு க்குப்பின்னான உண்மைநிலை இதுதான்.

கருத்துகள் இல்லை: