Murugan Sivalingam : ·
சாஸ்திரி...சிறிமா
வதைப்படலம்
பழையன நினைத்தல்--07 உதகை மண்டலத்தில் (OOTY)) அதி உயர்ந்த தொட்ட பெட்டா மலையிலிருந்து முழு நீலமலைப் பிரதேசத்தை நோக்கியப் பார்வை.... கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அக்கம் பக்கம் பார்ப்பதை பறவை பார்வை ( Birds View ) என்பார்கள். நீலமலை மக்களைப் பிரியும் அந்த நாள் மனதைக் கலங்கவைத்தது..! கவிஞனின் மொழியில் நெஞ்சுக்குள் கண்ணீர் கசிந்துக்கொண்டிருந்தது... உழைக்கும் மக்களின் வியர்வை.....கண்ணீர்....இரத்தம்...என்ற மையால் தீட்டிய எழில் ஓவியமாக மலைகளெல்லாம் பச்சைக் கம்பளம் போர்த்தியநிலையில் இருந்தன. உலகில் எங்குமே தேயிலை பயிர் நிலமே பெண்களின் கைவண்ணத்தால் லாவண்யம் காட்டிக்கொண்டிருக்கின்றன...! என் ரசனை முடிந்தது. பார்வையைத்திருப்பினேன்.
அடுத்தப் பயணம்...... எனது "பஞ்சம் பிழைக்க வந்த சீமை" என்ற வரலாற்று நெடுங்கதையை எழுதுவதற்கான தகவல்களைச் சேகரிப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்த வர்களின் நதிமூலத்தை அறிந்துக்கொள்வதற்கு தமிழகக் கிராமங்களை நோக்கிப் புறப்பட்.டேன்.....
.நவீன உலகில் ....இருபத்தொராம் நூற்றாண்டில் அன்றைய ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையைப் போல.......500 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் போன்று ஓலை குடிசையில் மனித அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இந்திய சுதேசியர்கள்
இப்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்! அங்கு மலையகத் தமிழர்களும் இருந்தார்கள்!
|
|
அங்கு சென்ற போது...நாங்கள் இலங்கையர் என்பதை அறிந்த அவர்கள் பாசத்தோடு எங்கள் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தார்கள்!கிராமத்து உறவுகளை நம்பி வந்த அவர்கள் ஏமாற்றப்பட்டோம் என்றார்கள். நிலமும் தண்ணீரும் இருந்தால் நல்ல வாழ்க்கை வாழமுடியும் ஆனால் எங்களுக்கு அந்த இரண்டும் கிடையாது...! நகரத்தில் தொழில் கிடைக்கிறது.. சீக்கிரம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று நம்பிக்கையோடு சொன்னார்கள். பக்கத்தில் நின்ற இளைஞர் ஒருவர் அறிவுபூர்வமான கேள்வி ஒன்றை கேட்டார்."ஏன் சேர்..சிறிமாவும் சாஸ்திரியும் தானே ஒப்பந்தம் எழுதிக்கொண்டார்கள்.?. நாங்கள் இந்தியாவுக்குப் போக முடியாது என்று எதிர்த்திருந்தால் எங்களை பலவந்தமாக அவர்கள் நாடு கடத்தமுடியுமா?" என்றார் காலம் கடந்த கேள்வியாகவிருந்தாலும் சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.ஞானமுள்ள தலைமைகள் எமக்கு கிடைத்திருந்தால் அந்த இளைஞன் கூறியதுபோல் ஓர் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி சர்வதேசப் பார்வையை ஈர்த்திருக்கலாம்..! ஐ.நா வின் கவனத்தை திருப்பியிருக்கலாம்! இந்தியாவையும்..இங்கிலாந்தையும் சர்வதேசப் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்திருக்கலாம்! தரிகெட்டத் தலைமைகளினால் எல்லாமே நாசமாய் போயின..! அந்த இளைஞனை நான் அணைத்துக்கொண்டபோது அவன் உணர்ச்சி வசப்பட்டு மௌனமாக நின்றான். அவனை தைரியப்படுத்தினேன். இது தாய் நாடு.!மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளலாம்.எல்லோரும் ஒருமுறை இலங்கைக்கு வாருங்கள் செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.அவர்கள் முகங்கள் மலர்ந்தன. எனது வரலாற்று நெடுங்கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு இவர்களுடைய பெயர்களையே வைத்திருக்கின்றேன்..!
இங்கு மிக முக்கியமான..... ஓர் இழிவான தகவலைப் பதிவிடுவது அவசியமென நினைக்கின்றேன்..
பல சந்தர்ப்பங்களில் மலையக எம்பிக்களை சில இனவாத அரசியல் வாதிகளான அமைச்சர்களும் எம்பிக்களும் தங்களை தமிழ் நாட்டுக்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மலையக எம்பிக்களும் தங்கள் நலன்களுக்காக .அவர்களை தமிழகக் கிராமங்களுக்கு அழைத்துச்சென்று அவர்கள் சேரியில் வாழும் வாழ்க்கை நிலைமைகளை; காட்டிக்கோடுத்தார்கள்! இரண்டு தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளை அந்தந்த ஆட்சிக் காலங்களில் இவர்கள் இவ்வாறு அழைத்துச்சென்றுள்ளனர்.
இலங்கை திரும்பிய இனவாதிகள் "தமிழக.... கிராமத்து நிலைமையை ஒப்பிடுகையில் பிரிட்டிஷ்காரனின் லயன்கள் எவ்வளவோ மேல்.!" என்ற முடிவுக்கு வந்தனர்.. அதனால் தோட்டங்களில் நிலத்துடனான வீடுகள் அமைத்துக்கொடுப்பதில் அவர்கள் விருப்பம்
கொள்ள வில்லை! இந்த நிலைமயைப் பார்த்து வந்த ஒரு யூயென்பி பிரதமர்..... ஒரு பொது தேர்தலின் போது மலையக எம்பி ஒருவரோடு லயன்களுக்கு ஒப்பனை வழங்க தோட்டம் தோட்டமாகவந்து ஒப்பனை வழங்க முன் வந்தார்! சில கிண்டல்கார இளைஞர்கள் "சேர் பதவி இழந்த பிறகு நீங்கள் தரும் ஒப்பனை செல்லுமா? அதுவும் ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கின்றன...உங்கள் ஒப்பனையை எவர் பெயருக்கு தருவீர்கள்?" என்று கேட்டார்கள். எம்பியும் பதவி இழந்த பிரதமரும் அசடு வழிய வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்! அவர்கள் வழங்கிய ஒப்பனையை விமரிசித்து அன்றைய எமது ம.ம.முன்னணி இளைஞர்களுக்கு கவிஞர் இன்குலாப் (சாகுல் அமீது) எழுதிய "மனுஷங்கடா" பாடலை பிரச்சாரப் பாடலாக்கி ஒலிநாடாக்கள் வழங்கினோம்.....! அந்த பிரதமரும் எம்பியும் வழங்கிய ஒப்பனை கைவசம் இன்றும் என்னிடம் உள்ளது!!
அடுத்தப் பதிவில் மண்டபம் முகாம் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் பற்றியும் நினைவூட்டவுள்ளேன்...! (தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக