திங்கள், 25 ஜனவரி, 2021

திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

மminnambalam :ொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. “திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு சோர்ஸுகள் மூலமும், பல்வேறு தரப்புகள் மூலமும் திமுக கூட்டணி பற்றியும், அதிமுக கூட்டணி பற்றியும் பல தகவல்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் தரப்பிலும் ஸ்டாலினோடு டச்சில் இருப்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிமுக - பாமக கூட்டணியில் இருக்கும் சில பிரச்சினைகளும் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன.                இந்தச் சூழலில்தான் கடந்த 21ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில், 'திமுகவில் சேர இன்னும் சில கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.           நான்தான் கிடப்பில் போட்டு வைத்திருக்க்கிறேன்’ என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். வன்னியர்களுக்கென தனி உள் ஒதுக்கீடு வேண்டுமென்று டிசம்பர் மாதத்தில் இருந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்திய ராமதாஸ்... அதை அடிப்படையாக வைத்தே பாமகவின் அரசியல் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்காகவே 25ஆம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தையும் அறிவித்தார்.ஆனால் முதல்வர் சார்பில் ராமதாஸிடம் இதுகுறித்துப் பேசிய பிறகுதான் 25ஆம் தேதி கூட்டத்தை 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஜனவரி 21ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியோடு கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்’ என்று பேசியது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

       திமுகவை நோக்கி கடுமையான விமர்சனக் கணைகளை பாய்ச்சிக்கொண்டிருந்த பாமக, திடீரென்று இட ஒதுக்கீடு விவகாரத்தில் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி ராமதாஸ் முடிவு செய்வார் என்று திமுக பக்கம் பார்வையை வீசியது. டாக்டர் ராமதாஸிடம் பேசிவிட்டு அவரது சம்மதத்துக்குப் பிறகுதான் ஜி.கே.மணி இப்படிப் பேசியிருக்கிறார்.

திமுகவை எதிர்ப்பதற்கான பிரச்சினைகளையெல்லாம் அவை முப்பது ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்தாலும் தோண்டியெடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்துகொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால் அவரது மகன் அன்புமணியோ வேறு ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார். அதாவது, ‘வருகிற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து நின்றால் எதையும் ஜெயிக்க முடியாது. திமுகவோடு கூட்டணி அமைத்தால்தான் நாம் வெற்றிபெற முடியும். தேர்தலுக்குப் பிறகு சில எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் கட்சியைத் தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்த முடியும். எனவே அதிமுகவோடு கூட்டணி வைப்பதைவிட திமுகவோடு கூட்டணி வைத்து கட்சியைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்தலாம்’ என்பது அன்புமணியின் கருத்து. ஆனால் இதை டாக்டர் ராமதாஸின் கோபத்தைக் கருதி அவர் நேரடியாகச் சொல்லவில்லை. தனது அம்மா மூலமாகவும், மேலும் சில சீனியர் தலைவர்கள் மூலமாகவும் ராமதாஸிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். இந்த நிலையில் ஜி.கே.மணி இப்படி திமுகவுடனும் கூட்டணி பற்றி ராமதாஸ் யோசிப்பதாகக் கூறியது அன்புமணிக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது.

இன்னொரு பக்கம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடமும் அன்புமணி இதுகுறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி இரவு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது துரைமுருகன், ‘வர்ற தேர்தல்ல திமுகதான் ஆட்சி அமைக்கும். அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாமக அடர்த்தியாக இருக்கும் வட மாவட்டங்கள்ல நாம கொஞ்சம் போராட வேண்டியிருக்கும் அவ்வளவுதான். இன்னொரு பக்கம்... அதிமுக கூட்டணியில் பாமக இல்லையென்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அவரது சட்டமன்றத் தொகுதியில் தோற்றுவிடுவார். அதனால் பாமக நமது அணிக்கு வருவது இரண்டு வகையிலும் நமக்கு நல்லதுதான். அதனால பாமகவை நம் அணிக்குக்கொண்டு வரலாம். சீட் கூட பிரச்சினை இல்லை. வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி திமுக ஒரு வாக்குறுதியைக் கொடுத்தது என்றால் அவர்களுக்கு சீட்டுகள் பற்றி கூட பிரச்சினை இல்லை’ என்று துரைமுருகன் சொல்ல...

‘நாமதான் விக்ரவாண்டி இடைத்தேர்தலிலேயே இந்த வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி வாக்குறுதி கொடுத்திருக்கோமே?’ என்று ஸ்டாலின் கேட்க... ‘ஆமாம். நாம்தான் அதை முதலில் அறிவித்தோம். மீண்டும் அதே வாக்குறுதியை இப்போது நாம் அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் எதிர்பார்க்குறாரு’ என்று சொல்லியிருக்கிறார், அதோடு, ‘நான் முழுக்க முழுக்க திமுக என்ற கட்சியின் நலன் கருதிதான் இதை சொல்றேன். நான் சாதிப் பாசத்துல அவரை நம்ம கூட்டணிக்குக் கொண்டுவர துடிக்கிறேன்னு உங்ககிட்டயே சில பேர் சொல்றாங்க. ஆனா,எனக்கு திமுக ஜெயிக்கணும்குறதுதான் ஒரே நோக்கம். வேற எந்த நோக்கமும் கிடையாது’ என்றும் ஸ்டாலினிடம் உருக்கமாகப் பேசியிருக்கிறார் துரைமுருகன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின், ‘நீங்க சொல்றது எல்லாம் புரியுது. ஆனா இப்ப இருக்குற நிலையிலயே நாம ஜெயிக்க முடியுமில்லே...’ என்று கேட்க, துரைமுருகனோ, ‘நான் மாவட்டச் செயலாளர் கூட்டத்துல சொன்னது மாதிரி பெண்கள் வாக்கு இந்த முறை நமக்குத்தான். நாம்தான் ஜெயிக்கிறோம்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதற்கு ஸ்டாலின், ’அப்படி இருக்கும்போது பாமகவைச் சேர்த்துக்கிட்டு நாளைக்கு நாம ஆட்சி அமைச்ச பிறகு என்னாலதான் திமுக ஜெயிச்சதுனு சொல்லிக்கிட்டிருப்பாரு’ என்று கூறியிருக்கிறார். துரைமுருகனோ, ‘நாம ஆட்சி அமைச்ச பிறகு அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டுக்க வேண்டியதில்லையே. மக்களுக்கு நன்மை செய்யுறதை பார்ப்போம்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையிலான ஆலோசனை நடந்திருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் பாமக தரப்பிடம் துரைமுருகன் பேசியபோது, ‘2006 சட்டமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லாதபோது ஐந்து ஆண்டும் ஆட்சி தொடரும் என்று முதல் ஆளாக ஆளுநருக்கு கடிதம் கொடுத்தவர் ராமதாஸ். மேலும், அடுத்து வந்த எம்.பி தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு மாறினாலும் கூட திமுக ஆட்சிக்கு அதனால் எந்த ஆபத்தும் வராது என்றும் சொன்னவர் ராமதாஸ். எனவே ஸ்டாலின் நினைப்பது மாதிரி திமுக ஆட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க மாட்டோம் என்று பாமகவிலிருந்து சிலர் துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இப்போது திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: