திங்கள், 25 ஜனவரி, 2021

கோவையில் மருத்துவர் உமாசங்கர் திட்டமிட்ட கொலை ? உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உமாசங்கர் கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Vishnupriya R - tamil.oneindia.com : கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கிய சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமாசங்கர் இன்று காலை கண்ணப்ப நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்தா இல்லை திட்டமிட்ட கொலையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ோவை காந்திபுரத்தில் இயங்கி வந்தது எல்லன் என்ற பிரபல மருத்துவமனை. பிரபல மருத்துவரான 72 வயதான ராமச்சந்திரன் இதன் உரிமையாளர் ஆவார். இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54) என்ற மருத்துவர். சென்னை மருத்துவமனை என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனையை நடத்தி வருவதாக கூறியுள்ள உமாசங்கர், அதன் கிளையை கோவையிலும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கெனவே வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்கு விட ஒப்புக் கொண்டுள்ளார்.


மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டும் எனக் கூறிய ராமச்சந்திரன், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதை உமாசங்கர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இருவரும் கடந்த 2017 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார் மருத்துவர் உமாசங்கர்.


மேலும், ராமச்சந்திரன் அப்பகுதியில் பிரபல மருத்துவர் என்பதால், பழக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த மருத்துவமனையிலேயே தனியாக ஒரு அறையை ஒதுக்கி தரவும் வாடகைதாரரான உமாசங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, எல்லன் மருத்துவமனையின் பெயரை, சென்னை மருத்துவமனை என மாற்றி நடத்தி வந்த உமாசங்கர், பேசியபடி வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்

உமாசங்கர் 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ராமச்சந்திரனே கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும்படி உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். ஆனால், அதை காதில் போட்டுக் கொள்ளாத உமாசங்கர், வேறு ஒருவருக்கு மருத்துவமனையை வாடகைக்கு விடவும் முயற்சித்துள்ளார்.


இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் அது குறித்து கேட்டபோது, உமாசங்கரும், அவரது மருத்துவமனை மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மருத்துவர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில் தனது வயோதிகத்தை பயன்படுத்தி, தன்னை ஏமாற்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவமனையை அபகரிக்க முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
 
அத்துடன் தனக்கு வரவேண்டிய 4.95 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து கொடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, மருத்துவர் உமாசங்கர் மற்றும் மருதவாணன் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்து கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைத்தனர்.


பின்னர் ஜாமீனில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே டாக்டர் உமாசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திட்டமிட்ட சதி ஏற்கனவே பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் கார் மோதி இறந்தாரா? அல்லது திட்டமிட்டு அவரை கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள போலீசார் முழுவதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு பணிகளில் உள்ள சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Primis Player Placeholder

கருத்துகள் இல்லை: