செவ்வாய், 26 ஜனவரி, 2021

பாமகவுக்கு கதவு சாத்தியது திமுக.... முற்றுப்புள்ளி!

 பாமகவுக்கு கதவு சாத்தியதா திமுக?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி அதன் பலனாக மக்களவை தொகுதிகள் எதையும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும்... ராமதாஸின் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றார்.     இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க... வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை அதிமுக அரசை குறிவைத்து துவக்கினார் ராமதாஸ்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை, தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம், விஏஓ அலுவலகங்கள் முன்பு போராட்டம் என்று ராமதாஸ் பல போராட்டங்கள் நடத்தியும்... அதிமுக அரசு சார்பில் வன்னியர்களுக்கான ஒதுக்கீடு குறித்து ஏதும் உறுதிமொழி தரப்படவில்லை. இந்நிலையில், கடந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த எம்.பி.சி 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற முழக்கத்தை கையில் எடுத்தார் ராமதாஸ்.

இதற்கும் அதிமுக அரசு சார்பில் எந்த உறுதிமொழியும் இதுவரை தரப்படாத நிலையில் ஜனவரி 25ஆம் தேதி பாமக வின் நிர்வாக குழு கூட்டம் கூடி அதில் அரசியல் முடிவெடுக்கும் என்று அதிமுகவை எச்சரித்தார் ராமதாஸ். அதன் பிறகு முதல்வர் தரப்பில் சிலர் ராமதாஸுடன் பேச அந்த போராட்டத்தை ஜனவரி 31ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

இதற்கிடையே பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி திமுக கூட்டணியை விரும்புவதாகவும் தகவல்கள் கிடைத்தன.அதே நேரம் உள் ஒதுக்கீட்டுக்கு திமுக உத்தரவாதம் கொடுத்தால் கூட்டணி பற்றி ராமதாஸ் முடிவு செய்வார் என்று பாமக தலைவர் ஜிகே மணி பகிரங்கமாக அறிவித்தார்.

இதன்மூலம் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்காக பேசிக் கொண்டிருக்கிறதா என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி பற்றி ஸ்டாலினிடம் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வற்புறுத்தியதாகவும் அதற்கு ஸ்டாலின் பிடி கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தோம்.

இதை உறுதிப்படுத்துவது போல திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நேற்றும் இன்றும், ”திமுகவை குறிவைக்கும் இலவு காத்த கிளி மருத்துவர் அய்யாவின் பகல் கனவு” என்ற தலைப்பில் ராமதாசை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் பணி செயலாளர் குத்தாலம் கல்யாணம் எழுதியிருக்கும் கட்டுரையில்... திமுகவைப் பற்றி ராமதாஸ் கூறியுள்ள பல்வேறு புகார்களுக்கு விரிவாக பதில் அளித்துள்ளார்.

"மருத்துவர் அய்யாவும் இளவலும் முதல் கையெழுத்து முதல்வர் கனவு என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாட்டில் நிலவும் அரசியல் சூழலை நன்கு உணர்ந்து யதார்த்த நிலைக்கு வர வேண்டும். சாத்தியம் இல்லாததை நினைத்து கட்டும் மனக்கோட்டை மனோராஜ்யம்.

சமுதாயத்துக்கு ஒரு அமைப்பு அரசியலுக்கு ஒரு அமைப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே நிறுவனர். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் பயணிக்கும் கட்சி அரசியல் ரீதியாக திவால் ஆகாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியாகும்" எனக் குறிப்பிட்டுள்ள குத்தாலம் கல்யாணம்...

”அனைவரையும் உள்ளடக்கிய உட்கட்சி ஜனநாயகம் மிளிரும் ஜனநாயக பேரியக்கம் திமுக. திராவிட பாரம்பரியத்தை பொன் போலக் காத்து வரும் அரசியல் கட்சி திமுக. அப்படிப்பட்ட இயக்கத்தில் உள்ளவர்களை வெளிவர சொல்வது நாகரிகமான செயல் அல்ல என்பதோடு அது ஒரு உணர்வுபூர்வமான கொந்தளிப்பை சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் உருவாகியுள்ளதால் இத்தோடு இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் சரியாக இருக்கும்.

தொடர்ந்து லாவணி தான் என்றால் அதற்கும் தலைமையின் அனுமதி பெற்று கலைஞரின் வன்னியர் சமுதாய சாதனை புள்ளி விவரப்பட்டியலுடன் திமுக சார்பில் வாதத்தில் பங்கேற்போம்" தெரிவித்துள்ளார் திமுகவின் குத்தாலம் கல்யாணம்.

இதன் மூலம் பாமகவுக்கும் திமுகவுக்குமான அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் கூட அவ்வளவுதான் என்றாகிவிட்டது.

வேந்தன்

கருத்துகள் இல்லை: