வெள்ளி, 29 ஜனவரி, 2021

விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?

vikatan :``வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன். போராட்டக் களத்தைவிட்டு நாங்கள் நகரமாட்டோம். தேவைப்பட்டால் புல்லட்டுகளைத் தாங்கி நிற்கவும் தயார்!'' - 

டெல்லி எல்லைகளில் நிலவும் பதற்றம்... என்ன நடக்கிறது? மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என, இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 65 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி பயணம் செய்ததே வன்முறை நிகழக் காரணம் என செய்திகள் வெளியாகின. .... 

ஆனால், செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்கு, பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையிலான ஆள்கள்தான் என்றும், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து. சில விவசாயச் சங்கங்கள் போராட்டத்திலிருந்தும் விலகிக் கொண்டன. அதே நேரத்தில், மீதமுள்ள விவசாய சங்கங்கள், `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை திரும்பப்பெறுவோம்' என்று உறுதியாகப் போராடி வருகின்றன.

காசிப்பூர் எல்லை!

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள பகுதிதான் காசிப்பூர்!

காசிப்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட்டு, இடத்தைக் காலி செய்யுமாறு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், `வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தைக் கைவிடமுடியாது' என்று விவசாயிகள் தரப்பு தெரிவிப்பதால், அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டெல்லி, உத்தரப்பிரதேச காவல் படையினர் காசிப்பூர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகேஷ் டிக்கைட்
ராகேஷ் டிக்கைட்
ANI

காசிப்பூர் பகுதியில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் டிக்கைட்டுக்கு டெல்லி போலீஸார் `டிராக்டர் பேரணிக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக, உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து பேட்டியளித்த ராகேஷ் டிக்கைட், ``குடியரசு தினத்தன்று எங்கள்மீது தடியடி நடத்தியவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றவர், தொடர்ந்து அழுதுகொண்டே...

''வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன். போராட்டக் களத்தைவிட்டு நாங்கள் நகரமாட்டோம். தேவைப்பட்டால் புல்லட்டுகளைத் தாங்கி நிற்கவும் தயார்!''
ராகேஷ் டிக்கைட், பாரதிய கிஷான் யூனியன்
எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார். ராகேஷ் டிக்கைட் உணர்ச்சிப்பூர்வமாகப் பேட்டியளித்ததையடுத்து காசிப்பூர் எல்லையில், போராடுபவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து போராட்டக் களத்துக்கு வந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, அந்தப் பகுதியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 133-ன் கீழ், காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளுக்குக் கூட்டத்தைக் கலைக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது காசியாபாத் மாவட்ட நிர்வாகம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133: சட்டவிரோதமான முறையில் தொல்லை செய்யும், தடையை ஏற்படுத்தும் நபர்கள், பொருள்கள், கட்டடங்கள் ஆகியவற்றை அகற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
காசிப்பூர் எல்லை

இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் டிக்கைட், ``காசிப்பூர் எல்லையில் இதுவரை எந்த வன்முறையும் நடக்கவில்லை. அமைதியான முறையில் போராடுவதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால், அரசு எங்களை ஒடுக்க நினைக்கிறது. இதுதான் உத்தரப் பிரதேச அரசின் உண்மை முகம்'' என்றார். மேலும்,

பா.ஜ.க-வினர் விவசாயிகள்மீது தாக்குதல் நடத்த இங்கு வந்துள்ளனர். போராட்டத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டால், அதற்கு காவல்துறைதான் முழு பொறுப்பு.
ராகேஷ் டிக்கைட், பாரதிய கிஷான் யூனியன்

காசிப்பூர் பகுதியில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தை மாவட்ட நிர்வாகம் துண்டித்துள்ளதாகவும், அருகிலிருக்கும் கிராமங்களில் விவசாயிகள் குடிநீர் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கு, திக்ரி எல்லைப் பகுதிகள்!

டெல்லி - ஹரியானா எல்லையில் அமைந்துள்ள பகுதிகள்தாம் சிங்கு, திக்ரி!
சிங்கு, திக்ரி
சிங்கு, திக்ரி
ANI

காசிப்பூர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து, சிங்கு, திக்ரி பகுதிகளில் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு கையில் பதாகைகள் ஏந்தி, சட்டை அணியாமல் முழக்கங்கள் எழுப்பி வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர் விவசாயிகள்.

சிங்கு, திக்ரி பகுதிகளில்...
இன்டெர்நெட், செல்போன் சிக்னல் ஆகிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன!

``இணையதளம் இயங்காததால், எங்களுக்கு எல்லா செய்திகளும் தாமதமாகவே வருகின்றன. காசிப்பூர் எல்லையில் என்ன நடக்கிறது என்பதுகூட எங்களுக்குத் தெரியாது'' என சிங்கு, திக்ரி பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநிலத் தலைவர் குர்நாம் சிங் சதுனி (Gurnam singh chaduni), ``எங்கள் போராட்டத்தை நாங்கள் நிறுத்துவதாக இல்லை. எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை போராடிக் கொண்டிருப்போம். அதைத்தவிர வேறெந்த திட்டமும் எங்களிடம் இல்லை. அரசு என்ன சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை'' என்று ஏ.என்.ஐ செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

Gurnam singh chaduni
Gurnam singh chaduni
ANI

மேலும், டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்படுத்தியதற்காகவும், செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றியதற்காகவும் நடிகர் தீப் சித்துவை கடுமையாக விமர்சித்துள்ளார் குர்நாம் சிங். முன்னதாக, ``நடிகர் தீப் சித்து மத்திய அரசின் தரகர்... அவர்தான் வன்முறைக்குக் காரணம்'' என்று கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார் குர்நாம் சிங்.

இந்த நிலையில், இன்று காலை சிங்கு பகுதியில், அந்தப் பகுதியின் ஆட்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் `விவசாயிகள் இங்கு போராடக்கூடாது. உடனே வெளியேற வேண்டும்' என முழக்கமிட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாகவும், தடியடி நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

வழக்கு பதிவு செய்த காவல்துறை!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறை, குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையின் காரணமாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த வியாழன்று சில தகவல்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து காயமடைந்த காவல்துறையினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மருத்துவமனையில் அமித் ஷா
மருத்துவமனையில் அமித் ஷா
ANI

டிராக்டர் பேரணி தொடர்பாக, தேசத் துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்படப் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. பல விவசாயிகளுக்கு இது தொடர்பாகநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. `கலவரத்துக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
``சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருந்தாலும், `வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற்றால் மட்டுமே நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்' என்று இந்தப் பதற்றமான சூழலிலும் இந்தியத் தலைநகரின் எல்லைகளில் அமைதியாகப் போராடி வருகிறார்கள் ஆயிரக்கணக்கான விவசாயிகள்!'' என்பதே தற்போதைய நிலவரம் என்று தேசிய செய்தி ஊடகங்கள் நமக்குத் தகவல் சொல்கின்றன.

மேலும், ``டெல்லி எல்லைப் பகுதிகளில், தற்போது பதற்றமான சூழலே நிலவி வருவதால் மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்ற செய்தியையும் ஆங்கில ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை: