திங்கள், 25 ஜனவரி, 2021

மருத்துவர் சாந்தா : ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது

Image may contain: 1 person, sitting
மருத்துவர் சாந்தா
Adv Suguna Devi : · " இந்த பாருங்க சிஸ்டர்ஸ்! ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது; நாளை எப்போதும் போலான பணி, இன்ஸ்டிடியூட்டில் நடைபெற வேண்டும். நிறைய பேர் மாலை போட வரிசையில் வரக் கூடாது. வேண்டுமானால், மாலைக்கான காசை வாங்கி நம் அறக்கட்டளையில் போடச்சொல்லி, அதனை இன்னொரு புற்றுநோயாளியின் மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தலாம்; அப்புறம் 'எனக்கு மணி மண்டபம் கட்டுறேன்; நினைவகம் செய்யுறேன்', என நம் இந்த இடத்தையோ, அதற்கு காசையோ வீணாக்க கூடாது. என் சாம்பலை இன்ஸ்டிடியூட்டின் எல்லாப் பக்கமும் தூவி விடுங்கள்; சரியா? நான் பார்க்கமாட்டேன்னு நினைக்காதீங்க.. சொன்னதெல்லாம் ஒழுங்கா நடக்குதா என மேல இருந்து பார்ப்பேன். ஓகேயா?" என சிரித்தபடி கூறிக்கொண்டே நடந்து சென்று, ஆஞ்சியோ சிகிச்சைக்குப் போன அந்த 93 வயது முதிய பேராளுமை மருத்துவர் சாந்தா நிரந்தரமாக விடைபெற்றார் அந்த பேராளுமையின் நிரந்தப் பிரிவு நாளன்று அடையாறு மருத்துவமனையின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 1000 க்கணக்கான ஊழியர்களும், செவிலியர்களும் கனத்த மனத்தோடு மருத்துவர் சாந்தா வின் வழிகாட்டுதல்படி, மேலிருந்தும் அவர்கள் புன்னகைக்கும்படி அங்கே கண்ணீரோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்கள்.
ஆம் "மருத்துவ அறம்" என்ற சொல்லின் மறுவடிவம் பத்மவிபூஷன் மருத்துவர். சாந்தா அவர்கள். அன்றைக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, டிஜிஓ முடித்து, மரு. முத்துலட்சுமி ரெட்டி அம்மா துவங்கிய அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்டின் பொறுப்பேற்றவரின் பணி கிட்டத்தட்ட 65 வருடங்களாகத் தொய்வின்றி, தன் இதய சிகிச்சைக்கு மயக்க ஊசி கொடுக்கும் இருபது நிமிடங்கள் முன்பு வரை பணியாற்றியுள்ளது.
திருமணம் செய்துகொள்ளாமல், தன் முழு வாழ்நாளின் முழு நேரத்தையும் புற்றுநோய் சிகிச்சைக்கு என்றே அர்ப்பணித்தவர் மருத்துவர். சாந்தா அவர்கள். "சர் சிவி இராமன் , சந்திரசேகர்" எனும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் குடும்பத்தில் இருந்து வந்தவர் இந்த மருத்துவர். அந்தக்காலத்தில, எல்லாப் பெண் மருத்துவர்களுமே மகளிர் மருத்துவராக மட்டுமே வர முனைப்பெடுக்கும்போது, சாந்தா அம்மையார் முத்துலட்சுமி ரெட்டி அமைத்திருந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு தன் அரசுப்பணியை உதறிவிட்டு, பணியாற்ற வந்தார். வந்தபோது அவர் சம்பளம் வெறும் 200ரூபாய்.
ஏழை எளிய மக்களுக்காக இயங்கிவரும் அடையாறு புற்று நோய் மருத்துவமனை 30% முழு இலவசமாகவும், இன்னொரு 30% நடுத்தர பாமர மக்களுக்கு சகாய விலையிலும், 40% மட்டுமே சரியான பணம் பெற்ற சிகிச்சையும் அளித்து வரும் நிறுவனம்.
வெகு சாதாரணமாக 3-4 இலட்ச ரூபாய் செலவாகும் மார்பக அறுவைசிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்த கீமோ சிகிச்சையை ஒரு பைசா செலவின்றி, சிகிச்சை பெற்றுத் திரும்பும் பாமர ஏழைப்பெண்ணை, அடையாறு மருத்துவமனை வெளியே, புன்னகையுடன் காத்திருக்கும் காட்சியை இன்றைக்கும் நீங்கள் சந்திக்கக் கூடும். அதற்கான ஒரே காரணம் சாந்தா அம்மா அவர்கள்தாம்.
பெண்களுக்கு கருப்பை, கழுத்துப் பகுதி புற்றிலும், மார்பகப் புற்றிலும் அறுவை சிகிச்சையிலும், கதிர்வீச்சு சிகிச்சையிலும், கீமோ சிகிச்சையிலும் அடையாறின் அனுபவங்கள் ஏராளம். சிகிச்சை மட்டுமல்லாது, அதனை உலகத்தரத்தில் ஆவணப்படுத்துவதாக இருக்கட்டும், பெரும் ஆய்வுகளை நடத்துவதாக இருக்கட்டும் சாந்தா அம்மையார் ஒரு மாபெரும்
முன்னோடி. ஒருகாலகட்டத்தில் டாடாவின் கான்சர் அமைப்பும், அடையாறு கான்சர் சொசைட்டி மட்டுமே புற்றுநோய் சிகிச்சையில் மாபெரும் முன்னோடிகள். இந்தியாவில் "கான்சர் ரெஜிஸ்ட்ரி" எனும் பெரும் ஆவணத்தைத் துவக்கிய பெருமை சாந்தா அம்மாவுக்கு உண்டு. புற்று நோய்க்கான உயர்படிப்பைத் துவங்கியதும் இந்த நிறுவனம்தான். இவர்களது துல்லிய ஆவணங்கள்தான் புகையிலை செய்யும் புற்று அட்டகாசத்தை அரசுக்குச் சொல்லி, புகையிலையை மெல்ல மெல்ல ஒழிக்க இன்றளவும் பெரும் பங்கு ஆற்றிவருகிறது.
"ஆரம்ப நிலையிலேயே புற்றைக் கணித்தல், புற்று நோய் வராது தடுக்க சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் விழிப்புணர்வு தருதல்", இவ்விரண்டும் மருத்துவர் சாந்தா அம்மையாரின் பெரும் முன்னெடுப்புகள். "யூத் ஹெல்த் மேளா" அடையாறு அமைப்பு வருடா வருடம் இளைஞர்களிடையே புற்றின் தீவிரத்தை எடுத்துச் சொல்லிய பெரும் விழிப்புணர்வு உற்சவம்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு ஸ்ட்ரோக் வந்து நடக்க இயலாதபோதும்கூட பிறர் உதவியுடன் அறைக்கு வந்து மருத்துவம் பார்த்ததும், நிறுவனத்தின் அன்றாட அலுவல் பார்த்ததும் பிற மருத்துவர்கள் நெகிழ்ந்து சொல்லும் காட்சிகள்.
இந்தியாவே கோவிட்டில் நிலைகுலைந்து நின்ற போது கான்சர் இன்ஸ்டிடியூட்டும் கூட ஸ்தம்பித்திருந்தது. அப்போதும் பணிக்கு வந்து மருத்துவமனை செவிலியர்களை மருத்துவர்களை முடுக்கிவிட்டிருக்கிறார் மருத்துவர் சாந்தா.
சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவத்தை ஆய்ந்தறிந்து ஆவணப்படுத்தி, சிகிச்சையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற அவா, அந்த அம்மையாருக்குப் பெரிதும் இருந்தது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு புற்று நோயில் சித்த மருத்துவப் பணியின் ஆய்வை சமீபத்தில் துவக்கியது, இதற்கு ஒரு அடையாளம்.
இன்றைக்கு சென்னையின் அத்தனை மாபரும் கார்ப்பரேட் மருத்துவமனையிலும் புற்றுநோய் சிகிச்சையில் கோலோச்சிவரும் அத்தனை ஆளுமைகளும் சாந்தா அம்மாவின் அடையாறு வளாகத்தில் பயின்ற மாணவர்களே. "இந்தியாவின் ஜான்ஹாப்கின்ஸ்" என சத்தமாகவே சொல்லக்கூடிய இந்த அடையாறு மருத்துவ ஆலமரத்தின் விழுதுகளால், வாழ்வோ அல்லது கூடுதல் வாழ்நாளோ பெற்றவர்கள் உலகெங்கும் உண்டு.
"மக்சாசே, பத்மவிபூஷன்" என எல்லா விருதுகளும் இவரை கௌரவிப்பதன் மூலம் தான் பெருமைப்பட்டுக் கொண்டது ஒருபுறம் இருந்தாலும், ஏழைகளுக்கு இலவசமாய் உலகத்தரமான சிகிச்சையை வழங்கிய இவரது மருத்துவ அறத்தை வெறும் விருதுகள் மட்டுமே கவுரவப்படுத்தி விடமுடியாது. இன்று பெரும் வணிகமாகிவிட்ட மருத்துவச்சூழலில் ஒவ்வொரு மருத்துவரும் சாந்தா அம்மையார் வாழ்ந்த அந்த எளிய அறையை, அவருக்குக் காற்றளித்த பழைய சுழல்விசிறியை ஒருமுறை கண்டிப்பாகப் பார்த்துவர வேண்டும்.
இன்றைக்கு 5-10 இலட்சம் இல்லாவிட்டால் நீட்டுக்கு தயார் செய்ய முடியாது. 40 இலட்சம் இல்லாவிட்டால் மிகச்சிறந்த நீட் மார்க் இருந்தும் தனியார் கல்லூரியில் படிக்க முடியாது; ஒன்றரை கோடி இருந்தால் யார் வேண்டுமானாலும் அடிப்படை நீட் மதிப்பெண்ணுடன் மருத்துவராகலாம் என்ற சூழலில், இனி வரும் காலத்தில் வசதி இல்லாதோரின் வயிற்றுவலிக்கும் வாழ்வுக்கான வலிக்கும் எங்கே செல்வர்? மருத்துவ அறப்பணி என்கிற சொல்லே அகராதியில் காணாமலேயே போய்விடுமோ என்கிற சூழலில், மருத்துவர் சாந்தாவை இழந்தது பெரும்வலியைத் தரத்தான் செய்கின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப இனி எவர் வருவர்?
நண்பர் மருத்துவர் சிவராமன் அவர்களின் பதிவு.
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-

கருத்துகள் இல்லை: