செவ்வாய், 26 ஜனவரி, 2021

புலிகளின் சித்திரவதையில் மரணித்த தோழர் முகுந்தனின் செய்தி வரலாற்று ஆவணம்

Image may contain: 2 people, closeup, text that says 'தோற்றம் 14.01.1959 தோழர் முகுந்தன் ஆறுமுகம் முருகநேசன் (சுழிபுரம்)'
Dhayalini R Kannan : · முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு sdpt-mugunthanஎமது விடுதலைப் போராட்டத்தில் விளைந்த உன்னதமான இலட்சிய புருஷர்கள் வரிசையில் வரலாற்றால் கண்டுகொள்ளப்படாது போய்விட்ட சிலரில் முகுந்தன் தோழர் என்று அழைக்கப்படும் முருகநேசன் அவர்களும் ஒருவர். இவ்வாறு அவரது சிறப்புக்கள் மறைக்கப்பட்டதன் காரணம், ஏனைய விடுதலை அமைப்புகளின் பங்களிப்பை நிராகரித்து, இப் போராட்டத்தைச் சுவீகரித்து, அதை அழிவுப் பாதையில் இட்டுச்சென்று பாழாக்கிய வரலாற்றை அவரது மகிமை கேள்விக்குட்படுத்திவிடும் என்பதுதான்.
அவர் எத்தகைய உன்னதமான மனிதர் என்பதை அறிந்தால், அவரை வதைசெய்து கொலைசெய்தமைதான் அவரது பெரும் பங்களிப்புக்காக எம் போராட்டம் அவருக்குச் செய்த கைமாறா என்ற கேள்வி, எம் சமூகத்தின் மனசாட்சியை நிட்சயம் உறுத்தும்.
அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளையும் வெளிக்காட்டுவது, அவரது சகதோழர்களின் மனசாட்சிக்கான கடமையாகும்.
விடுதலைக்காக உயிர்நீக்கும் தோழர்கள், தம் சக தோழர்கள் தமக்காகக் குரல்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே தம் மரணத்தைத் தழுவுகின்றனர். அந்த வகையில், தனக்கு நேர்ந்த அநீதியை வெளியுலகுக்கு எடுத்துரைப்பார்கள் என்ற முகுந்தன் தோழரின் ஆத்ம நம்பிக்கைக்கு நாம் நியாயம் செய்யவேண்டியவர்களாக உள்ளோம்.
எமது விடுதலைப் போராட்டத்தில் கொள்கைப் பற்றும், உணர்வும், அர்ப்பணமும், தீட்சணமான அறிவும், ஆராட்சித் திறனும், கற்றலுக்கான ஆர்வமும், அரசியல் தெளிவும், ஆயுதங்களைக் கையாளும் ஆற்றலும், பக்குவமும், தற்காப்புக் கலை நிபுணத்துவுமும், கற்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல் திறனும், தன்னடக்கமும், நெறிதவறா சுய ஒழுக்கமும், நேரக் கிரமமும், சிக்கனமும், நாணயமும், திட்டமிட்ட செயல் ஒழுங்கும், சக தோழர்கள் மீதான பரிவும், அவர்களின் வளர்ச்சியில் அக்கறையும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட சம்பூரணமான திறன்கொண்ட அரியதோர் தலைமைத்துவக் குணாம்சம்கொண்ட தோழராகப் பரிணமித்தவர் தோழர் முகுந்தன்.
ஆறுமுகம் முருகநேசன் என்ற இயற்பெயர்கொண்ட முகுந்தன் தோழர், நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தை ஒரு கல்லூரி அதிபர், தாயார் ஒரு ஆசிரியை. ஐந்து சகோதரிகளையும் மூன்று சகோதரர்களையும் கொண்ட இவர்தான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. நல்ல கல்விப் பின்னணி கொண்ட இவரது சகோதர சகோதரிகள் வைத்தியர்களாகவும் மற்றும் உயர் பீடங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விவாசாய பீடப் பட்டதாரியாகி, அதே பீடத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த முருகநேசன் (முகுந்தன்) 1981 -82 காலப் பகுதியில் அப் பீடத்தில் தோழர் ஒருவரின் பரீட்சயத்தால், பொதுவுடமைக் கோட்பாடுகள், மார்க்ஸீயப் பொருளாதாரக் கொள்கைகள், மற்றும் ஈழவிடுதலைப் போராட்டக் கருத்துக்களால் கவரப்பட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவைச் சந்தித்து, தனது பங்களிப்பை எம் போராட்டத்துக்கு முழுமையாக வழங்க முன்வந்தார். இக் காலகட்டத்தில் வருமானத்துக்கான பொருளாதாரத் திட்டம் தேவையென வலியுறுத்தி, தனது விவசாயத்துறை அறிவைப் பயன்படுத்தி, தோழர்களின் காணிகளில் வீட்டுத்தோட்டங்கள் மேற்கொள்ள உதவியதோடு தானே முன்னின்று அத் தோட்டங்களிலும் பணிபுரிந்தார். ஒருகாலத்தில் மின்சாரம் இல்லாதுபோனால், சிக்கனமாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எரிபொருட்கள், மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவை தடைப்பட்டால் நிலமையைச் சமாளிக்கக்கூடிய சுய பொருளாதரக் கட்டமைப்புகள் தேவை என வலியுறுத்தி அதற்கான வழிவகைகளை விளக்கினார். தோட்டக் கழிவுகளைப் பயன்படுத்தி, பயோ கேஸ் (Bio-gas) எனும் எரிவாயு உற்பத்தி செய்யும் கூடங்களை எமது ஆதரவாளர்கள் அமைத்துக்கொள்ள உதவினார்.
இதன்பின் இந்தியாசென்று சிறப்பு ஆயுதப் பயிற்சிபெற்றார். அத்தோடு லெபனான் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆயுதப் பயிற்சியையும், சர்வதேச யுத்தமுனை அனுபவங்களையும் பெற்றார்.
அவரது அபாரத் திறமைகண்டு, அவரை இராணுவப் பிரிவின் பயிற்சியாளராக இபிஆர்எல்எப் இன் தலைமைப்பீடம் நியமித்தது. தான் பயிற்றுவித்த தோழர்களுக்கு வெறும் ஆயுதப் பயிற்சி மட்டுமின்றி, கணிதம், விஞ்ஞானம், பௌதீகம், பொருளாதாரம் போன்ற கல்விகளைத் தானே கற்பித்ததோடு தத்துவ அறிவுக்கான விளக்கக் கருத்தங்குகளிலும் பங்களித்து விவாதித்து கருத்துரீதியான வளர்ச்சிபெற ஊக்குவித்தார். பாசறைகளை நூலகம் நிறுவி, பலவிதப்பட்ட நூல்களை அறிமுகப்படுத்தி படிப்பதற்கு உத்வேகமளித்தார். அத்துடன், பாசறையில் கருத்துக்கள், கலையிலக்கியங்கள் தாங்கிய கைப்பிரதி நூல்களை வெளியிட ஊக்கமளித்தார். நாடகங்கள், கவிதை அரங்குகள் ஓவியங்கள் போன்ற ஆக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். அவரே ஒரு கிட்டார் வாத்தியக் கலைஞருமாவார்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு மேலாக அவர் இராணுவத் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். வெடிமருந்துகளின் சக்திப் பாய்ச்சல் பற்றி ஆராய்ச்சி செய்து, வினைத்திறன் மிக்க கண்ணிவெடிகள், கடற்கண்ணி வெடிகள், ஆகியவற்றை வடிவமைத்தார். ராக்கெட் லோஞ்சரில் செயற்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அதை எமது ஆயுதத் தயாரிப்புக்களில் உபயோகப்படுத்தினார்.
தோழர்களின் தனித் திறமைகளை இனங்கண்டு ஊக்குவித்து அவற்றை வெளிக்கொணர்வதில் அக்கறை செலுத்தினார். அனைத்துத் தோழர்களாலும் நேசிக்கப்பட்ட, அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த தோழர் முகுந்தன், மிக எழிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். தனக்கு மிகமிக அத்தியாவசியமான ஒருசில பொருட்களைத் தவிர, தனக்கென எதையும் அவர் வைத்திருந்ததில்லை. கிடைத்த சொற்ப நிதிக்குள் தன்னால் பராமரிக்கப்படும் நிர்வாகச் செலவுகளை எவ்வளவு சிக்கனமாகச் செய்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சிக்கனமாகவும் கச்சிதமாகவும் செய்துமுடிக்கும் பாங்குடையவர்.
கடும் பயிற்சிபெற்ற கொமாண்டோ படைப்பிரிவை உருவாக்குவதற்கான காட்டுப்புற பயிற்சிமுகாமொன்றை இந்தியாவின் வெள்ளிமலைப் பகுதியில் அமைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கடினமான பிரதேசங்களில் மிக நீண்டநேர பயிற்சிகைளை வழங்கினார். உணவு, நீர் தட்டுப்பாடான நிலமைகளில் தனித்த வனப்பகுதிகளுக்குள் தற்காத்துக்கொண்டு கிடைக்கும் பொருட்களுடன் தப்பிவாழும் வழிவகைகளைப் பயிற்றுவித்து, நடைமுறையில் அவற்றை மேற்கொள்ளவும் வைத்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்பின் இலங்கை திரும்பிய அவர், வவுனியாவில் தங்கி, தன் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
அதேவேளை, வட-கிழக்கு மாகாண சபையின் அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டார். மாகாணசபையில் அரசியல் தொடர்பாளராகப் பணியாற்றினார்,
பின்னர் யாழ்ப்பாணத்தில் நிர்வாகக் குழப்பங்களைச் சரிசெய்வதற்காக சென்று அங்கு ஒழுங்கமைப்பு வேலைகளை மேற்கொண்டுவந்தார்.
இவ்வேளையில் இந்திய அமைதிகாக்கும்படை திரும்பிச் செல்லவும், மாகாணசபை கலைக்கப்படவும் நேரிட்டதால், தன்னுடன் பணியாற்றிய தோழர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை கடல்மார்க்கமாக தென்னிந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அனுப்பிவைத்தார். விமானம் மூலம் தென்னிந்தியா செல்லக்கூடியதாக இருந்தும், சக தோழர்களை படகுளில் அனுப்பிவிட்டு, தான்மட்டும் பாதுகாப்பாகப் பயணிப்பதில் உடன்பாடில்லாமல், தானும் அத்தகைய படகு ஒன்றில் பயணித்தார்.
கடற் பரப்பில், ஆயுதமின்றி, பயணித்த குறைந்த வேகம்கொண்ட அவரது சாதாரண படகை புலிகள் சுற்றிவளைத்துக் கைப்பற்றி அவரைத் தமது பாரிய சித்திரைவதை முகாமான துணுக்காய் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கே சுமார் 3000 பேர்வரை புலிகளால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவாறு இருந்தனர்.
முகுந்தன் தோழரின் திறமைகளை அறிந்துகொண்ட புலிகள் அவரைத் தம்மோடு இணைந்து செயற்படும்படி நிர்ப்பந்தித்தனர். தனது நூற்றுக்கணக்கான சகதோழர்களையும், ஏனைய இயக்கப் போராளிகளையும் கொன்று, அவர்களின் போராடும் உரிமையை மறுத்த புலிகள், அம் முகாமிலேயே அவரது கண்முன்னாலேயே மனிதத்தன்மையற்ற கொடூரமான சித்திரவதைகளைப் புரிந்துகொண்டிருக்கும்போது, அவ் அமைப்போடு இணைந்து தனது உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அவரது மனம் உடன்படவில்லை. அதனால், உங்களுடன் இணைவதைவிட மரணிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று அவர்களிடம் நெஞ்சுறுதியுடன் துணிந்து சொன்னார் அவர்.
இதனால் மிகவும் கோபம்கொண்ட புலிகள், பழிதீர்க்குமுகமாக அவருக்கு மிக மோசமான சித்திரவதைகளைப் புரிந்தார்கள். அவரை நிலத்தின் கீழ் கிண்டப்பட்ட இருண்ட கிடங்கினுள் இட்டு மூடியே வைத்திருந்தார்கள். அக் கிடங்குக்குள் பாம்புகளை விட்டு அவர் பயத்தால் தமக்குக்கீழ் பணிபுரிய உடன்படுவாரென அவர்கள் எதிர்பார்த்தபோதும் அதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. அவரை வெளியே கொண்டுசெல்லும்போது, எப்போதும் கால்-கைகளுக்கு சங்கிலியிட்டு ரோமகாலத்து அடிமைகள்போலவே கொண்டு சென்றார்கள். அதி கொடூரமான சித்திரவதைகளாலும், இருண்ட கிடங்கில் நெடுநாட்கள் அடைக்கப்பட்டுக் கிடந்ததாலும் அவர் ஒரு நடைப்பிணம் போலவே காணப்பட்டதாக அம் முகாமில் இருந்து தப்பித்த ஏனைய கைதிகள் தெரிவித்தார்கள். இப்படியாக, மரண வேதனையை அணுவணுவாகத் அனுபவித்தாலும், தன் மனஉறுதியைச் சற்றும் தளரவிடாமல் மரணம் தழுவும்வரை இருந்து மரணித்தார் அம் மகா வீரன்.
.
இங்கு முகுந்தன் தோழர் வழங்கிச் சென்ற முக்கியமான செய்தியொன்று உளது. போர்க்களத்தில் நெஞ்சில் குண்டுவாங்கி மரணிப்பவன் மட்டுமல்ல உறுதியான வீரன். அதைவிடப் பெரிய வீரம், – ஒடுக்குமுறையாளர்களின் கடும் சித்திரவதைகளையும் தாங்கி, அவர்கள் தர முன்வரும் எந்தச் சலுகைகளுக்கும் சலனப்படாமல், உயிர்வாழ்வதற்காக அவர்களுக்கு மண்டியிடாமல், தன் கொள்கைப் பற்றுடன் நின்று அணுவணுவாக மரணத்தைத் தழுவிக்கொள்வதென்பது எண்ணிப்பார்க்க முடியாத அளப்பெரும் வீரம்.
இவ் வீரனின் கதை – தூக்குமேடைக் குறிப்பு – எழுதிய, ஹிட்லர் ஆட்சியில் தூக்கிடப்பட்டுக் கொல்லப்பட்ட – ஜுலிஸ் பூஷிக் இன் சரித்திதரம்போல எம் தோழர்களுக்கும், மக்களுக்கும், உலகுக்கும் ஒரு நூலாக வெளியிட்டு தெரியப்படுத்தப்படவேண்டிய ஒன்று. அப் பணி சகதோழர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: