வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது இதை முன்னிறுத்திதான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார் ராமதாஸ்..
‘டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை கடந்த இரு மாதங்களாக போராட்டமே நமது வாழ்க்கை முறையாகி விட்டது. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் திசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி 4 நாட்களுக்கு தொடர் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் திசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், திசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், திசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ஆம் நாள் நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என கடந்த இரு மாதங்களில் மட்டும் 5 கட்டங்களாக 8 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக நாம் தீவிரமாக போராடி வருகிறோம். ஒவ்வொரு கட்ட போராட்டமுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. அந்த வகையில் 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் நடைபெறவுள்ள ஆறாம் கட்ட மக்கள்திரள் போராட்டமும் வெற்றி பெறப் போவது உறுதியிலும் உறுதியாகும்.
ஐந்து கட்டங்களாகவும், எட்டு நாட்களாகவும் நாம் நடத்தியுள்ள போராட்டம் நமது வலிமையை தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் உணர்த்தியுள்ளது. அதைவிட அதிகமாக நமது போராட்டத்தின் நியாயத்தையும், சமூகநீதியையும் தமிழக அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனாலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்கத் தயங்குகிறது. தமிழக அரசின் இந்த தயக்கம் எவ்வகையிலும் நியாயமற்றது’ என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ்,
‘பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் யாருடைய உரிமையையும் தட்டிப் பறிக்க நினைக்க வில்லை. அப்படி செய்வது அறமல்ல என்பது சமூகநீதியை கொள்கை மூச்சாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் கேட்பது எங்களுக்கான உரிமையைத் தான். தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் 21 உயிர்களை தியாகம் செய்தும் தான் வென்றெடுத்தோம். அது வன்னியர்களின் சொத்து ஆகும். ஆனால், அந்த சொத்தை, எங்களுக்கு கிடைக்கவிடாமல் யாரோ அனுபவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கூட, இதுவரை அதை அனுபவித்து வரும் சமுதாயங்களின் நலன் கருதி விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறோம்.
இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்? மக்களுக்கான அரசு நியாயத்தின் பக்கம் தானே நிற்க வேண்டும்? யாருக்கோ அஞ்சி, நமக்கான இடப்பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்டாளிகளின் குரலாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய ‘‘வசதியிருக்கிறவன் தரமாட்டான்.... - வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’’ என்ற வரிகள் நமது போராட்டத்திற்கும் பொருந்தும். ஆம்... வன்னியர்களுக்கான உள் இடப்பங்கீட்டை வென்றெடுக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை. அதற்காக என்ன விலை கொடுக்கவும், எத்தகைய தியாகங்களை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நாம் சத்திரியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாநில அளவில் 20 விழுக்காடும், தேசிய அளவில் 2 விழுக்காடும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முழக்கத்துடன் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது. பத்தாண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, ஏராளமான தியாகங்களைச் செய்து, இழப்புகளை எதிர்கொண்டு, அவற்றின் பயனாகத் தான், 1989-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர், இட ஒதுக்கீடு குறித்து பேச என்னை அழைத்தார். அப்போது தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரே தொகுப்பாக உள்ள 50% இடஒதுக்கீட்டை, பிற தென் மாநிலங்களில் இருப்பதைப் போல, 6 தொகுப்புகளாக பிரித்து, அனைத்து சமூகங்களுக்கும் வழங்கலாம்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்கலாம் என்ற அறிவியல்பூர்வமான திட்டத்தை முதல்வர் கலைஞரிடம் வழங்கினேன். அதை கலைஞர் செயல்படுத்தியிருந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகளுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அதை கலைஞர் செய்யவில்லை.
மாறாக, நான் தயாரித்து வழங்கியிருந்த இடப்பங்கீட்டுத் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிய கலைஞர், அவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு இரவோடு இரவாக இறுதி வடிவம் கொடுத்து, அடுத்த நாள் காலையில் அரசாணையாக வெளியிட்டார். இட ஒதுக்கீடு என்ற கனியை கொடுத்திருக்கிறேன்... அதை சுவைத்துப் பாருங்கள் என்று கலைஞர் கூறினார். அதுபற்றி உடனடியாக கருத்து தெரிவித்த நான் அதை அழுகிய கனி என்று விமர்சித்தேன். அப்போது அழுகிய கனி என்று விமர்சிக்கப்பட்ட இட ஒதுக்கீடு இப்போது மட்டும் இனிக்குமா? கலைஞர் உருவாக்கிக் கொடுத்த அழுகிய கனி இப்போது நாற்றமெடுத்த கனியாகி விட்டது. அதற்கு மாற்றாக சுவையான சமூகநீதிக் கனி வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ’என்று திமுகவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் ராமதாஸ்.
அதுமட்டுமல்ல.... ‘‘அண்டம் கிடுகிடுங்க அகிலம் நடுநடுங்க, அன்புமணி சேனைகளே வாருங்கள்.. மேகம் இடி முழங்க.. வேண்டும் உரிமை என மஞ்சள் கொடி ஏந்தி ஒன்று சேருங்கள்!’ என்ற பாடலை பரணி பாடிச் செல்ல வேண்டும். இட ஒதுக்கீட்டுக் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த வன்னியர்களையும் அழைத்து வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார் ராமதாஸ்.
நேற்று முரசொலியில் பகல் கனவு காணும் ராமதாஸ் என்ற நிலையில் இந்த அறிக்கை வந்திருக்கிறது. அப்பாவின் அறிக்கையைப் பார்த்து அதிர்ந்துபோன அன்புமணி தனது தந்தையைத் தொடர்புகொண்டு, ‘என்ன இப்படி திடீர்னு அறிக்கை விட்டுட்டீங்க? நான் தான் திமுககிட்ட பேசிக்கிட்டிருக்கேனே... எல்லாம் சரியா போயிட்டிருக்கும்போது ஏன் இப்படி?’என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு ராமதாஸோ, ‘முரசொலியிலயே நம்மை கடுமையா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே என்ன வேண்டி கிடக்கு’ என்று பதிலளித்தாராம். மேலும் அன்புமணி திமுகவோடு டச்சில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு அதை , நிறுத்துவதற்காக அழுகிய கனியை நாற்றமெடுத்த கனியாக விமர்சித்திருக்கிறார் ராமதாஸ் என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக