செவ்வாய், 26 ஜனவரி, 2021

டெல்லியில் டிராக்டர் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்பு ... 26 January Tractor rally farmers protest Kisan andolan

dailythanthi.com : புதுடெல்லி, இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். முன்னதாக குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லைப் பகுதிகளில் நேற்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் குவிந்துள்ளன. 

முன்னதாக, குடியரசு தினத்துக்கு பதிலாக வேறு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியிருக்கலாம். பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதே எங்களது கவலையாக உள்ளது. மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். 
Related Tags :

கருத்துகள் இல்லை: