.nakkheeran.in : கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜாராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் இயக்குனர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்திருக்கிறது.
1996 ஆம் ஆண்டு "இனிய உதயம்" தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய "ஜுகிபா" என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் இயக்குனர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.
1996- இல் தான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் திரைப்படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்றும், எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரை நீண்ட விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் கிரிமினல் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும் எழும்பூர் 13 ஆவது நீதிமன்றம் 2011-ல் சம்மன் அனுப்பப்பியது. அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும், அந்தச் சட்டப்படி செல்லாது என்றும் நாங்கள் கதையைத் திருடவில்லை என்றும் கூறி, அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்று உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முறையிட்டனர்.
எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் இந்த எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் 06 .06.2019 அன்று நீதிபதி திரு. புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில்,
கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த
நிலையில் கரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த
நிலையில், இயக்குனர் சங்கர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் சங்கரின்
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் மாதம்
உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் தமிழ்நாடன் தாக்கல்செய்த கதை திருட்டு வழக்கு 11 வருடங்களுக்குப் பின் மீண்டும் விசாரணை தொடங்கியது. நேற்று 29/01/2021 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நேற்று ஆஜராகவில்லை. அவர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட், டைரக்டர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் .அதோடு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இயக்குனர் சங்கர் கடந்த 11 வருடங்களில் ஒரு முறை கூட
ஆஜராகவில்லை, இதே எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு
கேட்டு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்சியம்
அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் சங்கர் ஆஜராகவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக