காங்கிரஸ் கூட்டணியில் தொடர்கிறதே ஒழிய திமுக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையில் மிக கறாராக இருக்கும் என்று கூறுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள். கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை வாரி இரைத்ததனாலேயே வெற்றி வாய்ப்பு பறிபோனதாக திமுகவினர் கூறுகின்றனர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை தொடர்புபடுத்தி அதிலும் குறிப்பாக கலைஞரின் மனைவி தயாளு அம்மாளை சிபிஐ விசாரித்தது.அண்ணா அறிவாலயத்தில் மேல் தளத்தில் அமைந்திருந்த கலைஞர் டிவி அலுவலகத்தில் தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரித்துக் கொண்டிருந்த போதே கீழ் தளத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேரம் பேசியது. அந்த சமயம் இதை காரணம்காட்டியே 63 இடங்களை அள்ளிச் சென்றதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதில் 5இல் மட்டுமே வெற்றி பெற்றது.
2016 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லை. அந்த சமயம் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரிடம் பணிவாகப் பேசி 41 இடங்களை காங்கிரஸுக்காகப் பெற்றுச் சென்றார் குலாம் நபி ஆசாத். அந்தத் தேர்தலில் 8 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.
பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுக இம்முறை கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினும் தன்னை நிரூபிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக இந்த தேர்தல் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்கள் மட்டுமே தரலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருப்பதாக கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக