வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

பேராசிரியர் உமா .. மறு கூட்டல் விண்ணப்ப வியாபாரம் ... 400 கோடி சம்பாத்தியம் ..கமிஷன் பிரிப்பு ,, ஜெயா காலத்தில் இருந்தே ,,

அண்ணா பல்கலைக்கழகம்
400 கோடி ரூபாய் முறைகேட்டில் சிக்கிய  உமாவிகடன் -எஸ்.மகேஷ் : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் உமா டீம் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது.
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் உமா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக ஐ.டி துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவி காலியாக இருந்ததும், அதற்கு உமா மற்றும் சிலர் போட்டியிட்டனர். உமாவுக்கு மட்டும் சில கூடுதல் தகுதிகள் இருந்ததால், அந்தப் பதவி எளிதில்  அவருக்குக் கிடைத்தது. இந்தச் சமயத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்ததால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பதிவாளர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான கமிட்டி வழிநடத்தியது. அப்போது, பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் அரசியல், அதிகார செல்வாக்கு காரணமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பினர். பல்கலைக்கழக வளாகமே புரோக்கர்களின் கூடாராமாக மாறியது. புரோக்கர்களைப் பிடித்தால் காரியத்தை முடித்துவிடலாம் என்ற நிலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவியது.
இந்தச் சூழ்நிலையில், உயர்கல்வித்துறையில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் உமாவுக்கும் இடையே நாற்காலியில் உட்காருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, உமாவின் கை ஓங்கியிருந்தது. இதனால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  துணை வேந்தராக  சூரப்பா நியமிக்கப்பட்டார்.
அவர் பதவியேற்றபிறகு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தில்லுமுல்லுகள் குறித்த கோப்புகள் தூசிதட்டி எடுக்கப்பட்டன. அப்போது, உமா குறித்தும் முக்கியத் தகவல்கள் கிடைத்தன. உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரகசியமாக உமா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணையை ரகசியமாக மேற்கொண்டனர். முன்னாள் துணைவேந்தர் ராஜாராமிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மறுகூட்டல் விவகாரத்தில் நடந்த கூட்டல், கழித்தல் கணக்கு விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
  இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியிலிருக்கும் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``உப்பைத் தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடித்தாக வேண்டும்'' அப்படித்தான் உமா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தற்போது சிக்கியிருக்கிறார்கள். உமா, இந்தப் பதவிக்கு எப்படி வந்தார் என்பது பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும். அவரை இந்தப் பதவியில் அமர்த்தியவர்கள் யார் யார் என்றும் எல்லோருக்கும் தெரியும். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, எதிலும் நேரடியாகத் தலையிட மாட்டார். அவருக்கென்று ஒரு நெட்வொர்க் உள்ளது. அந்த நெட்வொர்க்தான் கூட்டல், கழித்தல் கணக்குகளைப் பார்த்துக்கொள்ளும். ஏற்கெனவே உமா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ஆதாரங்கள் இல்லாததால் அவர் தப்பிவிட்டார். தற்போது, உமாவும் அவருக்கு உதவியவர்களும் சிக்கிக்கொண்டனர்.
 உமா சிக்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, திண்டிவனம் டீம்தான். இந்த டீம்தான் முதலில் வளைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் உமா சிக்கியிருக்கிறார். உமாவின் கணவர் தரமணியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். உமாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். உமா உள்பட 10 பேர்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்கும் ஒரு பேப்பருக்கு 10,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. மொத்தம் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.       உமாவைத் தொடர்ந்து, இன்னும் உயர்பதவியில் இருக்கும் சிலரும் சிக்குவார்கள்" என்றனர்.
பங்குபோட்ட பத்துப் பேர் 
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. கூடுதல் மதிப்பெண் பெறவும் தோல்வியடைந்த பாடங்களுக்காகவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்தனர். அப்போது, தேர்ச்சிபெறச் செய்ய பாடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல்வேட்டை நடத்தப்பட்டுள்ளது.  அப்போது நடந்த மறுகூட்டலில் மட்டும் 73 ஆயிரம் மாணவர்கள்  தேர்ச்சிபெற்றனர். இதில்தான் சந்தேகம் வலுத்தது. இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், தேர்வுக் கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உமா தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.  மண்டல ஒருங்கிணைப்பாளர்களான விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம்தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது விஜயகுமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும்,மறுகூட்டல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியிருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனால், உமாவுக்கும் விஜயகுமாருக்கும் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: