ஞாயிறு, 24 ஜூலை, 2016

கபாலி ! ஒடுக்கப்பட்ட மலேசியா தமிழ் சமூகத்தின் கதை... சினிமா வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று.
காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை வீழ்ச்சிக்கு பின் நிகழ்ந்த தோட்ட துண்டாடல்கள் காரணமாய் வேலை இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் தாயகமான இந்தியாவிற்கு திரும்பினாலும் பெரும்பாலானோர் தங்கள் தாய்மண்ணான மலேசியாவிலே தங்கினர். காலங்காலமாய் தோட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மாறிப்போன உலக பொருளாதாரம் காரணமாக பெரும் படிப்போ, வாழ்க்கையை ஓட்ட தொழிலோ தெரியாமல் பெருநகரங்களில் வந்து தஞ்சமடைந்தனர் .

பொதுவாய் இந்திய தமிழர்களுக்கு ஒரு எண்ணம், அதாவது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் செல்வந்தர்கள் என. அது தான் மலேசிய தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை புரிந்துகொள்ளாதபடிக்கு செய்கிறது. மலேசியாவில் இந்தியர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள். மலேசிய அரசாங்கம் ‘பூமி புத்திரர்கள்’ என்னும் கொள்கையை பின்பற்றுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினில் மலாயா மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதே நாட்டின் குடிமகன்களான மலேசிய சீனர்களுக்கு மலேசிய தமிழர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருகிறது இன்று வரை. இதில் சீனர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் வணிகத்தால் கட்டுப்படுத்துவதால் அவர்களை இது பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால் மலேசிய இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தோட்டங்களில் வேலை பார்த்த மலேசிய தமிழர்கள் கல்வி புலம் பெரிதும் இல்லாததாலும், கல்வி புலம் இருந்தும் மேற்கொண்டு படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலும் திசை மாறிப் போகிறார்கள் என்பதே நிதர்சனம்.
மலேசியா, Golden Triangle என்று சொல்லப்படும் பர்மா, தாய்லாந்து, லாவோஸ் என்னும் நாடுகளுக்கு அருகே உள்ளது. பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் தங்கள் வருமானத்திற்காக கஞ்சா பயிரிட்டு, அதன் வழி போதை மருந்துகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர். இவர்களைத் தவிர மற்ற குழுக்களும் போதை மருந்தினை உற்பத்தி செய்து வருகின்றது. அதன் அளவு எத்தகையது என்றால், உலகின் கணிசமான சதவிகித போதை மருந்துகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மலேசியாவே போதை மருந்து உற்பத்தி கேந்திரமாக உருமாற்றியும் வருகிறது. வேலைவாய்ப்பில்லாத பலர் போதை மருந்து வணிகத்தில், கேங்குகளின் (Number Gangs) வாயிலாக சேர்ந்துகொண்டுவிட்டனர். சமீபத்திய கணக்கெடுப்பு, இக்கேங்குகளில் 71 % சதவிகித பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது. இதோடு தான் கபாலி படத்தின் பின் கதையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மலேசிய மக்கட்தொகையில் வெறும் 7 முதல் 9 சதவிகிதமே இருக்கும் மலேசிய இந்தியர்கள் எவ்வாறு கேங்குகளில் 71 % சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை ஆராய ஆரம்பித்தால் மலேசிய இந்தியர்களும் அவர்களுள் பெரும்பான்மையான மலேசிய தமிழர்கள் படும் அல்லல்களும் விளங்கும். இந்த புரிதல் இருந்தால், கபாலி படத்தின் கடைசி சீனில் மாணவர்கள் பேசும் உரையாடல் தெள்ளென விளங்கும். இந்தியர்கள் தங்கள் தோலின் நிறத்தால், இந்தியர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஒதுக்கப்படுவதையே பேசுபொருளாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம். அதோடு எவ்வாறு ஒடுக்கப்பட்ட நிலையினிலும் மலேசிய தமிழ் சமூகத்துள் சாதி, வர்க்க பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது என்ற அரசியலையும் பேசுகிறது .
மேலும் இந்த திரைப்படத்தில் வரும் வன்முறை நிஜமாகவே நிகழுமா, ஒரு கேங் தலைவன் இறந்தால் ஊரில் ஊர்வலம் நடத்துவார்களா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. நிஜம் பலநேரங்களில் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் (யுடியூபில் funeral for gang 36 என்று தேடிப் பார்க்கவும்). மேலும் இது போன்ற கேங்குகளை எவ்வாறு அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதற்கு இந்த படமே ஒரு உதாரணம் தான். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று கேங்குகளை ஒன்றுக்கொண்டோடு சண்டையிட்டுக்கொள்ள வைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதும் ஒரு வகை நிர்வாக தந்திரமே, உலகம் முழுவதும்.
ஆக, எல்லைகள் கடந்த தமிழ் சமூகத்தின் கதைகளை தமிழ் திரைப்பட உலகம் கவனிக்க ஆரம்பித்ததன் முதற் படி தான் கபாலி. தமிழ் பேசும் மக்கள் இந்தியா தவிர்த்து மலேசியா, சிங்கை, சிறீலங்கா, தென் ஆப்ரிக்கா, மொரீசியஸ், செய்செல்ஸ் போன்ற நாடுகளில் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்றனர். இத்தனை ஆண்டு காலம் நமது மண்ணின் கதைகளான பருத்திவீரன், தேவர் மகன், மறுமலர்ச்சி, சின்ன கவுண்டர், புதுப்பேட்டை போன்ற படங்களை ஆதரித்து வந்த மலேசிய தமிழ் சமூகத்தின் கதையினை நாமும் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம், இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் கசப்பான உண்மை, ரப்பர் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களின் கையறு நிலை, அவர்களை நிர்கதியாக்கிய அரசாங்கத்தின் பூமிபுத்திரர் கொள்கை அதனோடு இனம் சார்ந்த ஒடுக்குமுறை.
இது ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் கதையென்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இத் திரைப்படத்தை காணுவதென்பது நமது சகோதரர்களை, எல்லை கடந்த தமிழ் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே காண்கிறேன் .
ஒரு நிஜ பிரச்னையை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்குமுறையை மிக தைரியமாக எடுத்ததற்காகவே ரஜினி அவர்களுக்கும், பா . இரஞ்சித் அவர்களுக்கும் ஒரு உலக தமிழனாய் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது நாள் வரை நான் அறிந்த இந்த சரித்திரம் இன்று தமிழ் பேசும் ஒவ்வோர் வீடுகளிலும் உலகம் அதிரும் பறையிசையாய், போர்முரசாய் ஒலிப்பதற்கு வினையூக்கியாய் இருந்த கபாலிக்கு என் நன்றிகள்.
ஜெயநாதன் கருணாநிதி, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்.  /thetimestamil.com

கருத்துகள் இல்லை: