பிரசன்னாவிடம் பேசினோம். " ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள், இளம் அரசியல் தலைவர்களின் தீவிரமான செயல்பாடுகளைக் கவனித்து வருவார்கள். பேச்சு, எழுத்து, விவாதம் போன்றவற்றில் அவர்கள் செயல்படும் தன்மையைப் பொறுத்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பார்கள். இந்தமுறை நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து என்னுடைய அரசியல் பணி, வெளிப்படையான நிர்வாகம் குறித்த பார்வை ஆகியவை குறித்து ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார்கள். அரசியல் பாதையைத் தேர்வு செய்தது குறித்து விரிவாக அவர்களிடம் விவாதித்தேன். இறுதியாக நான் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்தது.
ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் மாநாடு தொடங்க இருக்கிறது. அட்லாண்டா, கொலம்பியா, வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் பயணம் செய்ய இருக்கிறேன். அங்குள்ள அரசு நிர்வாகங்கள் செயல்படும் விதம், வெளிப்படைத்தன்மையை வளர்த்தெடுக்கும்விதம் போன்றவற்றைப் பார்வையிடவும் அனுமதி அளித்துள்ளனர். நம்முடைய அரசாங்கத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையில் அரசு நிர்வாகங்கள் செயல்படும் தன்மையைப் பற்றியும் விரிவாகப் பேச இருக்கிறேன்" என்றவர், " இதுகுறித்து தலைவர் கலைஞரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம், ' இதுபோன்ற அழைப்புகள் நம்முடைய கழகத்தைச் சேர்ந்தவருக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக பேசிவிட்டு வா' என வாழ்த்தினார். பொருளாளர் ஸ்டாலினும் வாழ்த்தினார். எந்த ஓர் அரசியல் பின்புலமோ பணபலமோ இல்லாமல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்நாட்டு அரசின் வெளிப்படையான நிர்வாக அமைப்புகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியோடு.
-ஆ.விஜயானந்த் விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக