ஞாயிறு, 24 ஜூலை, 2016

3 சீன பத்திரிகையாளர் வெளியேற உத்தரவு


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு பனிப்போராக நடந்து கொண்டிருந்தாலும் வெளிப்படையான மோதல்கள் எதுவும் எண்பதுகளுக்குப் பின்னர் இல்லை. ஆனால், சீனாவில் இருந்து திபெத்தை தனிநாடாக உருவாக்க போராடும் தலாய்லாமாவுக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா தஞ்சமளித்து, திபெத்தின் நாடு கடந்த அரசை அங்கு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் வழங்கியுள்ள நிலையில், சீனா இதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் சீனாவின் தலையீடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இந்தியா மூன்று சீனா பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்தி ஏஜென்சியான ‘சின்குவா’வின் செய்தியாளர்களாக மூன்று சீனப் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பணி செய்து வருகின்றனர். அச்செய்தி நிறுவனத்தின் டெல்லி தலைமை செய்தியாளர் வூ கியாங், அவருடன் பணியாற்றி வந்த லூ டாங், யான்காங் ஆகிய மூவரும் வருகிற 31ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை மற்றும் குடிவரவு, குடியகர்வு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மூன்று பத்திரிகையாளார்களின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் கொண்ட இந்திய உளவு அமைப்பு இவர்களை கண்காணித்தது. பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் இந்த மூவரின் நடவடிக்கைகளும் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரியிருந்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அந்த மூன்று பத்திரிகையாளர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க ஆறு ஆண்டுகள் விசா நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. அதை இப்போது ரத்து செய்திருக்கும் அரசு இவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. சீன ஊடகவியலாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதன்முறை.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: