ஞாயிறு, 24 ஜூலை, 2016

தேவர் மகன் வரிசை படங்களும் சாதிப் பற்றும்

thiruttusavi.blogspot.com : இம்மாத உயிர்மையில் சுரேஷ் கண்ணன் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியிருக்கிறார். மேலே உள்ள தலைப்பு தான் விவாத விசயம். தேவர் மகனுக்கு முன்னும் பின்னும் ஏராளமான படங்கள் அச்சாதியின் அருமை பெருமைகளை பறைசாற்றியும் வன்முறையை போற்றியும் வந்துள்ளன. கௌண்டர்கள், நாடார்களை விதந்தும் படங்கள் வந்துள்ளன என்றாலும் கோடம்பாக்கத்தின் பிரதான விசுவாசம் தேவர்களுக்கே. இதில் நாம் கூச்சப்பட ஒன்றும் இல்லை. சமூகத்தில் என்னமாதிரியான நம்பிக்கைகள் உலவுமோ அதுவே அதிகாரமாகி சினிமாவின் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கும். கடந்த இருபது வருடங்களில் முக்கியமான மந்திரிப் பதவிகளை வகித்தவர்கள் யாரென பார்த்தாலே சினிமாவில் உள்ள சாதிய ஆதிக்கவாதம் ஆச்சரியமளிக்காது.


கேரள சினிமாவை பின் தொடர்பவர்களுக்கு அங்கு பெரும் வெற்றி பெற்றுள்ளவை நாயர்களையும் சிரியன் கிறித்துவர்களையும் விராதிவீரர்களாய் சமூக காவலர்களாய் முன்வைக்கும் படங்கள் என தெரியும். மோகன்லாலின் மிகப்பிரபலமான பாத்திரங்கள் மீசை முறுக்கிய முகமும் ஏதாவது ஒரு நாயர் பெயரும் நிச்சயம் கொண்டிருக்கும். நாயர்கள் தமிழ் சினிமாவில் எவ்வாறு நேர்மாறாய் வேடிக்கையாய் சித்தரிக்கப்படுகிறார்கள் என யாராவது ஆய்வு செய்தால் சுவாரஸ்யமாய் இருக்கும். ஆனால் தேவர்கள் மலையாள சினிமாவிலும் மீசை மண்நோக்காத கௌரவத்துடன் தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.

;மலையாள சினிமாவில் சாதிய சித்தரிப்பை குறிப்பிட்டதன் நோக்கம் ஒரு முற்போக்கு இடதுசாரி பாரம்பரியம் கொண்ட சமூகம் எப்படி நம்மை விட வெளிப்படையாய் சாதிப்பெருமையை பேசுகிறது என சுட்டத் தான்.

சரி இங்கு ”மெட்ராஸ்” போன்ற தலித் வாழ்வியல் படங்கள் வரும் போது என்னாகின்றன? அப்படம் சுயசாதி விமர்சனத்தை மையமாய் கொண்டது. ஆனால் நம் விமர்சகர்கள் அதில் வரும் தலித் அரசியல்வாதிகள் யார் என ஆராயாமல் தலித் வாழ்க்கை பேசப்பட்டு விட்டது, அதுவே முற்போக்கானது என ஆளாளுக்கு கொண்டாடத் துவங்கினர். அதாவது தலித் சாதி விமர்சனத்தையும் நாம் இருட்டடிப்பு செய்தோம். இந்த சிக்கலைத் தான் சுரேஷ் கண்ணன் “தேவர் மகனை” முன்வைத்து பேசுகிறார்.

தேவர் மகனில்” கமல் பாத்திரம் தன் சாதியின் வன்முறை இச்சையை, மூடப்பெருமைகளை தாங்க முடியாமல் தப்பித்து ஓட நினைப்பவர். அதன் பிறகு தன் சாதியை சீர்திருத்தும் நோக்கில் மீசை வளர்த்து சாதித்தலைவராய் வேடம் புனைகிறார். அப்போது தான் அது அத்தனை சுலபம் அல்ல என புரிந்து கொள்கிறார். வன்முறை ஒரு மோகினிப் பேயாய் அவரை தூண்டி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அவர் கையிலும் ரத்தம் தோய்கிறது. நவீன கல்வி கற்றவர் சாதிக்காய் ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு போகிறார். இதில் உள்ள விமர்சனத்தை கவனிக்காமல் ஏன் இப்படம் தேவர் சாதி அருமைபெருமைகளை கொண்டாடியதாய், அதன்மூலம் வன்முறையை நியாயப்படுத்தியதாய், கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தில் நடந்த சாதிய வன்முறைகளுக்கு இப்படமே மையம் என கூறுகிறோம் என சுரேஷ் கண்ணன் வினவுகிறார்.

எனக்கு சுரேஷ் கண்ணனின் கேள்வி பழைய “பிட்” படங்களை நினைவுபடுத்தியது. அப்படங்களில் தீவிரமான ஒழுக்கவியல் பாடங்கள் அறிவுறுத்தப்படும். அன்பும் கருணையும் மிதமான உணர்வுகளும் முக்கியம் என்று கூட பேசப்படும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் செக்ஸ் உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் இருக்கும். ஒரு பக்கம் கெட்ட காரியங்களை பண்ணக் கூடாது என பேசியபடியே காட்சி அமைப்பு, இசை, குளோ அப் ஷாட்கள் எல்லாம் இந்த காரியங்கள் எவ்வளவு கிளுகிளுப்பானவை என நமக்கு உணர்த்தியபடியும் இருக்கும். இந்த படங்கள் பாலியல் மீறலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பவை. அதேவேளை பாலியல் மீறல் நோக்கி நம்மை தூண்டுபவையும் தான்.

தேவர் மகனும்” அதன் வாரிசான சமீபத்தைய “மருது” வரையிலான படங்களும் நேரடியாய் சாதிய வன்முறையை அறிவுறுத்த வேண்டியதில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு சாதிப்பெருமைக்காய் தலைகளை சீவுவதே பெருமை என ஒரு புரிதல் இவற்றில் இருந்து கிடைப்பதையும் நாம் மறுக்க முடியாது. ஒரு படம் நேரடியாய் சொல்லுவது தான் அதன் சேதி என்று அர்த்தமில்லை. வணிக சினிமாவின் அழகியலே “கெட்டகாரியங்களை” செய்வதன் சாத்தியங்களை பரிசீலித்து விட்டு, அதைப் பற்றி கற்பனை செய்ய அனுமதித்து விட்டு, நேரடியாய் கெட்டகாரியங்களை கண்டித்து பேசுவது தான். எல்லா வணிக படங்களுக்கும் இந்த ரெட்டை முகம் உண்டு.

தேவர் மகனுக்கும்” உண்டு. மிக நுணுக்கமாய் சாதிய பெருமையை பேசவும் அதை கண்டிக்கவும் செய்கிறது அப்படம். வன்முறையை கடுமையாய் விமர்சித்தபடி அதை உள்ளூர சிலாகிக்கவும் செய்கிறது. ”சாந்துபொட்டு” பாடலில் வரும் வீரவிளையாட்டுகள், கமல் கௌதமியின் உதட்டை கவ்வுவதில் உள்ள வன்மம் வழி வன்முறையே உயரிய ஆண்மை எனும் பிம்பம் அப்படத்தில் கட்டமைக்கப்படுகிறது. இறுதியில் நாசரை கமல் கொல்லும் காட்சியில் ரத்தத்தில் குளித்த நாயகனின் உருவம் ஒரே சமயம் ஆண்மை மிக்கதாகவும் தேவையற்ற வன்முறையின் எதிர்மறை பிம்பமாகவும் உள்ளது.

இந்த சாதிய வன்முறை படங்களை நாம் பாலசந்தரின் பாலியல் மீறல் படங்களுடன் ஒப்பிடலாம். “புதுப்புது அர்த்தங்கள்” பாலியல் மீறல் எவ்வளவு இயல்பானது என்றும், ஆனால் சமூக கட்டமைக்குக்கு கேடானது என்றும் முரண்பாடாய் பேசுகிறது. பாலசந்தர் படங்களின் டெம்பிளேட் “பிட்” படங்களில் இருந்து அழகியல்ரீதியாய் சற்று மேலானது என்றாலும் பெரிய அளவில் வேறுபட்டது அல்ல.

ஒரு கலைப்படம் அல்லது இலக்கிய படைப்பு கூட இன்று ஒரு குறிப்பிட்ட சேதியை கொண்டிருப்பதில்லை என விமர்சகர்கள் பேசுகிறார்கள். இதை polyphonic writing என இலக்கியத்தில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த உதாரணம் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”. அதில் ஊனமுற்றோருக்கு இடையிலான உரையாடல்களின் ஊனமுற்ற உடல் மீதான காழ்ப்புணர்வை காண முடியும். அதாவது ஊனமுற்றோரே ஊனமுற்றவர்களை ஒடுக்குவதை கவனிக்கலாம். அந்த நாவலை உடல் வணிகத்தை கடுமையாய் விமர்சிக்கும் நாவல் என பேசும் போதே உடலைக் கொண்டு மனிதர்களை அடையாளப்படுத்துவதை அங்கீகரிக்கும் குரலையும் அதற்குள் பார்க்க முடியும். இதில் எது ஜெயமோகனின் குரல்? எதுவும் இல்லை.

சுரேஷ் கண்ணனின் கேள்வி முக்கியமானது. வன்முறையை விமர்சிக்கும் படத்தை ஏன் அதை ஆதரிப்பதாய் கூறுகிறோம்? அதற்கான என் பதில் இது

ஒரு படம் இரு முரண்பாடான நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். அதில் நமக்கு வசதிப்படுகிற ஒன்றை நாம் எடுத்துக் கொள்ளலாம். ”தேவர்மகனில்” பிற்போக்காளர்கள் தேவர் பெருமிதத்தை மட்டும் கண்டார்கள். “மெட்ராஸில்” முற்போக்காளர்கள் தலித் அரசியல் பெருமிதத்தை மட்டும் கண்டார்கள். தோள் கண்டார் தோளே கண்டார். சுயவிமர்சனத்தை கண்டிலர்.  

கருத்துகள் இல்லை: