ஜெ. பாலசுப்ரமணியம்
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டையொட்டி எப்போதும்
இல்லாத அளவுக்கு அவரின் கருத்துகள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச
அளவிலும் கவனத்தைப் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற
அம்பேத்கர் குறித்த இரண்டு சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு
அங்குள்ள பல அம்பேத்கரியவாதிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து சிலவற்றைப்
பகிர்ந்துகொள்கிறேன்.
அம்பேத்கரின் நூறாவது (1990) ஆண்டுதான் தலித்துகளின் எழுச்சிக் காலம். இதற்கு மாநில அளவிலான தலித் இயக்கங்களின் தீவிரமான போராட்டங்கள், அம்பேத்கரின் எழுத்துகள் அச்சுக்கு வந்தமை, தன்னார்வக் குழுக்களின் மனித உரிமை முன்னெடுப்புகள் போன்றவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.
அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளில் தலித் மக்களில் சொற்ப எண்ணிக்கையினர் மத்தியில் சமூக, பொருளாதார நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பெரும்பான்மையான தலித் மக்களை இந்தியச் சமூகம் இன்னமும் அப்படியே வைத்துள்ளது. உலகமயமாக்கல் சூழலில் உழைக்கும் அனைத்து மக்களும் ஒடுக்கப்பட்டாலும், விகிதாச்சார வளர்ச்சியில் பார்த்தால் தலித்துகளின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. சிறு குறு வியாபாரங்களில் தலித்துகள் நுழையமுடியவில்லை. தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவது சாதியை மறைத்தால் மட்டுமே சாத்தியம். பொதுச் சமூகத்தோடு கலக்க முயலும்போது – பொதுக் கோயில் திருவிழாக்களில் மரியாதையான சடங்குகளைச் செய்ய விரும்பும் போதும் பொது மயானப் பாதையைப் பயன்படுத்தும்போதும் – தலித்துகள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் அதை அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் சமூகப் பழக்க வழக்கங்களாக எடுத்துக்கொள்வதும் கடந்த கால அனுபவங்களாக உள்ளன. இந்தச் சூழலில்தான் அம்பேத்கரின் கருத்துகளை அவரின் 125வது பிறந்த ஆண்டில் சர்வதேசச் சமூகம் விவாதத்திற்கு எடுத்துள்ளது.
அம்பேத்கர் தனது முதுகலைப் பட்டத்திற்காக ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் மானுடவியல் கட்டுரையைச் சமர்ப்பித்ததும், (1916இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்கு இது நூற்றாண்டு) பின்பு 1927இல் பொருளா தாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதும் நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகமாகும். இதன் நினைவாக அந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ‘அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷன்’ என்ற அமைப்பு இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்தது. அம்பேத்கர் குறித்த மற்றொரு கருத்தரங்கு அமெரிக்க பாஸ்டன் மாகாணத்திலுள்ள பிராண்டைஸ் பல்கலைக் கழகத்தில் (Brandeis University) நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குகளில் ஹார்வார்ட், டியூக், யேல், பாஸ்டன், இண்டியானா, தைவான், ஆக்ஸ்போர்ட் இந்தியா போன்ற பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்வியாளர்களும் செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். இதுவே முதன்முறையாக அம்பேத்கரின் கருத்துகளைச் சர்வதேச அளவில் பொருத்திப் பார்க்கும் அரங்குகளாக நான் கண்டேன்.
தலித்துகளும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும்
முதலில் சாதிப்பாகுபாடு, இனப்பாகுபாடு என்கிற வெவ்வேறு சமூகப் பாகுபாடுகள், அனுபவங்கள் இணைகிற – விலகுகிற புள்ளிகளே பெரிதும் விவாதிக்கப்பட்டன. சாதியும் இனமும் பிறப்பையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இறப்புவரை அது மறைவது இல்லை. தலித்துகளும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தேசிய உருவாக்கத்தில் நீக்ரோக்கள் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் குறிக்கப்பட்டு (Marked people) இரண்டாம்தரக் குடிகளாக்கப் பட்டனர். குறிக்கப்படாதவர்கள் (Unmarked people) சுதந்திரதேசத்தின் ‘பொது’ ஜனங்களாயினர். அவர்களே தேசத்தின் அனைத்து நலன்களையும் அனுபவிப்பவர்களாயினர். தலித்துகளும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தோலின் நிறத்தால் மட்டுமே ஒடுக்கப்படவில்லை; அவர்களுக்கு எதிரான கருத்தும் கட்டமைக்கப்பட்டது. அந்தக் கருத்து என்னவென்றால் அவர்கள் திறமையற்றவர்கள், தகுதியற்றவர்கள். அதுதான் இன்றளவும் பொதுப் புத்தியைப் பிடித்து ஆட்டுகிறது. மேலும் இரு சமூகமுமே சொந்த தேசத்திலே அடிமைகளாக்கப்பட்டன. தேசத்தை ஒடுக்கிய காலனியர்களைத் துரத்த முடிந்தது; ஆனால் இவர்களை ஒடுக்கிய காலனியர்களை எங்கும் துரத்த முடியவில்லை. மாறாக ஒடுக்குதலை நிகழ்த்தியவர்களே நவீன சுதேசிய அரசை இயக்குபவர்களானார்கள். தலித்துகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான பண்பாடு, வரலாறு என்று எதையுமே கோர முடியவில்லை. இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தும் சில வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் தோற்றத்திலேயே கண்டுகொள்ள முடியும்; (தோற்றத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் இருக்கிறார்கள்.) சாதியை அவ்வாறு கண்டுபிடிக்க இயலாது. ஆனால் இங்கே யதார்த்தம் என்னவென்றால் ஒருவரின் சாதியைத் தெரிந்துகொள்ளாமல் யாரும் வாடகைக்குக்கூட வீடு தருவதில்லை. கிராமங்களில் எந்த ஊர், எந்த தெரு என்ற கேள்விகளுக்குப் பின்பே பேருந்துப் பேச்சுகள்கூட ஆரம்பிக்கின்றன. இவ்வளவு அன்றாட ஒடுக்குமுறைகள் இருந்தும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தலித்துகளும் போராட்டம், இலக்கியம், கலை, இசை ஆகியவற்றின் மூலம் தங்களுக்கென ஒரு அடையாளத்தைத் தேர்தெடுத்துக்கொண்டனர்.
டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் கிங்கும்
இங்கு ரசிக்கத்தக்க முரண் என்னவென்றால், காந்தியின் அஹிம்சையை ஏற்றுக்கொண்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரையும் காந்தியுடன் பெரும் கருத்துப்போர் புரிந்த டாக்டர் அம்பேத்கரையும் இணைத்துப் பார்ப்பது தான். ஒடுக்குதலிலிருந்து கல்விதான் தங்கள் மக்களைக் காப்பாற்றும் என்று இருவருமே நம்பினர். அதற்கு அவர்கள் தங்களையே உதாரணமாக்கினர். ஆம் இருவருமே டாக்டர் பட்டம் பெற்றவர்கள். தலித்துகள் பொதுப்பள்ளிக்குள் நுழைய முடியாத காலத்தில் வாழ்ந்த அம்பேத்கர், இராணுவத்தில் அவரின் தந்தை பணியாற்றியதன் மூலம் கல்வியைப் பெற முடிந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சில ‘உயர்ந்த’ பள்ளிகளில் (Flagship Schools) நுழையத் தடை இருந்தது. ஆகவே கிங் கருப்பர்களுக்கென்று உருவாக்கப்பட்ட HBCU (Historically Black Colleges and Universities) பள்ளியில் சேர்ந்து படித்தார். அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்றார்; கிங், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்; பொது நீராதாரங்களில் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்பேத்கரின் முதல் சவுதார் குளப் போராட்டம் நீருக்கானதாக இருந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் சில குறிப்பிட்ட ஊற்றுகளில் மட்டுமே நீரெடுக்க வேண்டும் என்றது அமெரிக்காவின் ஜிம் குரோஸ் சட்டம். அமெரிக்காவின் ‘சம உரிமைச் சட்டம் 1866 மற்றும் 1875’ தண்ணீர் எடுப்பதில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குச் சமஉரிமை இருக்கிறது என்கிறது. ஆனால் 2015இல் மிஷிகன் மாகாணத்தின் கவர்னர் ஒரு கார் கம்பெனிக்கு நன்மை செய்யும் பொருட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு நச்சு கலந்த குடிநீரை வழங்கினார். ‘இந்தியச் சட்டம் 1955’ தீண்டாமை ஒரு குற்றம் என்கிறது; ஆனால் தீண்டாமைக் கொலைகள் (சாதி ஆணவக் கொலைகள்) நடக்கும்போது சுட்டிக்காட்டினால் அதைச் சட்டம் ஒழுங்கினால் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம் அதுபோன்ற சம்பவங்களைத் தனிப்பட்ட மோதல், முன்விரோதம் என்றெல்லாம் பெயர் மாற்றித் தனது கண்களை மூடிக்கொள்கிறது.
2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை டர்பனில் இனப்பாகுபாட்டிற்கு எதிரான சர்வதேச மாநாட்டைக் கூட்டியபோது, சாதியப் பாகுபாட்டையும் அதில் சேர்க்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சாதி என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை, அதைச் சர்வதேச அரங்கில் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அப்போதைய இந்திய அரசாங்கம் மறுத்தது. இதைக் கண்டித்து சமூகவியல் அறிஞர் ஆண்ரு பெத்தல் அம்மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து விலகினார் என்பது வரலாறு. ஆனால் ‘அம்பேத்கர் 125’ சாதிப்பாகுபாட்டைச் சர்வதேச சமூகத்தில் எழுப்பியிருப்பது கவனம் கொள்ளத்தக்க ஒன்று. முதன்முறையாக ஸ்காட்லாந்த் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ‘அம்பேத்கர் 125’ஐ முன்னிட்டு ஏப்ரல் மாதம் முழுதும் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் 15 மாகாணங்களில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கரின் கருத்துகள் சர்வதேசச் சமூகத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பதை உணர்த்துகின்றன.
அமெரிக்க அம்பேத்கரிஸ்டுகள்
அமெரிக்க அம்பேத்கரிஸ்டுகள் மூன்று வகைப்பட்ட வர்களாக இருக்கின்றனர். கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து குடியேறிய முதல் தலைமுறை தலித்துகள்; அடுத்து, அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற முதல் தலைமுறையின் வாரிசுகள்; மூன்றாவது, கடந்த பத்து வருடங்களில் குடியேறிய மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள். நான் கவனித்ததில் அமெரிக்க அம்பேத்கரிஸ்டுகள் மஹாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் கடந்த சில வருடங்களாகப் பல அமைப்புகளின் கீழ் (International Ambedkar Mission, Ambedkar Association of North America, Ambedkar International Centre) அம்பேத்கர் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்று திரண்டு இந்தியாவில் நடக்கும் சாதியப் பிரச்சனைகளைச் சர்வதேசச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றனர். உதாரணமாக, ரோஹித் வெமுலா மீதான வன்கொடுமையைக் கண்டித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாதிப் பாகுபாடு விசயத்தில் சர்வதேசத் தலையீடு கோரி ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் கலிபோர்னியா மாகாணப் பாடப்புத்தகத்தில் இந்திய வரலாறு, சமூக அறிவியல் குறித்து பிராமண, உயர்சாதி இந்துக்களுக்கும் அம்பேத்கரியவாதிகளுக்கும் நடக்கும் போராட்டம் அமெரிக்கவாழ் இந்தியர் மத்தியில் இருக்கும் சாதியைப் புரிந்துகொள்ள உதவும். கலிபோர்னியா மாகாணத்தில் லி.ரி.நி. முதல் 12ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் வரலாறு, சமூக அறிவியல் பாடத்திட்டங்கள் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மறுமதிப்பாய்வு செய்து தரப்படுத்துகிறது. இந்த மறுமதிப்பாய்வுக்குப் பொதுமக்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டு கணக்கிலெடுத்துக் கொள்கிறது. கலிபோர்னியா டெக்ஸாஸ் மாகாணப் பள்ளிப் பாடத்திட்டங்கள்தான் அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. ஆகவே இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு பிராமண, உயர்சாதி இந்து அமைப்புகள் (The Hindu American Foundation, the Hindu Education Foundation, The Uberoi Foundation, California Hindus Organisation) இந்து மதத்தின் சாதி அமைப்பில் தீண்டாமை என்பதும் ஒதுக்கிவைத்தலும் கிடையாது, சாதி பாலியல் ரீதியான பாகுபாடும் கிடையாது, இந்து மதம் என்பது சிந்துசமவெளி நாகரிகக் காலத்திலே தோன்றிய பழமையான மதம், சீக்கியமதம் என்பது ஒரு தனி மதமல்ல, அது இந்துமதத்தின் ஒரு பிரிவுதான் என்பன போன்ற வரலாற்றுத் திரிபுகளைப் பாடத்திட்டத்தில் புகுத்திடும் நோக்கில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதையே கலிபோர்னியா மாகாணத்தின் கல்வித்துறைக்கு (Curriculum Frameworks and Instructional Resource Division) இந்து அமைப்புகள் வலியுறுத்தியும் வருகின்றன. இதில் Hindu American Foundation உலகளாவிய வலைப்பின்னலையும் பெரும் நிதி ஆதாரத்தையும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் ஆதரவைப் பெற்ற ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதிய Breaking India (தமிழில் இது ‘உடையும் இந்தியா’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது) என்ற புத்தகத்தின் அடிப்படை வாதமே இஸ்லாமியர்களைப்போல தலித்துகளும் இந்தியாவைத் துண்டாடப் பார்க்கிறார்கள் என்பதேயாகும். இந்த வரலாற்றுத் திரிபு முயற்சியைக் கண்டித்து அமெரிக்க அம்பேத்கரிஸ்டுகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சனை அமெரிக்க அரசு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்கவாழ் தலித்துகளிடம் சாதியப்பாகுபாட்டைப் பின்பற்றக்கூடிய சனாதன பிராமணர்கள் இந்தக் கோரிக்கையை வைப்பதுதான் வேடிக்கையாக உள்ளது என்கிறார் இதுகுறித்து செயல்பட்டுவரும் அமெரிக்க அம்பேத்கரிஸ்ட் சுத்தமல்லி கங்கா. இந்துமதம் தனது கோட்பாடுகளிலேயே கொண்டிருக்கும் ஒடுக்குதல்களை மறைத்து அது ஒரு ஜனநாயகமான மதம் எனும் கருத்தை அமெரிக்கர்கள் மத்தியில் உருவாக்க முயலுகின்றனர். ஆனால் இந்த வரலாற்றுத் திரிபை முறியடிப்போம் என்கின்றனர் அமெரிக்க அம்பேத்கரியவாதிகள். இதைப் பார்க்கும்போது அம்பேத்கர் தனது பி.பி.சி வானொலி பேட்டியில் (1955) காந்தியை விமர்சித்ததை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. “காந்தி நடத்திய ஆங்கில ஹரிஜன் பத்திரிகையில் அவர் சாதியை எதிர்ப்பவர்போல தெரியும். ஆனால் குஜராத்தி ஹரிஜன்பந்து பத்திரிகையில் அவர் முழுக்கமுழுக்க வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து எழுதினார். இந்த முரண்பாட்டிற்குக் காரணம் பிரிட்டிஷார் மத்தியில் தன்னை ஜனநாயகவாதியாகவும், இந்துக்கள் மத்தியில் வர்ணாசிரமம் காப்பவராகவும் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே.” இதைத்தான் அமெரிக்காவிலும் இன்று பின்பற்றுகின்றனர்.
கட்டுரையாளர், உதவிப்பேராசிரியர், இதழியல் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
மின்னஞ்சல்: balumids@gmail.com
இந்தக் கட்டுரை காலச்சுவடு இதழில் பிரசுரமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக