சனி, 30 ஜூலை, 2016

தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமணத்தில் அழகிரி ஸ்டாலின் கண்ணாமூச்சி?

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ‘எந்த கட்சிக்கு வேணாலும் ஓட்டுப் போடுங்க… தி.மு.க-வுக்கு வாக்களிக்காதீங்க..!’ என்று உத்தரவு போட்ட  மு.க. அழகிரி, இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்? ஒரு காலத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பரபரப்பாக கலந்து கொண்டவர், இப்போது காதுகுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மஞ்சள் நீராட்டு விழாவிலும் மறக்காமல் கலந்து கொள்கிறார். மதுரையில் மொய் வசூல் செய்வதற்காக ‘இல்ல விழா’ என்றொரு நிகழ்ச்சி நடத்துவார்கள். சமீபத்தில் தனது ஆதரவாளர் நடத்திய இல்ல விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார். கடந்த  10-ம் தேதி, தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் சரயுக்கும், காங்கிரஸ்  தலைவர்களின் ஒருவரான என்.எஸ்.வி. சித்தன் பேரனுக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது.

முதல்நாள் நடந்த நிச்சயதார்த்த விழாவுக்கு மாலை ஆறுமணிக்கே சென்று  ஆஜரானார், அழகிரி. மணமகள் சரயுக்கு வரவேண்டிய நிச்சயதார்த்த புடவை வருவதற்கு காலதாமதம் ஆனது. இரவு எட்டு மணிவரை மேடையிலேயே அமர்ந்து இருந்த அழகிரி, அதன்பின்பே புறப்பட்டுச் சென்றார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து தனது மனைவி துர்காவுடன் முதல்நாளே புறப்பட்டுச் சென்றார், மு.க. ஸ்டாலின்.  நிச்சயதார்த்த விழாவில் மனைவியுடன் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த ஸ்டாலினுக்கு, நிச்சய நிகழ்ச்சிக்கு வந்து அழகிரி மேடையில் அமர்ந்திருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டாலின் அந்நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்தார்  தனது மனைவி துர்காவை மட்டும் முதல்நாள் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார்.
மறுநாள் நடந்த கல்யாணத்துக்கு ஸ்டாலின், துர்காவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். வெள்ளுடை வேந்தராக  கல்யாணத்துக்கு புறப்பட்ட அழகிரியிடம், ஸ்டாலின் தனது மனைவியுடன்  திருமண வீட்டில் இருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.  “தி.மு.க-வோட கட்சி நிகழ்ச்சிக்குத்தான் போகாம ஆக்கிட்டாரு ஸ்டாலின். இப்போ கல்யாண வீட்டுலகூட தலைகாட்ட முடியலேயே…” என்று தனது சகாக்களிடம் நொந்துபோய் சொல்லிவிட்டு, கல்யாண மண்டபத்துக்கு செல்வதை தவிர்த்தாராம் அழகிரி.
–  சத்யாபதி
vikatan.com

கருத்துகள் இல்லை: