வியாழன், 28 ஜூலை, 2016

அர்விந்த் கெஜ்ரிவால் மோடியால் கொலை செய்யப்படாலாம் என்று பயப்படுவது ஏன்?

‘மோடி என்னைக் கொலைச் செய்யலாம்’ என்று கெஜ்ரிவால் பத்து நிமிடம் பேசி வெளியிட்ட வீடியோ அகில இந்தியளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினரிடையே பாஜக-வுக்கு எதிரான கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்காக கெஜ்ரிவால் பேசிய அந்த 10 நிமிட வீடியோவில் என்ன இருக்கிறது?
“வணக்கம். ஆம் ஆத்மியின் தொண்டர்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது... நாம் இப்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தான். எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.


ஆம் ஆத்மியை வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் (பிரதமர் மோடி) எந்த எல்லைக்கும் செல்வார். நாம் கொலை செய்யப்படலாம். நான் கூட கொல்லப்படலாம். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் மட்டும் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள். எதையும் தாங்கும் வலு இல்லாதவர்கள் விலகி சென்றுவிடுங்கள். நாட்டின் பிரதமர், கோபத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளத் தொடங்கினால் அது நாட்டுக்கே ஆபத்தாக முடிந்து விடும். ஆம் ஆத்மிக்கு எதிராக கோபத்தில் முடிவுகளை எடுக்கும் பிரதமர், அதே போன்றுதான் பிற விவகாரங்களில் முடிவுகளை எடுத்திருப்பார். இதனால், நமது நாடு பாதுகாப்பான நபரின் கரங்களில்தான் இருக்கிறதா? என்ற கேள்வியெழுகிறது. ஆம் ஆத்மியை நசுக்க வேண்டும் என்பதற்காக சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கு மூளையாக இருப்பவர் மோடிதான். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இரட்டை பதவி வகிப்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களின் பதவியைப் பறிக்கவும் முயற்சி நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? டெல்லி மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் பணிகளை மோடியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, டெல்லி பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியையும் அவர் இன்னும் மறக்கவில்லை என்கின்றனர். இன்னும் சிலர், அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறும் பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு பெருகி வரும் ஆதரவை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர். ஆம் ஆத்மி அரசை முடக்க வேண்டும் என்பதற்காக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை, சிபிஐ, காவல்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், நமது துணிவை அசைக்க முடியவில்லை. நாம் வளைந்து கொடுக்கவில்லை. இதனால், பிரதமர் மோடி கடும் விரக்தியில் இருக்கிறார். அவர் அடுத்து என்ன செய்வார் என்று தெரியாது. ஆட்சிக் கட்டிலில் அமர இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று, நம்மை போல சமூக பணியாற்றி, மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடிப்பது. மற்றொன்று, எதிர்க்கட்சிகளை எப்படியாவது ஒழித்துகட்டிவிட்டு ஆட்சியில் அமர்வது. அதைத்தான், பாஜக இரண்டாவது வழியைத்தான் செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நிலையற்ற வெளியுறவுக் கொள்கைகளால் பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடான இந்தியாவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டுள்ளது” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
‘டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையில் எதிரும் புதிருமான அரசியல் தொடங்கிவிட்டது. ஆம் ஆத்மியின் வளர்ச்சி, பாஜக-வின் செல்வாக்கு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கருதும் பாஜக தொடர்ந்து ஆம் ஆத்மியை பல்வேறு இடங்களில் அட்டாக் செய்கிறது. கோவா, பஞ்சாப் தேர்தலில் களமிறங்குவது, கெஜ்ரிவாலின் வீடியோ உரையாடல், மக்களிடம் நேரிடையாக பேசுவது, ஊழல் ஒழிப்பு என்பதை முன்வைத்து மக்களை கவர்வது போன்றவை பாஜக-வின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. அதுவே ஆம் ஆத்மிக்கு எதிரான எதிர்ப்பை தீவிரப்படுத்துகிறது’ என்கின்றனர் ஆம் ஆத்மியினர்.
இந்நிலையில் கெஜ்ரிவால் வீடியோவுக்குப் பதிலடியாக பாஜக தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் கண்டிக்கத்தக்கவை. வெட்க கேடான கருத்துகளை அவர் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராகவும், நன்னடத்தைகள் குறித்தும் பேசும் அவர், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட தனது கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? சட்ட விதிகளை மீறுவோர் யாராக இருந்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.
மோடி – கெஜ்ரிவால்… நீயா? நானா? போட்டி கூர்மையடைந்து வருகிறது.   minnambalam.com

கருத்துகள் இல்லை: