வியாழன், 28 ஜூலை, 2016

மலேசியாவில் கபாலி இறுதிகாட்சிகள் மாற்றப்பட்டது... விபரம்

BBC.COM :ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில் வெளியான கபாலியில் மாறுபட்ட கிளைமேக்ஸ் மலேசிய செய்தித்தாளான 'தி மலாய் மெயில்' பத்திரிக்கையில், மலேசியவில் வெளியான கபாலி மலாய் பாதிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுடன் கூடியதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி மானிட்டரிங் பிரிவு தகவல் கூறுகிறது.
கபாலி திரைப்படத்தின் மூல பதிப்பான தமிழில், கபாலி என்ற தாதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த்தை சுட்டுவிடுமாறு ஒரு கதாபாத்திரத்திடம் போலீஸ்காரர் ஒருவர் தூப்பாக்கியை அளிப்பது போல ஒரு காட்சி அமைந்திருக்கும்.
துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த அந்த நபர், கபாலியை நோக்கி விரையும் கணத்தில், கூட்டத்தினரின் கூச்சலுடன் சேர்ந்து ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்துடன், நடந்தது என்ன என்று பார்ப்பவர்களின் யூகத்திற்கு விட்டு விட்டு, திரையில் இருள் சூழ திரைப்படம் முடிந்துவிடும்.

கபாலி இந்திய பதிப்பில் கபாலி உயிரோடு இருக்கிறாரா என்று தெளிவாக தெரியாது.ஆனால், மலாய் பதிப்பில் வெளியான இத்திரைப்படம் திருப்பத்துடன் முடிகிறது. ‘’இறுதியாக போலீசிடம் கபாலி சரணடைந்தார்’’ என்ற வாசகங்கள் திரையில் பளிச்சிட திரைப்படம் முடிவடைகிறது.
மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் அப்துல் ஹலிம் அப்துல் ஹமித் இது குறித்து கூறுகையில், குற்றம் புரிபவர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்ற நீதி பாடத்தை வலியுறுத்தவே மலாய் பதிப்பில் இவ்வாறு முடிவு அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
‘’சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை எடுத்துச் சொல்ல, இவ்வாறு ஒரு வாசகத்தை சேர்க்க நாங்கள் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டோம்’’ என்று ஹமித் தெரிவித்தார்.>திரைப்படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகள்:மலாய் மொழி பதிப்பில், மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், வன்முறை மற்றும் தாதா கலாசாரத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாக வேறு சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நீக்கப்பட்ட காட்சிகளில், மலேசிய போலீஸார் விமானநிலையத்தில் கபாலியை வரவேற்கும் காட்சியும் ஒன்றாகும்.
ஒரு தாதாவை போலீஸார் வரவேற்பது போன்ற காட்சி இது என்பதால், இக்காட்சி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கினாலும், மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் மிக குறைந்த வாய்ப்புகளையே பெறுவதாக கபாலியிடம் ஒரு கதாப்பாத்திரம் பேசும் வசனமும் நீக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அதிகளவில் வாழ்ந்து வரும் மூன்று வம்சாவளியினரான மலாய்,சீனர் மற்றும் இந்தியர்கள் குறித்து இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில தரக்குறைவான சொற்கள் மற்றும் அடைமொழிகள் அடங்கிய வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல காட்சிகள் நீக்கப்பட்டதற்கு, மலேசியாவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், இந்த காட்சிகள் நீக்கப்பட்டது மிகவும் தேவையென ஹமித் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கபாலியின் தாக்கம்:மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான முதல் திரைப்படமான கபாலி, மலேசிய திரைப்படத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கும் என்று இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மாலில் தஸ்தாகீர் தெரிவித்தார்.
பிரபல மலேசிய திரைப்பட நடிகர்கள் சிலர், இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் தோன்றுவதால், மலாய் திரைப்பட ரசிகர்களை இப்படம் கவர்ந்துள்ளது.
மேலும், மலேசியாவில் ரஜினிகாந்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் மலேசியாவில் மிகுதியான ரசிகர்கள் உள்ள ரஜினிகாந்த் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்த போது, அங்கு ரஜினிகாந்த் வந்ததால், அந்நாடே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவை தவிர கபாலியின் மலாய் பதிப்பு, ஜூலை 29-ஆம் தேதியன்று, இந்தோனேசியாவில் 250 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: